வலம்புரி பத்திரிகை செய்தி தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் அயூப் அஸ்மீன் தெரிவித்துள்ளார்.
“முஸ்லிம்களை வெளியேற்றிய புலிகளின் தீர்மானம் சரியானது” மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றார் அஸ்மின் என தலைப்பு செய்தியாக இன்றைய தினம் சனிக்கிழமை வெளியான வலம்புரி பத்திரிகையில் வெளிவந்துள்ளது..
குறித்த செய்தி தொடர்பில் அஸ்மீன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டு உள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,
வலம்புரி நாளிதழ் “முஸ்லிம்களை வெளியேற்றிய புலிகளின் தீர்மானம் சரியானது” மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றார் அஸ்மின்; என்னும் பிரதான தலைப்புச் செய்தி வெளியாகியிருந்தது. இச்செய்தியானது வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் ஆகிய என்னால் முன்வைக்கப்படாத திரிபுபடுத்தப்பட்ட கருத்தாகும்.
இதன்மூலம் வலம்புரி நாளிதல்முஸ்லிம் மக்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகளினால் முன்னெடுக்கப்பட்ட சர்வதேசக் குற்றமாகிய இனச்சுத்திகரிப்பு என்கின்ற ஒரு பாரிய மனித உரிமை மீறலை முஸ்லிம் பிரதிநிதியாகிய எனது பெயரைப் பயன்படுத்தி குற்றமற்றதாகக் காட்டுவதற்கு வலம்புரி நாளிதழ் முயற்சித்திருக்கின்றது.
அத்தோடு முஸ்லிம் மக்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒரு கருத்தை எனது பெயரைப் பயன்படுத்தி விற்பனை செய்வதற்கும் முயற்சித்திருக்கின்றார்கள்.
மேலும் எனது அரசியல் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணான ஒரு கருத்தை எனது பெயரில் பிரசுரித்து தமிழ் மக்கள் மீதான முஸ்லிம் மக்களின் நம்பிக்கையினை சீர்குலைப்பதற்கு முயற்சித்திருக்கின்றார்கள்.
அத்தோடு தமிழ் முஸ்லிம் உறவை மேம்படுத்தும் எனது அரசியல் போக்கில் முஸ்லிம் மக்களை நம்பிக்கையிழக்க முயற்சித்திருப்பதோடு, எனக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்படுவதற்கும் வழிசமைத்திருக்கின்றார்கள், இவ்வாறாக வலம்புரி நாளிதழ் தனது முஸ்லிம் விரோதப் போக்கினை மீண்டுமொருதடவை நிரூபித்திருக்கின்றது;
இத்தகைய பல்வேறு அச்சுறுத்தலான, மோசமான சூழ்நிலைக்குக் காரணமாகிய வலம்புரி நாளிதழ்மீதும், அதன் உரிமையாளர்கள் மீதும் உடனடியாக சட்ட நடவடிக்கையெடுப்பதற்கு நான் கலந்தாலோசிப்புக்களை மேற்கொண்டுவருகின்றேன்.
வடக்கிலிருந்து செயற்படும் ஒரு சில ஊடகங்கள் “ஊடகம்” என்னும் பொதுவான அடையாளத்தையும், ஊடகங்களுக்கு இருக்கும் சிறப்புரிமைகளையும் தவறாகப் பயன்படுத்துவதோடு மக்களின் இயல்புவாழ்வை சீர்குலைப்பதற்கும், இந்த நாட்டில் சமாதனம் சகவாழ்வு என்பவற்றுக்கு அச்சுறுத்தலாகவும், தமிழ் மக்களின் தீர்வு முயற்சிகளைச் சீர்குலைப்பதாகவும் செயற்பட்டு வருகின்றன.
அவற்றுள் வலம்புரிக்கு பிரதான பங்குண்டு. தமக்கிருக்கும் ஊடகம் என்னும் அடையாளத்தைப் பயன்படுத்தி பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைபோவதற்கு ஒப்பான செயற்பாடுகளை முன்னெடுக்கும் இப்பத்திரிகையின் மீது சட்டம் தனது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்புவதோடு, இத்தகைய போலியான செய்திகளையிட்டு மக்கள் குழப்பமடையத் தேவையில்லை என்றும், இவ்வாறான போலியான செய்திகளினூடாக எமது நேர்மையான வெளிப்படையான நல்லாட்சிப்பண்புகளுடன் கூடிய விழுமிய அரசியல் போக்கில் எத்தகைய மாற்றங்களும் ஏற்படப் போவதில்லை என்றும் குறிப்பிடவிரும்புகின்றேன்.என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.