அண்மையில் ஊடகவியலாளர் ஒருவர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் அளித்த பதில்கள் விடுபட்டோ முழுமை பெறாத வகையிலோ பிரசுரிக்கப்பட்டன. விடுபட்ட கேள்வி பதில்களும் பிரசுரிக்கப்பட்ட சில கேள்விகளுக்கான முழுமையான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.
1. கேள்வி – அரசியலில் நீங்கள் தொடர்ந்து இருக்காவிட்டால் தமிழ்த் தாயகம், தமிழரின் தாகம் ஆகியன திசைமாறிவிடுவன என்று பயப்படுகின்றீர்களா?
பதில் – தமிழர் தாயகம் என்பது கட்டுக்கதையல்ல. அது முற்றிலும் உண்மையான கருத்து. பரிநிர்வாணம் எய்திய புத்த பெருமான் காலத்திற்கு முன்பிருந்தே திராவிடர்கள் இந் நாட்டின் கரையோரங்களில் குடியிருந்து வந்துள்ளனர். தற்போதைய நீர்கொழும்பில் இருந்து வடக்கு நோக்கி வன்னி வரை சென்று கிழக்கில் திருக்கோவில் வரையில் அவர்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள். அவர்களின் இருப்பு மேலும் கதிர்காமம் வரையில் பரவியிருந்தது.
சிங்கள மொழியானது கி.பி 6ம் அல்லது 7ம் நூற்றாண்டளவில்த்தான் ஜனித்த காரணத்தினால் அதற்கு முன்னர் இந் நாட்டில் சிங்கள மக்கள் குடிகொண்டிருக்கவில்லை என்பதே எனது கருத்து. சிங்கள மொழியானது பாளி, வடமொழி, தமிழ் மற்றும் பேச்சு மொழிகளில் இருந்தே பிறந்தது. அம் மொழி பிறக்க முன் இங்கு வாழ்ந்தவர்கள் திராவிடமொழியொன்றினைப் பேசிய திராவிட மக்களே. அண்மைய னுNயு பரிசோதனைகள் இந்தக் கருத்துக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது.
நான் அரசியல் ரீதியாகச் செயற்பட்டுள்ள தருணங்களில் இவ்வாறான வரலாற்று ரீதியான உண்மைகளை அடையாளம் கண்டு பலரறிய அவற்றைக் கூறிவந்துள்ளேன். எதிர்பார்க்கக் கூடியவாறு தீவிர சிந்தனையுள்ள சிங்கள மக்கள் எனது கருத்துக்களை வெறுக்கின்றார்கள். தாங்கள் ஆரியர் என்றும் தாங்களே இந்நாட்டின் மூத்த குடிகள் என்றும், தமிழர்கள் பின்னர் வந்து குடியேறியவர்கள் என்றும் பலவாறாக அவர்கள் போதிக்கப்பட்டு வந்துள்ளார்கள். அண்மைய காலத்து எமது தமிழ்த் தலைமைகள் எமது பாரம்பரியங்கள் பற்றி வரலாற்று ரீதியான, முறையான, போதிய ஒரு பார்வையைக் கொண்டவர்களாக இருந்தார்கள் என்று கூறுவதற்கில்லை. அப்படி இருந்தாலும் அவர்கள் கருத்தை உலகறியச் செய்ய அவர்கள் தயங்கினார்கள் என்றே கொள்ள வேண்டியுள்ளது. காரணம் அவ்வாறான கருத்துக்கள் சிங்கள மக்களின் மனதைப் புண்படுத்தக் கூடும் என்ற ஆதங்கமே. இவற்றை வெளியிட்டால் எமது பெற்றோர்கள் என்று பேணி வந்த நபர்கள் அல்லாதவரே எமது பெற்றோர்கள் என்று கூறுவதற்கொப்பாகும் என்று தயங்கியிருக்க வேண்டும்.
