Home இலங்கை “அப்பு உங்களுக்கு ஒண்டும் தெரியாது” –

“அப்பு உங்களுக்கு ஒண்டும் தெரியாது” –

by admin

சனி முழுக்கு – 7 – “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்”…


சொன்னால் கேக்கமாட்டினம். தாங்கள் நினைச்சது மாதிரித்தான் எல்லாத்தையும் செய்வினம்.ஏதேன் சொல்ல வெளிக்கிட்டால் “அப்பு உங்களுக்கு ஒண்டும் தெரியாது” எண்டு ஒற்றைச் சொல்லிலை முறுச்சுக் கதைப்பினம். அதாலை அவை எங்கை பொறிஞ்சு கொட்டிண்டாலும் நான் வாய் திறக்கிறேல்லை. என்ன? நான் சொல்லுறது சரியோ, பிழையோ? தெரியாது! இண்டைக்கு சனிக்கிழமை. நல்லூர்த் தேர் எண்டு எல்லாருக்கும் விளங்கும். நானும் போன்னான். வெய்யில் நல்லாச் சுட்டுப் போட்டுது. இருந்தும் நான் ஒண்டுக்கும் கிறுங்கேல்லை. சுட்டால் சுடட்டுக்கும் எண்டு நிண்டு தேர் இருப்புக்கு வரும் வரைக்கும் பாத்துச் சுவாமியைக் கும்பிட்டிட்டு துர்க்கா மணி மண்டபத்திலை மதியம் அன்னதானச் சாப்பாடு. அதையும் நிண்டு நல்லா வெட்டிப் போட்டு, பருத்தித்துறை றோட்டிலை போட்டிருக்கிற முன் வாசல் பந்தலிலை கொஞ்ச நேரம் இருந்து விடுப்புப் பாத்திட்டுத்தான் வந்தனான்.

வரியம் வரியம் வாற மாதிரி வெளி நாட்டுச் சனம் கனக்க. அவை வெளிநாட்டாக்கள் எண்டதை அவையின்ரை சீலை சட்டையையும், பூச்சையும் வைச்சுச் சொல்லலாம். அதோடை கையிலை ஒரு தண்ணிப் போத்திலையும் கட்டாயம் வைச்சிருப்பினம். அப்பிடி ஒரு சனம் வந்து மேற்கு வீதியிலை நிண்டவை. அப்பிடியே ரெம்பிள் றோட்டாலை வந்த தூக்குக் காவடியைப் பாத்துக் கொண்டு நிண்டினம். தொடர்ந்து கன காவடியள் வந்தது. வழக்கமா வந்ததிலும் பாக்கக் கன காவடியள். நிண்டும், இருந்தும், கிடந்தும் எண்டு பல கோணத்திலை காவடி எடுத்தவையைக் குத்திக் கட்டிக் கிட்ந்திது. இதைக் கண்டிட்டுத்தான் அந்த ஜேர்மனியிலை இருந்து வந்த குடும்பமொண்டும் நரிசலையும் பாக்காமல் நிண்டிட்டினம். அதிலை வந்தவையளிலை தாய்க்காரி தன்ரை கான்போனிலை காவடியளைப் படம் எடுத்துக் கொண்டு நிண்டதிலை மேளைக் கவனிக்கேல்லை. பின்னுக்கு நிப்பாள் எண்ட நினைவிலை நிண்டிட்டாள்.படம் எடுத்து முடியத்தான் சடார் எண்டு திரும்பிப்பாத்தால் மேளைக் காணேல்லை. ஆத்துப் பறந்து தேடினால் அந்தச் சனத்துக்கை ஆரைப் பிடிக்கிறது? என்ரை ஐயோ எண்டு ஒப்பாரி. தாங்கேலாமைப் போச்சுது.“பிள்ளையைக் காணேல்லை….. பிள்ளையைக் காணேல்லை” எண்டு சத்தம் போட்டால் காணுமே? தேடவெல்லோ வேணும். அந்தச் சனத்துக்கை எங்கையெண்டு தேடுறது? இவையுக்கை ஒரு பிரச்சினை என்னெண்டால், பெடிச்சிக்கு ஜேர்மன் பாஷையைத் தவிர வேறை பாஷை ஒண்டுந் தெரியாது. இங்கிலிசும் அரை குறையாம்.

தாய் பெடிச்சியைத் தேடினமாதிரிப் பெடிச்சியும் தாயைத் தேடிப்போட்டுப் பயத்திலை போய் அழுது கொண்டு மேற்கு வீதியிலை உள்ள வயிரவரடியிலை இருந்திட்டுது. அதைப் பாத்த ஆரோ வந்து சொல்ல ஒரு மாதிரித் தேடிப் பிடிச்சாச்சு எண்ட சந்தோஷத்திலை திருவிழாப் பாத்தது காணும் எண்டிட்டு அவை வெளிக்கிட்டுப் போட்டினம்.

