அணு ஆயுத ஏவுகணைகள் இல்லாமல் வடகொரியாவின் 70-வது ஆண்டு விழாவில் ராணுவ அணிவகுப்பை நடத்தியதற்காக கிம் ஜாங் உன்னை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளார். வடகொரியாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்ததின் ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9-ந் திகதி நடைபெறும். அதனையொட்டி நடக்கிற ராணுவ அணிவகுப்பு, உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் அமையும். ராணுவ அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் முக்கிய இடம் பிடிக்கும். எனினும் இந்த ஆண்டு, வடகொரியாவில் இடம்பெற்ற 70-வது ஆண்டு விழாவில் ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்படவில்லை.
கடந்த ஜூன் மாதம் 12-ந் திகதி சிங்கப்பூரில் வடகnhரிய மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் பின் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் பின்னர் வடகொரியா அணுகுண்டுப் பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை. இந்தநிலையில் நேற்றையதினம் இடம்பெற்ற அணிவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெறவில்லை. பிற பாரம்பரிய ஆயுதங்கள், தளவாடங்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தமை தொடர்பிலேயே ட்ரம்ப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.