ஆனால் எமது பாரம்பரியத்தையும் வரலாற்றையும் பகிரங்கமாக எடுத்தியம்ப வேண்டிய கட்டாயம் எமக்கு இப்போது உதித்துள்ளது. ஏன் என்றால் எம்மைப் பற்றியுந் தம்மைப்பற்றியதுமான எமது சகோதர இனத்தவர்களின் சிந்தனைகள் பிழையான கருத்துக்களாலேயே நிறைக்கப்பட்டு வந்துள்ளன. அந்த பிழையான கருத்துக்களே அவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆணிவேராக அமைந்திருந்துள்ளன. பலர் பழையதை ஏன் கிண்ட வேண்டும் சுமூகமற்ற சூழலை ஏன் உண்டாக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சுமூகமற்ற ஒரு சூழல் உருவாகக்கூடும் என்பது உண்மைதான். ஆனால் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் தங்கள் பொதுவான சரித்திர மூலங்களையும் வரலாற்று சூழல்களையும் பற்றி அறிய வழிவகுத்தால் அவர்கள் மனதில் இருக்கும் வைர்யத்தையும் வெறுப்பையும் அவர்கள் நீக்க வாய்ப்பிருக்கின்றது. இன்று பெரும்பான்மையான சிங்கள மக்களிடையே சிங்களவர்கள் ‘உள்நாட்டவர்கள்’ என்றும் தமிழர்கள் ‘வெளிநாட்டவர்கள்’ என்ற கருத்தே இருந்து வருகின்றது. அவ்வாறான சிந்தனைகள் தொடரும் வரையில் நல்லிணக்கமும் சமாதானமும் அடையமுடியாத கனவுகளாகவே இருப்பன.
என்னைப்பொறுத்த வரையில் எமது மக்களுக்கு என்னால் முடிந்தவரையில் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சேவை செய்வதே எனது கடப்பாடாகக் கருதுகின்றேன். முடிவுறா செயற்றிட்டங்கள் என்று பார்த்தால் சமூகக்கல்வி முன்னேற்றம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுத்தல், இன முரண்பாட்டை முடிவுக்கு கொண்டுவர அரசியல் ரீதியான தீர்வை அடையாளங் காணுதல், பாதிக்கப்பட்ட எமது பிரதேசத்தில் பொருளாதார புனர் நிர்மாணத்தையும் அபிவிருத்தியையும் உறுதி செய்தல் போன்ற பலவற்றை அவை உள்ளடக்கி நிற்பன. இவற்றை அடைய நாம் இதுகாறும் முனைந்தோமெனினும் மேலும் அடைய வேண்டிய இலக்குகள் பல உண்டு. நாம் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் ஒன்றிணையப் பாடுபட வேண்டும். எமது பொது மொழி எம்மை ஒருங்கச் சேர வைக்க வேண்டும். பூகோள ரீதியான எமது வலுவான சக்தி வளங்களை நிறுவனப்படுத்தி முன்செல்வதால் முன்னேற்றத்தை நாம் எட்டலாம்.
2. கேள்வி – வடக்கு கிழக்கில் தமிழ் அரசியலில் தமிழ் மக்கள் பேரவையின் பங்கு என்ன?
பதில் – மேலே (முன்னர்) கூறப்பட்ட இரண்டாவது கருத்தைக் கொண்டவர்களே தமிழ் மக்கள் பேரவையினர். கலாசார, பிராந்திய, மத ரீதியான, மொழி ரீதியான, சமூக ரீதியான எமது தனித்துவம் அடையாளப்படுத்தப்பட்டு பேணப்பட வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள். அவ்வாறான ஒரு நிலை அரசியல் உடன்பாடு ஒன்றினால் மீண்டும் வலியுறுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். ‘எழுக தமிழ்’ கூட்டங்களில் பெருவாரியாக மக்கள் தமது சுய இச்சையுடன் பங்குபற்றியமை இதை நிரூபிக்கின்றது.
3. கேள்வி – தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவுடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் சேர்ந்து தாபிக்கப்படப்போகும் ஒரு கூட்டமைப்புப் பற்றியே எங்கும் பேச்சாக இருக்கின்றது. இவ்வாறான ஒரு கூட்டமைப்பின் ஊடாகத்தான் நீங்கள் தேர்தலை எதிர்கொள்ளப் போகின்றீர்கள் என்று நாங்கள் கூறினால் அது சரியாக இருக்குமா?
பதில் – இன்னும் முடிவெடுக்கவில்லை.
4. கேள்வி – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு தீவிரப் போக்குடைய ஒரு தமிழ் அரசியல் வாதி என்று கருதப்படுகின்றார். ஆகவே நீங்கள் அவர் போன்றவர்களால் பிழையாக வழிநடத்தப்படுகின்றீர்கள் என்று கூறப்படுகிறது – உங்கள் கருத்து?
