Home இலங்கை “யாழ்ப்பாணத்தான்ரை பொருளாதாரத்தை எதிரியோட சேர்ந்து நாங்களும் எல்லோ அழிக்கிறம்”

“யாழ்ப்பாணத்தான்ரை பொருளாதாரத்தை எதிரியோட சேர்ந்து நாங்களும் எல்லோ அழிக்கிறம்”

by admin

சனி முழுக்கு – 9 – “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்

உதுக்குத்தான் நல்லவன் பெரியவனோடை பழக வேணும் எண்டு சொல்லுறது. அவங்களோடை போய் பழகினால்தான் நல்லது கெட்டது என்ன எண்டு தெரியும். அவங்களிட்டைப் போய் இன்னது இன்னது எனக்குத் தெரியாது. வகுப்பெடுங்கோ எண்டு சொல்லேலாது. மாறிச் சாறிக் கதைக்கேக்கை கதையோடை கதையாத்தான் உதுகள் வெளியிலை வரும்.

சும்மா யாழ்ப்பாணத்தின்ரை பொருளாதாரம் எண்ட கதையைத் துவக்கிவிட்டான் அங்கை நிண்ட ஒருத்தன்.  உடனை அந்தாள் சொல்லிச்சுது “யாழ்ப்பாணத்தான்ரை பொருளாதாரத்தை இரண்டு பேர் அழிக்கிறாங்கள். ஒண்டு எதிரி மற்றது நாங்கள்” எண்டு . அந்தாள் எண்டு நான் சொல்லுறது அந்தப் பேராசிரியரை. அவர் சொல்லிப் போட்டார் என்னத்தை வேணும் எண்டாலும் எழுதும் மிஸ்டர் பொன்னம்பலம். அதிலை என்ரை பேரை மாத்திரம் போட்டிடாதையும் எண்டு. அதாலை இனி எழுதேக்கை அந்தாள் எண்டு நான் எழுதினால் அது அந்தாள்தான். என்ன?

முதுலாவதா  தெற்கிலை இருந்து வாற சாமான் சக்கட்டை வாங்கிக் குவிக்கப் பண்ணுறான் எதிரி செய்யிற விளையாட்டு. அதுக்குப் பாங்குகளும், லீசிங் கொம்பனியளும் காசைக் குடுத்து எங்கடை ஆக்களைச் செலவழிக்கப் பண்ணினம். லீசிங் கொம்பனி கசல சாமான்களை வாங்குறதுக்கும் உடனை, சுடச் சுட,  பிணை இல்லாமல் லோன் குடுக்கினம். இஞ்சை மாசம் மாசம் எடுக்கிற சம்பளத்திலை முக்கால்வாசிக் காசை  கொம்பனியள் கொண்டு போகுது. போன வெள்ளிக் கிழமை தெல்லிப்பழையிலை ஒரு பெரிய பள்ளிக்குடத்துக்கு  “மக்களுக்குான வங்கி நாங்கள் தான்” எண்டு நெஞ்சிலை அடிச்சுச் சொல்லுற வங்கி ஒண்டு வந்து அங்கை நிண்ட ரீச்சர் மாரைப் பிடிச்சு பைபோசாத் தங்கடை வங்கிக் கடன் அட்டையளை குடுக்கினம். அதை அந்தப் பள்ளிக்குடத்திலை படிப்பிக்கிற வாத்திமாரும் தண்ணீர்ப் பந்தலிலை வரிசையிலை நிண்டு தண்ணி வேண்டிக் குடிக்கிறமாதிரி வேண்டினம். அங்கை வந்த வங்கிக்காரருக்குத் தெரியும் வாத்திமாற்றை சம்பளம் அரசாங்கம் குடுக்கிறது எண்டு. மாதம் மாதம் சுளை சுளையா அவையின்ரை கைக்கு வரும் எண்டு.அதாலைதான் அவைக்கு அந்தக் கடன் அட்டையைக் குடுக்கினம்.  அதோடை எங்கை எங்கை கடன் வாங்கலாம் எண்டும் சொல்லியும் குடுக்கினம். வேணுமெண்டால் அதிலை வரிசையிலை நிண்டு கடன் அட்டையை வாங்கின ரீச்சர் மார் வீட்டை அடுத்த கிழமை போய்ப் பாருங்கோ என்னென்ன  விதமான சமான்களெல்லாம் அவை வாங்கிக் குமிச்சு வைச்சிருக்கினம் எண்டு. உலகத்திலை விக்காத குப்பை கூழமெல்லாம் அவையின்ரை வீட்டிலை இருக்கும்.

