மலைநாட்டில் உழைக்கும் பாட்டாளிகள், சம்பளம் வாங்கும் தினக்கூலி தொழிலாளர் அல்ல. நாங்கள் இலங்கை திருநாட்டின் குடிமக்கள் என்பதை வலியுறுத்துவோம். தோட்ட ‘கம்பனி’ களின் கைகளில் மாத்திரம், மலையகத்தில் உழைக்கும், சுமார் இரண்டரை இலட்சம், பாட்டாளிகளின், நிகழ்-எதிர் காலங்களை முழுக்க, முழுக்கவும் கையளிக்க முடியாது. இருபத்தியிரண்டு தனியார் தோட்ட முகாமை நிறுவனங்கள் மற்றும் மூன்று அரசு தோட்ட நிறுவனங்களின் நாள் சம்பளத்துக்கு அப்பால், அரசாங்கத்தின் பங்களிப்பும் அவசியம்.
தோட்ட நிறுவனங்களும், தொழிற்சங்கங்களும் மாத்திரம், பேச்சு வார்த்தைகளை நடத்தி முடித்து கொள்ளுங்கள் எனக்கூறி, எமது மலையக தொழிலாளர் வாழ்வாதாரம் தொடர்பில், கடந்து வந்த எல்லா அரசாங்கங்களையும் போல், நமது அரசாங்கமும், தமக்கு இதில் எந்தவித தொடர்பும் இல்லை என கைகளை கழுவிக்கொள்ள இடந்தர முடியாது. இதே மாதிரி பிரச்சினை, காலியில், அம்பாந்தோட்டையில், பொலனறுவையில் வாழும் மக்களுக்கு ஏற்பட்டு இருந்தால், இந்த அரசாங்கம் இப்படி இருந்து இருக்காது.
தமிழ் முற்போக்கு கூட்டணி இடம் பெறும் அரசாங்கமாக இருந்தாலும், ‘குற்றம் குற்றமே’ என நாமிருக்கும் அரசாங்கத்துக்கும் சுட்டிக்காட்ட வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கின்றது. அதை தமிழ் முற்போக்கு கூட்டணி செய்யும். அதை நான் வழி நடத்துவேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சருமான, மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் சென்றுள்ள அமைச்சர் மனோ கணேசன் அங்கிருந்தபடி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தோட்ட தொழிலாளர்கள் வருமானம் சம்பந்தமாக அரச தலைவர்களான, இப்போது நியூயார்க்கில் என்னுடன் இருக்கின்ற, ஜனாதிபதி மைத்திரியிடம் இதை சொன்னேன். வருமுன் கொழும்பில் பிரதமர் ரணிலிடமும் இதை சொன்னேன். நாட்கூலி ‘சம்பள’த்துக்கு அப்பால், தோட்டங்களில் வாழும் மலையக மக்களின் வருமானங்களை அதிகரிக்கும் முகமாக, மேலதிக ‘வாய்ப்புகளை’ வழங்க இலங்கை அரசாங்கம் கடமை பட்டுள்ளது என் அரசு தலைவர்களிடம் கூறியுள்ளேன்.
இந்நாட்டில், அரசியல், சமூக, கல்வி, பொருளாதார ஆகிய ஏதாவது காரணங்களால், குறை வளர்ச்சி கண்டுள்ள பிரிவினர் இருந்தால், அவர்களை கண்டறிந்து, நிவாரணம் வழங்கி, அவர்களை தேசிய மட்டத்துக்கு கொண்டு வர வேண்டிய அதிகாரம் எனது அமைச்சுக்கு இருக்கின்றது.
இது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், நானும் கடந்த வருடம் ஒரு கூட்டு அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்பித்தோம் ஆகவே தோட்ட தொழிலாளர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்ற அடிப்படையில், இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் ஒன்றையும் விரைவில் சமர்பிக்க நான் முடிவு செய்துள்ளேன் என மனோகணேசன் தெரிவித்துள்ளார்.