கிறிஸ்டி பூட்ஸ் நிறுவனத்தில் நான்காவது நாளாக வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளப்படுகின்றது அரசு பாடசாலைகளுக்கு முட்டை விநியோகம் செய்ததில் முறைகேடு இடம்பெற்றதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளினையடுத்து முட்டை விநியோகம் செய்யும் கிறிஸ்டி பூட்ஸ் எனப்படும் நிறுவனத்தில் இன்று நான்காவது நாளாக வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இயங்கி வரும் கிறிஸ்டி பூட்ஸ் நிறுவனம் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், பாடசாலைகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு தேவையான முட்டைகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்கி வருகிறது.
இந்த நிறுவனம் போலியாக பல கிளைகளை உருவாக்கி அதன் மூலம் பல கோடி ரூபாய் பொய்க்கணக்கு காட்டி வரி மோசடி செய்ததாக முறைப்பாடு கிடைக்கப்பபெற்றதனையடுத்து கடந்த 5-ம் திகதி முதல் கிறிஸ்டி பூட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் உள்பட இந்தியா முழுவதும் 72 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்கின்றனர்.
இதன்போது போலி நிறுவனங்களுக்கான ஆவணங்களும் அது தொடர்பான விபரங்களும் வருமான வரித்துறையினரிடம் சிக்கியதாக கூறப்படுகின்ற நிலையில் நான்காவது நாளாக இன்றும் சோதனை நீடிக்கிறது. இந்த சோதனையின்போது இதுவரை 10 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.