அடுத்த எதிரியள் நாங்கள். நாங்களிலை சர்வதேசத்திலை குளிருக்கை நிண்டு விறைச்சு உழைக்கிற நீங்களும் அடங்கிது. நீங்கள் வந்து நிக்கேக்கை ஊரிலை செய்து போட்டுப் போற அட்டகாசம் பெரிசு. உங்களுக்குத் தெரியாமலே நீங்கள் எங்கடை இனத்துக்குச் செய்யிற பேரழிவு என்ன தெரியுமோ? இஞ்சை நீங்கள் வந்து நிக்கேக்கை “தம்பி சுகமோ?” எண்டு கேட்டுக் கொண்டு இல்லாட்டி “தம்பியை ஒரு அலுவல் சந்திக்க வேணும். எப்ப வர” எண்டு கேட்டுக் கொண்டு ஒரு கூட்டம் வரும். வந்து சொல்லும் “மற்ற மற்ற ஊர் ஆக்களைப் பாருங்கோ. அவை தங்கடை கோயிலை எப்பிடி எப்பிடி எல்லாம் கட்டிக் குடுத்திட்டுப் போயினம். வெளியிலை இருக்கிற எங்கடை ஊர் ஆக்களுக்கு ஊரிலை அக்கறை இல்லை” எண்டு உங்கடை மண்டையைக் கழிவி கோயிலை இடிக்கப் பண்ணிப் போட்டு இடிச்சதைக் கட்ட வேணுமே எண்டிட்டு ஊருக்கு வராமல்  வெளியிலை இருக்கிற ஆக்களுக்கு இடிச்ச கோயிலின்ரை படத்ததை வைபரிலையோ இல்லாட்டி வட்ச்சப்பிலையே அனுப்பி ஐயோ பையோ எண்டு கத்திக் குளறி ஒரு மாதிரிக் கோயிலைக் கட்டின பிறகு தான் விளையாட்டுத் துவங்கும். கும்பாபிஷேகம் செய்ய வேணுமெல்லே. அதுக்கு ஐயர் கும்பாபிஷேகச் செலவெண்டும் தன்ரை செலவெண்டும்  ஒரு பட்டியலைக் குடுப்பர். இப்ப கிட்டியிலை வேலணையிலை ஒரு வயிரவர் கோயிலை இடிச்சுக் கட்டினவை. கட்டின செலவு நாலு லட்சம். கும்பாபிஷேகத்துக்கு ஐயர் குடுத்த லிஸ்டின் படி மூண்டரை வேணும் எண்டு கோயில் பொறுப்பாளர் மூக்காலை அழுது கொண்டு யாழ்ப்பாண பஸ்ராண்டிலை நிண்டதைக் கண்டனான். பத்திருபது லட்சம் துவக்கம் ஒரு கோடிவரை கும்பாபிஷேகத்துக் கெண்டு செலவழிச்சிருக்கினம் எண்டது ஒரு வரலாறு. கும்பாபிஷேகம் முடிஞ்சதோடை எல்லாம் முடிஞ்சுதோ? பிறகு பராமரிக்கிற செலவு ஆற்றை கணக்கு? என்ன ஐயற்றை தெட்சணை காணுமோ? அதுக்கும் பிறகு ஆரையேன் பிடிச்சுத் தாக்க வேணும் எல்லே? எப்பிடி பாருங்கோ தானே தன்னை அழிக்கிற விளையாட்டு. யாழ்ப்பாணத்தானை அழிக்க எதிரி மல்ரி பெரலைக் கொண்டு வரத் தேவை இல்லை. உதுகளே காணும். தாங்களே தங்களை அழிக்க.

