தனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்குப் பலன் அளிக்கும் வகையில், சட்டவிரோதமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இணைப்புகளைப் பயன்படுத்திய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிபிஐ கீழ்நீதிமன்றம் தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவித்ததைத் செல்லாது என்னும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி தயாநிதி மாறன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த மாறன், தன்னுடைய பதவிக்காலத்தில், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, தனது சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும் சன் தொலைக்காட்சி நிறுவனம் பலன் அடையும் வகையில், தனது வீட்டுக்கு அருகே தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு எக்சேஞ்ச் உருவாக்கினார் என சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு எதிராகக் குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை எனக் கோரி விடுவித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிபிஐ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, மீண்டும் வழக்கை நடத்தி ஒரு ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 25-ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், சிபிஐ நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பை உறுதி செய்யக்கோரியும், தயாநிதி மாறன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.