ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை நீக்குமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து ஈரானுடன் செய்துகொண்ட அனைத்து ஒப்பந்தங்களையும் மீளாய்வு செய்யப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தனக்கு எதிரான அடிப்படையற்ற அரசியல் ரீதியிலான குற்றச்சாட்டுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தெரிவித்துள்ளார்.
வியன்னா அமைதி ஒப்பந்தத்தின்படி பிரச்சனைகளை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்கும் உரிமையை வழங்கும் நெறிமுறைகளை கைவிட ஏற்கனவே அமெரிக்கா முடிவு செய்துவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா நீக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஈரான் விடுத்திருந்த வேண்டுகோளினையடுத்து நெதர்லாந்திலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணையில் அமெரிக்கா மற்றும் ஈரான் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிலையில் சர்வதேச நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தது.
அதேவேளை சர்வதேச நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ள ஈரான் அமெரிக்காவின் பொருளாதார தடைகள் சட்டத்துக்கு புறம்பானவை என்பதை நீதிமன்றத்தின் உத்தரவு காட்டுவதாக தெரிவித்துள்ளது.