அப்ப அந்தப் பேராசரியர் சொல்லுறார், “ கோயில் எவ்வளவுக் கெவ்வள வு  கூடிக் கொண்டு போகுதோ அவ்வளவுக்கு அவ்வளவு பொது சனத்தின்ரை காசு போய் சீமெந்தாயும், கொங்கிறீற்றாயும்,கம்பியளாயும் இறுகிப் போகுது. அப்பிடிப்பட்ட முதலீட்டிலை இருந்து ஒரு சதமும் சனத்தின்ரை நன்மைக்கு வரப்போறதில்லை. வேணுமெண்டால் சனம் போடுற உண்டியலிலை நல்ல காசு சேந்தால் அவை கோயிலின்ரை முகட்டு ஒட்டைப் புவுணாலை போடுவினம். இல்லாட்டிக் கொடித்தம்பத்தை பவுணாலை போடுவினம். கோயில் வருமானத்திலை இருந்து சமூகசேவை நடக்கிறது ஆகத் தெல்லிப்பழையிலைதான். இன்னும் யாழ்ப்பாணத்தாருக்குப் பக்தி எண்டால்என்ன? ஆன்மீகம் எண்டால் என்ன? கோயிலுக்கான விளக்கம் என்ன? அது பொது சனத்தோடை எப்பிடித் தொடர்பு பட்டுக் கிடக்கு? எண்ட விளக்கம் குறைவு. ஆயிரத்தெட்டுத் தேங்காய் உடைச்சு, கற்பூரச் சட்டியையும் எரிச்சு, தூக்குக் காவடி எடுக்கிறதைத்தான் பக்தி எண்டு எண்ணினமே இல்லாமல் சரியான ஆன்மீகம் எண்டால் என்ன எண்டு செவ்வையான விளக்கம் குறைஞ்ச சனந்தான் கோயிலைச் சுத்தி நிக்கினம். சனத்தை விடுவம் கோயிலைப் பராமரிக்கிறவையளைப் பாருங்கோ.  கோயிலைப்பற்றிச்  சரியான அறிவும், விளக்கமும் உள்ளவையும் கோயில் பொறுப்பிலை இல்லை. சண்டை நேரத்திலை புத்திசாலியள் எல்லாம் ஒடித் தள்ளீட்டினம். நிண்ட பன்னாடையள்தான் “தடி எடுத்தவன் தண்டல்காரான்” எண்டு நிண்டு கொண்டு  கோயிலை நடத்தினம். கோயிலுக்கை நடப்பும், நட்டாமையுமாக் கிடக்கு.  அப்ப உப்பிடித்தான் கோயிலுகளின்ரை நிலமை இருக்கு. நினைக்கக் கவலையாக் கிடக்கு.

அப்ப இதையெல்லாம் எப்ப எங்கடை சனம் சிந்திக்கப் போயினமோ தெரியாது. வெளி நாட்டிலை உள்ள நீங்கள் இதைச் சிந்திக்கலாம். ஏனெண்டால் இஞ்சை இருக்கிற ஆக்களின்ரை நிதிமூலத்திலை ஒரு பங்கு நீங்களுந்தான். உங்களுக்குத் தெரியாது உங்களைக் குறி வைச்சுத்தான் எல்லாத்தையும் துவங்கினம். நடத்தினம் எண்டு. “வெளியிலை உள்ள பெடி பெட்டையளைக் கேட்டுப்பாக்கலாம்” எண்டு கதைக்கிறதைக் கேள்விப்பட்டிருக்கிறன். அப்ப இனி ஆரேன் காசெண்டு கேட்டால் ஏன், என்னத்துக்கு ? எண்டு கேளுங்கோ. பொது சனத்துக்கு அதாலை ஏதேன் நன்மை வருமோ ? எண்டு பாருங்கோ. நீங்களும் எவ்வளவு காலம் உப்பிடி உழைச்சுழைச்சு அனுப்பப் போறியள்? இருக்கேக்கை நல்லதாப் பாத்துச் செய்து விட்டால் நாலு சனம் பிழைக்கும். நாலு வீட்டிலை உலை எரியும். நாலு சனம் நல்லா வரும் என்ன? ஏதோ யோசியுங்கோவன்!

“பொஸிற்றிவ்” பொன்னம்பலம்”

Spread the love
 
 
      

Related News

1 comment

Rajasekar October 6, 2018 - 3:56 pm

அருமையான அறிவுரை வெளிநாடுகளில் வாழும் ஈழ மக்களுக்கு

Reply

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More