இலங்கை மற்றும் நோர்வே நாடுகளுக்கிடையே வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த 03ம் திகதி மாலை ஒஸ்லோ நகர மெஷ் மண்டபத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்குமிடையிலான வணிக நடவடிக்கைகளை எவ்வாறு மேலும் விரிவாகவும், முறையாகவும் மேற்கொள்ள முடியும் என கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இரு நாடுகளுக்குமிடையிலான வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பாக பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்த வர்த்தகர்கள், அது தொடர்பாக மேற்கொள்ள முடியுமான விரைவான தீர்வுகள் தொடர்பாகக் கலந்துரையாடினர்.
கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜயமுனி செய்சா, பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ஹேஷா விதானகே, நோர்வே நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் அருஷா குரே ஆகியோர் உட்பட இரு நாடுகளினதும் பெருமளவிலான வர்த்தகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.