குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த 2016 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற காவல்துறையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்ட இரண்டு யாழ் பல்கலை கழக மாணவர்களின் ஒருவரான கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த நடராஜா கஜனின் குடும்பத்தினருக்கு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சினால் புதிய வீடு ஒன்று அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சின் 13 இலட்சத்து 50 ரூபா நிதி ஒதுக்கீட்டில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட புதிய வீட்டினை அமைச்சர் சுவாமிநாதன் கஜனின் தாயார் நடராஜா சறோஜினிதேவியிடம் கையளித்துள்ளார். வீட்டினை கையளித்த பின்னர் கருத்துரைத்த அமைச்சர் சுவாமிநாதன் இந்த வீடு துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த கஜனின் இழப்புக்கு ஈடாகாது. இருப்பினும் நாம் அப்போது பிரதமருடன் பேசி குடும்பத்தினருக்கு வழங்கிய உறுதி மொழிக்கு அமைவாக இந்த வீட்டினை அமைத்துக்கொடுத்துள்ளோம். இந்த வீட்டினை இராணுவத்தினர் மிகவும் சிறப்பாக அமைத்து கொடுத்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவடட் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், அமைச்சின்அதிகாரிகள், கிராம அலுவலர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.