மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத் தொகையை வசூலிக்கத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவின் மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.எனினும் அவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி நால்வரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இதனை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி தான் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் அவரை வழக்கிலிருந்து விடுவித்தும் ஏனைய மூவருக்கும் நான்காண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது.ஜெயலலிதா மறைந்து விட்டதால் அவருக்கு தண்டனை வழங்க முடியாது என்ற போதிலும், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி அவரிடமிருந்து 100 கோடி ரூபாய் அபராதத் தொகையை வசூலிக்க வேண்டி உள்ளது, அதனை எவ்வாறு வசூலிப்பது எனக் கேட்டு கர்நாடக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் இந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து மறுசீராய்வு மனுவை கர்நாடக அரசு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு இன்று தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் அமர்வு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஏற்கனவே கூறியபடி ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதால் அபராதம் வசூலிக்க தேவையில்லை எனக் கூறி மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.