Home இலங்கை கழிவுநீர் சுத்திகரிப்பு முகாமைத்துவ திட்டம் தொடர்பில் வெளிப்படைத் தன்மை வேண்டும்…

கழிவுநீர் சுத்திகரிப்பு முகாமைத்துவ திட்டம் தொடர்பில் வெளிப்படைத் தன்மை வேண்டும்…

by admin

மக்களிற்கான அபிவிருத்திகள் மக்களின் பிரதிநிதிகளுக்கூடாக வெளிப்படையாக பேசப்பட வேண்டுமே அன்றி அவற்றை மறைத்து தான்தோன்றித்தனமாக செயற்பட எவரும் முயற்சிக்க கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.

கனேடிய அரசின் நிதியுதவியுடன் கல்முனையில் கழிவுநீர் சுத்திகரிப்பு முகாமைத்துவ திட்டம் அமைப்பது தொடர்பில் மக்களுடனான சந்திப்பொன்று இன்று(23) கல்முனை -1 பல்தேவை கட்டடத்தில் நடைபெற்ற போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தனது கருத்தில், கனேடிய அரசின் நிதியுதவியுடன் 220 மில்லியன் டொலர் செலவில் கல்முனை இஸ்லாமாபாத் பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு முகாமைத்துவ திட்டம் குறித்து திடிரென எமக்கு அறிவிக்கின்றனர். கல்முனை மாநகர சபையில் த.தே.கூ சார்பாக 07 உறுப்பினர்கள் உறுப்பினர்கள் உள்ளோம்.இவ்வாறான அபிவிருத்திகள் மக்களுக்கு நன்மை பெற்று தந்தாலும் அது தொடர்பில் வெளிப்படையாக பேசப்பட வேண்டுமே அன்றி அவற்றை மறைத்து தான்தோன்றித்தனமாக செயற்பட எவரும் முயற்சிக்க கூடாது . இது முறைகேடான சில செயற்பாடுகளுக்கு துணை போகும் என்பதே எனது கருத்து ஆகும்.

கழிவுநீர் முகாமைத்துவ திட்டம் எமது பிரதேசத்திற்கு அத்தியவசியமானது தான் .ஒரு பிரதேசத்தில் சனத்தொகை அதிகரிக்கின்ற போது அந்த பிரதேச வளங்களை நுகர்வோரின் எண்ணிக்கையும் அதிகமாகின்றன. இதனால் குறித்த பிரதேசங்களில் சிலவேளை வளப்பற்றாகுறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகின்றன. இவ்வாறான வளப்பற்றாகுறை ஏற்படுகின்ற போதுகளில் அவற்றை நிவர்த்திசெய்ய மாற்றுவழியினை கண்டு பிடிக்க வேண்டிய தேவை எழுகின்றது ஆனால் அம்மாற்று திட்டம் அமையப்பெற அப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு இத்திட்டம் தொடர்பாக விழிப்பூட்டல்கள் பகிரங்கமாக வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த அணுகுமுறை இல்லாமையினால் மக்கள் எம்மை கேள்வி கேட்கின்றனர்.இதற்கு உரிய தரப்பினர் பகிரங்கமாகவே பதில் வழங்க வேண்டும். சிலர் அரசியல்சக்திகளின் துணையுடன் தான்தோன்றித்தனமாக இத்திட்டத்தை அப்பாவி மக்கள் வாழகின்ற பகுதியில் திணிக்க முற்படுவதை எவராலும் ஏற்க முடியாது.

இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் உள்ளவர்களுக்கு இந்த திட்டம் புதியதாகவும் அனுபவமற்றதாகவும் இருக்கலாம் .இதனால் எமக்கு இத்திட்டத்தின் செயற்பாடுகள் வீண் சந்தேகங்கள் எம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருப்பதுடன் கேள்விக்குறியாக்கியுள்ளது.இதற்கு காரணமே கழிவுநீர் முகாமைத்துவ திட்டம் நமது நாட்டுக்கு புதிய விடயம் என்பதும் அதுதொடர்பிலான விளக்கமற்றவர்களாக அநேகமானவர்கள் இருப்பதனாலும் ஆகும்.ஆகையினால் புதிய இவ்வாறான உடனடி திட்டங்கள் சரியான இடத்தில் அமைய வேண்டும். அல்லாவிடின் மக்கள் வாழும் இடங்களில் அமைக்கப்பட்டால் அதனை ரத்து செய்யுமாறு வேண்டுகின்றோம். இவ்விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் இப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம். இது தொடர்பில் ஆளுநரையும் நேரடியாக சந்தித்து எமது கோரிக்கையை வலியுறுத்தவுள்ளோம். எமது கோரிக்கைக்கு செவிசாய்த்து உரிய தீர்வைத்தராவிட்டால் மக்களை இணைத்து கொண்டு இத்திட்டத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் என்பதையும் கூற விரும்புகின்றேன் என கூறினார்.

இம்மக்கள் சந்திப்பில் கல்முனை ஸ்ரீ சுபத்திரராம விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் கிராம அலுவலர்கள் மாநகர சபை உறுப்பினர்கள் மாதர் சங்க பிரதிநிதிகள் தமிழ் இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள் விளையாட்டு கழகங்கள் உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டிருந்ததுடன் இத்திட்டம் தொடர்பில் தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

குறித்த திட்டத்தை நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை என்பன இணைந்து அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.220 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படவுள்ள உத்தேச கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்தின் மூலம் மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 75 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 101000 பேர் நன்மையடையவுள்ளனர்.

அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்தின் மூலம் கல்முனை தமிழ்பிரிவு கல்முனை முஸ்லிம் பிரிவு மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களின் சுற்றாடல் பராமரிப்பு சுகாதார மேம்பாடு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு போன்றவை மேம்படுத்தப்படுமென நம்பிக்கை தெரிவிக்கப்படுகின்றது.

கழிவுநீர் முகாமைத்துவ திட்டம்தொடர்பிலான விளக்கமற்றவர்களாகவே அநேகமானவர்கள் இருக்கின்றார்கள். அதாவது நமது வீடுகளில் மலசலத்தை சேகரிக்க நிலத்தின் அடியில் ஒரு குழியை நாம் தயார் செய்து வைத்திருப்போம் அவ்வாறே நமது வீட்டு பாவனைகளுக்காக நீரினை உபயோக்கின்ற போது உருவாகும் கழிவு நீரினை அகற்றவும் ஒரு நிலக்கீழ் குழி இருக்கும் பெரும்பாலும் நகர்புறத்தில் இவ்விரண்டு கழிவுநீர் வகைகளும் ஒரே குழியில் சேமிக்கப்படுவதை அவதானிக்க முடியும். இவ்வாறு ஒவ்வொரு வீடுகளிலும் சேமிக்கப்படுகின்ற மலசலக்கழிவு மற்றும் கழிவு நீர் ஆகிவற்றை நிலக்கீழ் குழாய் வழியாக பிரதான கழிவுநீர் மீள்சுழற்சி மையத்திற்கு கொண்டு சென்று அந்தக்கழிவினை பல்வேறு படிமுறைகளுக்கூடாக இரசாயன கலவைகளின் மூலம் சுத்திகரித்துஇ தொற்று நீக்கி பகுப்பாய்வு செய்துஇ பாவனைக்குகந்த நீராக மாற்றி பெரிய நீர் மூலவளங்களான ஆறுஇகுளம்இ ஏரி போன்றவற்றுக்கு குழாய்வழியாக கொண்டு செல்கின்ற செயல் முறைதான் கழிவு நீர் முகாமைத்துவ திட்டமாகும்.

இந்த திட்டத்தின் மூலம் பாவிக்கப்பட்ட நீரானது மீண்டும் தமது உற்பத்தி புள்ளியை அடைகின்ற படிமுறையினை காணமுடியும்.இதன் மூலம் நீர்பற்றாக்குறை குறைவதோடு பாவனைக்கு தேவையான நீரினை பெற்றுக்கொள்வதிலுள்ள சிரமங்களை குறித்த பிரதேசங்களில் தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

பாறுக் ஷிஹான்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More