எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் திருகோணமலையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றுள்ளது.
இதன் போது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் அங்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயற்றிட்டங்கள், எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவருக்கு தெளிவுபடுத்தியதாகவும் இந்தச் சந்திப்பு, ஆக்கபூர்வமாக அமைந்திருந்ததாகவும், இருவரும் இணைந்து கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போது தெரிவித்துள்ளனர்.
651 தொண்டராசிரியர்களுடைய பெயர்ப் பட்டியல், மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பப்படவுள்ளதாக தெரிவித்த ஆளுனர் தன்னுடைய பதவிக் காலத்தினுள், கிழக்கு மாகாணத்தில் 1,700 பட்டதாரிகளுக்கும் 351 டிப்ளோமா தாரர்களுக்கும், ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வறுமைக்குற்பட்ட கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில், கிழக்கு மாகாணத்தில் 30 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்காக, 300 மில்லியன் நிதி முதலீடு செய்யப்படவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.