இலங்கை பிரதான செய்திகள்

மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக வரவு செலவு திட்டத்தில் விசேட நிதி ஒதுக்கப்படவேண்டும்….

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


மீள்குடியேற்றத்திற்கு போதுமான நிதி இல்லாமையினால் யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஸ்த்தம்பித்துள்ள நிலையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக வரவு செலவு திட்டத்தில் விசேட நிதி ஒதுக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக நடாளுமன்ற நிதிக்குழு இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தியிருந்தது.

இதன்போதே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்துரையாடலில், நிதிக்குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கருத்து தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தில் விசேடமாக வலி, வடக்கு பிரதேசத்தில் மக்களுடைய காணிகள் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளபோதும், அங்கு மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு போதுமான நிதியை அரசாங்கம் வழங்கவில்லை.

வலி,வடக்கில் 1600 குடும்பங்களுக்கு சொந்தமான 823 ஏக்கர் நிலம் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலத்தில் மீள்குடியேறவுள்ள மக்களுக்காக 1640.83 மில்லியன் ரூபாய் நிதி தேவை என கணிப்பீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் அரசாங்கம் வெறும் 700 மில்லியன் ரூபாய் நிதியையே வழங்கியுள்ளது.

இதற்கு முன்னரும் அரசாங்கம் 226 மில்லியன் ரூபாய் நிதி இன்னும் விடுவிக்கவில்லை. எனவே மீள்குடியேற்ற தேவைகளுக்காக 2019ம் ஆ ண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும். என்பதை நாடாளுமன்ற நிதிக்குழு பரிந்துரை செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து நிதிக்குழுவின் தலைவர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில்,

நல்லிணக்க அமைச்சின் கீழ் ஒரு தொகை நிதி உள்ளபோதும் நல்லிணக்க அமைச்சு என்பதால் அந்த நிதியை மீள்குடியேற்றத்திற்கு மட்டும் பயன்படுத்தவேண்டிய கட்டாயம் இல்லை. அதனால் வேறு தேவைகளுக்காக அந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. எனவே அதனை மீள்குடியேற்றத்திற்கும் பயன்படுத்தவேண்டும். என நிதிக்குழு பரிந்துரை செய்யும் என்றார்.

தொடர்ந்து தெல்லிப்பளை பிரதேச செயலர் சண்முகராஜா சிவசிறி கருத்து தெரிவிக்கையில், 1600 குடும்பங்களுக்கு சொந்தமான நிலம் விடுவிக்க ப்பட்டு 6 மாதங்கள் கடக்கும் நிலையில் மக்களை அங்கு மீள்குடியேற்றம் செய்வதற்கான நிதி கிடைக்கப்பெறவில்லை. 2011ம் ஆண்டின் பின்னர் தொடர்ச்சியாக மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றது. இந்த பகுதிகளில் 30 வருடங்களாக மக்கள் வாழாத அல்லது ப யன்படுத்தாத நிலையில் காடுகளாக மாறி கட்டிடங்களோ வேறு விடயங்களோ இல்லாத நிலையில் காணப்படுகின்றது.

இந்நிலையில் மீள்குடியேறும் மக்களுக்கு உட்கட்டுமான வசதிகள் மற்றும் அடிப்படைவசதிகளை வழங்கியாக வேண்டிய தேவை உள்ளது. இந்த வருடம் வலி, வடக்கில் 750 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலம் உறவினர், நண்பர்கள் வீடுகளில் வாழ்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறுவதற்காக எமக்கு நெருக்கடியை கொடுக்கிறார்கள். ஆனால் மீள்குடியேற்றத்திற்கான கொடுப்பனவுகள் போதுமானதாக இல்லை. எனவே மீள்குடியேற்றத்திற்கென விசேடமான நிதி ஒதுக்கீடு தேவையாக உள்ளது என்றார்.

தொடர்ந்து யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் கருத்து தெரிவிக்கையில்,

1990ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்ற விடயம் மிகவும் பாரிய சவாலாக உள்ளது. 2015ம் ஆண்டுக்கு பின்னர் வலி,வடக்கில் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த காணிகளில் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு 2016ம், 2017ம் ஆண்டுகளில் மொத்தமாக 6 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 2018ம் ஆண்டு 250 மில்லியன் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த வருடங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 5 வீதம் கூட இல்லை. மேலும் 2016ம் ஆண்டில் செய்யப்பட்ட கணிப்பீட்டின்படி 33 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் தேவையாக உள்ளது.

அதில் 6500 குடும்பங்களுக்கு மட்டுமே இதுவரையில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. 26500 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படாத நிலை தொடர்கிறது. இந்த வீடுகள் மக்களுடைய விருப்பத்திற்கு அமைவாக வழங்கப்படவேண்டும்.

மேலும் 1990ம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்களுடைய நிலங்கள் 30 வருடங்களாக பயன்பாட்டில் இல்லாமையால் காடுகளாக மாறியுள்ளதுடன், அந்த நிலங்களில் ஒன்றுமே இல்லாமல் வெறுமையாக காணப்படுகின்றது.

ஆகவே அங்கு மீள்குடியேறும் மக்களுக்கு எல்லாவற்றையும் வழங்கவேண்டிய கட்டாயம் உள்ளது. இந்தவகையில் மீள்குடியேறும் மக்களுக்கு உட்கட்டுமான வசதிகளையும், அடிப்படை வசதிகளையும் ஒன்றாக சேர்த்தே செய்யவேண்டியுள்ளது.

இதேபோல் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளையும் மீள வழங்கவேண்டிய தேவை உள்ளது என்றார். இதனடிப்படையில் மீள்குடியேற்றத்திற்கான நிதி தேவை என்பதை குழு ஏற்றுள்ளதுடன், அதனை உரியவர்களுக்கு ஆற்றுப்படுத்துவதற்கும்
நிதிக்குழு இணங்கியுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.