பதில் – ‘தீவிரம்’ என்ற சொல் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. தான் ஒரு மிதவாதி அல்லது மத்திமவாதி என்று தன்னைக் கருதுபவர் தனது கொள்கைகளை எதிர்ப்பவரை தீவிரவாதி என்பார். ஆனால் மேற்படி மிதவாதி அல்லது மத்திமவாதி எங்கிருந்து அந்தக் கருத்தை வெளியிடுகின்றார் என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டியதொன்று. அவரின் கருத்துக்கள் உண்மையில் மிதமானவையா அல்லது தவறானவையா என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வெள்ளையர் காலத்தில் கெப்பற்றிபொல திசாவே என்பவர் குற்றவாளியாக வெள்ளையர்களால் கணிக்கப்பட்டார். இன்று இந் நாட்டவர்கள் அவரை புகழுக்குரிய வீரனாகக் கணிக்கின்றார்கள். அதெப்படி? ஒரே நபர் வேறு வேறு மக்களால் வேறு வேறு விதமாகக் கணிக்கப்படுகின்றார்கள்.
இளம் கஜன் அவர்கள் மக்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கின்றார். அவர் தனி நாடு கோரவில்லை. வன்முறை வேண்டும் என்று சொல்லவில்லை. அவர் ஒரு தீவிரவாதியல்ல. நானும் ஒரு தீவிரவாதியல்ல. அவர் என்னை இயக்குவதோ நான் அவரை இயக்குவதோ இல்லை. நாங்கள் இருவரும் இன்னும் பலருடன் எமது மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கின்றோம். அண்மைய உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகளை மக்கள் வெகுவாகக் குறைத்தனர். கஜன் ஒரு தீவிரவாதி என்று அவர்கள் நினைத்திருந்தால் அவருக்கு மக்கள் வாக்களித்திருக்க மாட்டார்கள் அல்லவா?
5. கேள்வி – தமிழர்களின் நீண்டகால போராட்டத்திற்கு உங்கள் பங்களிப்பென்ன? தமிழர்கள் சார்பாக நீங்கள் பேசியுள்ளீர்களா?
பதில் – எமது தமிழ் பேசும் மக்களுக்கும் பாரளாவிய புலம் பெயர் தமிழர்களுக்கும் இடையே நல்லுறவை உருவாக்கியுள்ளேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் புலம் பெயர் தமிழர்களுடன் தம்மை அடையாளப்படுத்தப் பயப்பட்டு நின்றார்கள். தமக்கும் பயங்கரவாதிகள் என்ற நாமம் சூட்டப்படலாம் என்ற பயமே அதற்குக் காரணம். என்னைப் பொறுத்தவரையில் புலம்பெயர் மக்களின் அனுசரணையுடன் தான் எமது இனப்பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். அவர்கள் எங்கள் பலம்.
2001ம் ஆண்டு மும்மொழிகளிலும் உச்ச நீதிமன்ற வரவேற்பின் போது பேசுகையில் தமிழ் மக்களுக்கான பொறுப்பான நியாயமான தீர்வு பற்றிப் பிரஸ்தாபித்தேன். நாம் என்ன செய்தோம் என்பது மற்றவர்களால் அடையாளப்படுத்தப்பட வேண்டும். எம்மால் அல்ல. எமது மக்களின் விடிவிற்காக எனது குரல் நீதியைப் பெற இடைவிடாது ஒலித்து வந்துள்ளது. போரின் பின்னர் தமிழ்த் தேசியத்தையும் அதன் உள்ளார்ந்த கொள்கைகளையும் அழிந்து விடாது வைத்திருக்க எனது குரல் அனுசரணையாக இருந்து வந்துள்ளது என பிறர் கூற நான் கேட்டுள்ளேன். அதாவது ‘எல்லாம் முடிந்து விட்டது’ என்ற கருத்து மக்கள் மனதில் வேரூன்றிக் கொண்டிருந்த வேளையில் அந்தக் கருத்தை எம்மவருட் சிலர் வலுவேற்ற எத்தனித்த வேளையில் ‘எதுவுமே முடியவில்லை’ என்ற மாற்றுக் கருத்தை நான் வலியுறுத்தி வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
6. கேள்வி – கௌரவ டெனீஸ்வரனைப் பதவியில் அமர்த்த மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டும் நீங்கள் அதை நடைமுறைப்படுத்தவில்லை என்று நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டு உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. அவ்வாறு நீங்கள் செய்ததற்கான காரணம் என்ன? யாருக்கு அந்த அதிகாரம் உண்டு? உங்கள் நடவடிக்கைக்கான காரணத்தைக் கூறமுடியுமா? கௌரவ டெனீஸ்வரனை மீள் நியமனம் செய்ய முன்வராததற்கு உங்கள் காரணத்தைக் கூறமுடியுமா?
