குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.
கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து மக்களின் போராட்டங்களின் பின் விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் மக்களின் காணிகளுக்கு சுமார் ஒரு வருடங்களின் அங்கு சென்றுள்ள மக்களை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் இன்று (28) சனிக்கிழமை காலை 10 மணியளவில் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு நிலமைகளை அவதானித்துள்ளார்.
முள்ளிக்குளம் மக்கள் கடந்த 18 ஆம் திகதி காலை முள்ளிக்குளம் கிராமத்திற்கு சென்று இன்றுடன் 10 தினங்கள் நிறைவடைகின்றன.இந்த நிலையில் குறித்த மக்களை பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண அமைச்சர், உறுப்பினர்கள் என பல தரப்பினரும் சென்று பார்வையிட்டு அவர்களின் தேவைகளை கேட்டறிந்து வருகின்ற நிலையில் அரச திணைக்கள அதிகாரிகள் யாரும் தங்களை வந்து பார்வையிடவில்லை என்ற கவலையை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் இன்று (28) சனிக்கிழமை காலை 10 மணியளவில் நேரடியாக சென்று மக்களை பார்வையிட்டதோடு முதற்கட்டமாக தற்காலிக கூடாரங்களை அமைக்க தேவையான ஒரு தொகுதி தரப்பால்கள் வழங்கி வைத்துள்ளதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லோறன்ஸ் லியோ தெரிவித்தார்.
மேலும் அங்குள்ள கடற்படை அதிகாரியுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போது அவசர தேவைகளை கருத்தில் கொண்டு தற்காலிகமாக அங்குள்ள நண்ணீர் கிணற்றில் இருந்து குடி நீரை வினியோகிக்க கடற்படை முன் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.