ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற தனது வாக்குறுதியை மோடி நிறைவேற்றுவார் என எதிர்பார்த்ததாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறிப்பிட்டுள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில அரசு பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்ததுடன் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததை கண்டித்து சென்ற முறை பாராளுமன்றத்தை முடக்கிய தெலுங்கு தேச கட்சி, இந்த முறை மோடி அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது.
இதனையடுத்து, சிறப்பு அந்தஸ்து தொடர்பாக பேசிய ஆந்திர மாநில பாரதீய ஜனதா தலைவர், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக மோடி வாக்குறுதி அளிக்கவில்லை எனவும், அதற்கு பதிலாக பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக ராஜ்ய சபாவில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அருண் ஜெட்லி உட்பட பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர்களுடன் ஆலோசித்த பின்பே ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என தாம் வாக்குறுதி அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனக்கு பின்னால் பிரதமராக வருபவர்கள் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என தாம் எதிர்ப்பார்த்ததாகவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.