உடனடி முத்தலாக் முறையை சட்டவிரோதமாக அறிவிக்கும் மத்திய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இஸ்லாமியர்களின் திருமண முறிவு முறையான முத்தலாக் நவீன காலங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கையடக்கத் தொலைபேசிகளிலும், குறுந்தகவல்களிலும், முத்தலாக் கூறி கணவன் மனைவியை விவாகரத்து செய்து வருகின்றனர்.
இதனைத் தடுப்பதற்காக மத்திய அரசு சட்ட மசோதாவினை மாநிலங்களவையில் நிறைவேற்ற கடும் முயற்சி மேற்கொண்டும் முடியாமல் போனதால் அவசர சட்டம் மூலம் உடனடி முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வர முடிவு செய்து அதற்கான ஒப்புதலை பெற்றது.
இந்நிலையில், இந்த புதிய சட்டத்தை எதிர்த்து கேரளாவைச் சேர்ந்த சமஸ்தா கேரளா ஜமிய்யத் உல் உலமா என்ற இஸ்லாமிய அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. முன்னதாக, மும்பையைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் மசூத் அன்சாரி உள்ளிட்ட 3 பேர் இணைந்து மும்பை உயர்நீதிமன்றத்தில் முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.