உந்த வெளிநாட்டிலை இருந்து வாற சனம் தங்கடை பிள்ளையளுக்கு வீட்டிலை யாவது வைச்சுத் தமிழைச் சொல்லிக் குடுக்கலாம் எல்லே? எல்லாரும் இல்லை. சில பேர் அதிலை அக்கறை இல்லை. தமிழைப் பேசுறதை நாகரீகமில்லை எண்டு நினைக்கினமோ தெரியாது. தமிழைப் படிக்கிறதாலை லாபம் கனக்க எண்டு அவைக்குத் தெரியாது. எத்தினை வெள்ளையள் வந்து தமிழ் நாட்டிலை விழுந்து விழுந்து தமிழைப் படிக்கினம். ஏனெண்டால் தமிழிலைதான் இயற்கைக் கல்வி கனக்கக் கிடக்கிதெண்டு பண்டிதர் அடிக்கடி சொல்லுறவர். இப்ப பாருங்கோவன் திருக்குறளை எத்தினை பாஷையிலை மொழிபெயர்பு்புச் செய்து படிச்சாலும் தமிழிலை படிக்கிற மாதிரி அதின்ரை ஒரிஜினல் சுவை வருமோ? மொழிபெயர்ப்புப் பிறகு டுப்ளிக்கெற்தானே? சித்த வைத்தியம் முழுக்க முழுக்கத் தமிழிலைதானே கிடக்கு.அப்ப இந்தியாவுக்கு வந்த ஜேர்மன் காறன் திரும்பிப் போகேக்கை தமிழிலை உள்ள ஏடுகளைத்தான் களவா எடுத்துக் கொண்டு போனவனாம். அவனுக்குத் தமிழைப் பற்றி விளங்கின விளக்கம் எங்கடையளுக்கு விளங்கேல்லை. எல்லாம் சுயத்தை மறந்து பாய நிக்கிதுகள்.

இதுக்கிடையிலை இதையும் சொல்லவேணும். நல்லூரடியிலை நேற்றைக்கு நிண்டாப்போலை ஆரோ ஒரு வித்தியாசமாத் தமிழழைப் பேசுறதைக் கேட்டுத் திரும்பினால் அவள் ஒரு ஜப்பான் பொம்பிளை. அவ்வளவு கிளியராத் தமிழைப் பேசுறாள். அவள் வந்து தமிழைப் படிச்சு தமிழாலை பேசி கைவேலையைத் தமிழ் பெண்டுகளுக்குப் படிப்பிக்கிறாள். அப்ப அவளைப் பற்றி என்ன நினைக்கிறியள்?

இப்ப கிட்டடியிலை கேள்விப்பட்டனான். உண்மையோ, பொய்யோ தெரியாது. அமெரிக்காவிலை பிளேன் ஓடப் படிச்ச ஒரு முல்லைத்தீவுத் தமிழ் பெடி அதின்ரை லைசென்ஸ் வாங்கப் போனவனாம். அவன் போனது வேட்டியோடை. அப்ப அவை சொல்லிச் சினமாம் வேட்டியோடை வந்தால் லைசென்ஸ் தரேலாது, போய் காற்சட்டை போட்டுக் கொண்டு வா! எண்டு. அப்ப அவன் கேட்டானம் வேட்டிக்கும் பிளேன் ஒடுறதுக்கும் என்ன சம்பந்தம் எண்டு? வாக்குவாதப் பட்டிட்டு அப்ப லைசென்ஸ் எனக்கு வேண்டாம் எண்டு பெடி வெளிக்கிட, பிறகு ஆளைக் கூப்பிட்டு ஒரு மாதிரிச் சமாளிச்சுப்போட்டு லைசென்ஸஸைக் குடுத்திட்டினமாம்.

அந்தக் காலத்திலை காந்தியும் “ காற்சட்டை போட மாட்டன்” எண்டு வெள்ளக்காரனோடை சண்டைப் பிடிச்சவராம். இந்தியாவின்ரை கலாசாரப்படி கதர் வேட்டிதான் கட்டுவன் எண்டு. காற்சட்டை போடமாட்டன் எண்டு சொல்லி அந்தக் கடுங் குளிருக்கையும் கதரோடைதானே திரிஞ்சவர். காந்தியின்ரை ஓர்மத்தைப் பாத்திட்டுக் கடைசியா வெள்ளைக்காரன் விறைச்சுப் போனானாம். மனுசர் எண்டால் அப்பிடி இருக்க வேணும்.

எங்கடைதான் உலகத்திலை பெரிசெண்டு முதலிலை நாங்கள் நினைக்க வேணும். எங்கை முஸ்லிம் ஆக்கள் எங்கை தங்கடை பாரம்பரியத்தை விட்டுக் குடுக்கட்டும் பாப்பம்? எந்தச் சூழ்நிலையிலையும் அவங்கள் அசையாங்கள்.ஒருக்கா இந்தியாவுக்குப் போகேக்கையும் பாத்தனான். எங்களோடை நிண்டவன் ஒருத்தன் தொழுகை நேரம் வந்திட்டுதெண்டு ஓடிப்போய் பைப்படியிலை உள்ள வாஸ்பேஷினுக்கை காலைத் தூக்கிக் காலைக் கழிவிக் கும்பிட்டவன். அப்பிடி அவங்கள் எந்தச் சந்தர்பத்திலும் தங்கடை தங்கடை பழக்க வழக்கங்களை விட்டுக் குடுக்காங்கள். அதாலைதான் அவங்கள் பெருக்கம் கூட. இது நாங்கள் தான் மற்றையவைக்குள்ளை போய் மறைஞ்சு போறது. மற்றையவன் எதையும் எங்களுக்குத் திணிக்கத்தேவை இல்லை. எங்கடையள் விட்டில் பூச்சிப் போய் விழுந்து சாகிறமாதிரி தானாப் போய் விழுந்தே செத்துப் போயிடுவினம். என்னெண்டாலும் நாங்கள் கனவமா இருப்பம். என்ன?

– “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்”

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More