பதில் – மேன்முறையீட்டு நீதிமன்றக் கருத்தின் படி எந்த ஒரு அமைச்சரையும் நியமிக்கவோ, பதவிநீக்கவோ எனக்குரித்தில்லை. ஆளுநருக்கே அந்த அதிகாரம் உண்டு. அவ்வாறு நீதிமன்றத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அந்தப் பணியைச் செய்யவேண்டியவர் ஆளுநரே. ஆனால் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டு என் மீது சுமத்தப்பட்டுள்ளது. எது எவ்வாறிருப்பினும் இது நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆகவே இவை பற்றி விலாவாரியாக வழக்கு நடைமுறையில் இருக்கும் போது பேசுவது தவறு.
7. கேள்வி – சிலர் உங்களை ஒரு பிடிவாதக்காரர் என்கின்றார்கள். நீங்கள் நினைத்ததையே செய்யப் பார்ப்பவர் என்பதால் உங்கள் மீதிருந்த மதிப்பு விட்டுப் போய் விட்டதாகக் கூறுகின்றார்கள். உங்கள் பதில் என்ன?
பதில் – இவ்வாறான விமர்சனங்கள் பல, பொதுமக்கள் பாவனைக்காக சிலரால் வெளியிடப்பட்டு வருகின்றன. இது போன்ற இன்னொரு விமர்சனந்தான் நாங்கள் அபிவிருத்திக்குத் தரும் பணத்தைத் திருப்பி அனுப்பி விடுகின்றோம் என்பது. சென்ற ஐந்து வருடங்களில் ஒரு சதங் கூட திருப்பி அனுப்பப்படவில்;லை. என்றாலும் தொடர்ந்து இவ்வாறான விமர்சனங்கள் சுற்றி வருகின்றன.
இன்னுமொரு விமர்சனந்தான் நான் நிர்வாகத் திறன் அற்றவன் என்பது. என்றாலும் முழு இலங்கையிலும் 2015ல் சுமார் 850க்கு மேலான அரச நிறுவனங்களில் நடந்த கணக்காய்வு மதிப்பீட்டில் எமது முதலமைச்சர் அமைச்சே நிதி முகாமைத்துவத்துக்கும் மற்றும் நிர்வாகத் திறனுக்கும் முதலிடம் பெற்றது.
என்னை மக்கள் எதிர்மறையாக விமர்சிக்கின்றார்கள் என்றால் இவ்வாறான எதிர்மறையான செய்திகளும் கருத்துக்களும் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்று அர்த்தம். இவற்றின் உண்மை பொய்யை அறிந்து கொள்ள முடியாததால் மக்கள் இவ்வாறான பொய்களுக்கும் புழுகுகளுக்கும் அடிமையாகின்றார்கள். என்னை வெறுப்பவர்கள் எவராயினும் எனக்கு எழுதியோ, மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டோ உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்; என்று கேட்டுக்கொள்கின்றேன். வேண்டுமென்றே விநியோகிக்கப்படும் பிழையான விமர்சனங்களுக்கு எவருமே ஆளாகாதீர்கள்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
1 comment
நல்லாட்சி அரசாங்கத்தின் சிந்தனை:
1.சுமந்திரன் – ஒரு சேவகர் – அரச ஆதரவாளர்.
2.சம்பந்தன் – ஒரு மிதவாதி – கொடுப்பதை ஏற்பவர்.
3.விக்னேஸ்வரன் – ஒரு தீவிரவாதி – சமஷ்டி கேட்கின்றவர்.
4.வேலுப்பிள்ளை பிரபாகரன் – ஒரு பயங்கரவாதி – தனிநாடு கேட்டவர்.
இப்படிச் சிந்திக்கும் தற்போதைய அரசாங்கம் தமிழர்களுக்கு அரசியலத் தீர்வை கொடுக்காது.
.