Home இலங்கை வல்லை வெளி, சனி முழுக்கு , மயிலிட்டி – “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்

வல்லை வெளி, சனி முழுக்கு , மயிலிட்டி – “பொஸிற்றிவ்” பொன்னம்பலம்

by admin

சனி முழுக்கு 11

சண்டைக்குப் பிறகு இன்னாற்றை காணி இது, இன்னாற்றை காணி இது எண்டு  கண்டுபிடிக்க வலு கஷ்டமாக்கிடக்கிற இடமும் உண்டு. விட்ட காணியள் பலதைப் பாக்கேக்கை  சிலதுகள் வல்லை வெளி மாதிரித் தெரியிற காணியாயும் கிடக்கு.  சிலது மாங்குளம் பக்கம் தெரியிற பத்தைக் காடுமாதிரியும் கிடக்கு. அப்ப ஏதோ ஒரு விதத்திலைதான் கண்டு பிடிக்க வேண்டிக் கிடக்கு. அது போகட்டே! இது இப்ப நான் சொல்லப்போறது குடிசனம் இருக்கிற சூழலிலை இருக்கிற ஒரு காணி பூமியைப் பற்றினது. எங்கடை குடி மனேக்கை ஒரு வீடு. அந்தக் காலத்திலை அவை சிங்கப்பூரிலை உளைச்சுக் கொண்டு வந்து கட்டினது. அதிலை இருந்த சிலபேர் சண்டைக்கு முதலே படிக்கக்கிடிக்க எண்டு வெளிநாடு போவிட்டினம். மிஞ்சி இருந்த ஒண்டு இரண்டுபேரும் சண்டையோடை வெளிநாடு போய்ச் சேந்திட்டினம். கனகாலம் இஞ்சத்தைத் தொடர்பு எண்டு ஒண்டும் இல்லை. அப்ப கனகாலம் தேடுவாரில்லாமல் கிடந்த காணிக்கை தன்ரை மாட்டைக் கட்டிக் கொண்டு வந்தவன் தான் சின்னராசு. அவன்  மயிலிட்டிப் பக்கம் இருந்து இடம் பெயர்ந்து வந்தவன். சண்டை முடிஞ்சாப் பிறகு அவன் இருந்த வீட்டுச் சொந்தக்காரன் வன்னியிலை இருந்து குடும்பத்தோடை வந்து எழும்பச் சொல்லி ஆக்கினை குடுத்தவன். சின்னராசும் அரியண்டம் வேண்டாம் எண்டிட்டு எழும்பி அந்த சிங்கப்பூரான்ரை காணிக்கை குடிகுந்தீட்டான்.

ஏழெட்டு  வரியம் இருந்தாப்பிறகு அவன்  தன்ரை சொந்த வீடு மாதிரிக் கண்டு காலி வைச்சு இறைச்சு பக்குவமா காணியைப் பாத்துக் கொண்டிருக்கேக்கை “வீட்டுச் சொந்தக்காரன்ரை சொந்தம் நான்” எண்டு  ஒண்டு வந்து “வீட்டை உடனை காலி பண்ண வேணும். அப்பிடிப் பண்ணாட்டில் பிரச்சினை வரும். என்க்கு அவனைத் தெரியும். இவனைத் தெரியும். அப்பிடிச் செய்வன்.இப்பிடிச் செய்வன்.”  எண்டு வாள் வெட்டுக் கதையும் கதைச்சவனாம். அதுக்குச் சின்னராசு சொன்னவனாம். “எனக்கு ஒண்டுக்கும் பயமில்லை. வன்னியிலை சாவைக் கண்டு கழிச்சிட்டு வந்தவன் தான் நான். காணியை விடேலாது. விருப்பமெண்டால் போய் காணிச் சொந்தக்காரன வரச் சொல்லு. இதுக்கு மேலை நிண்டால் வீண் வில்லங்கம் வருமெண்டு” – சொல்லிக் கோடாலிப் பிடியைக் கையிலை எடுத்ததுதான் தாமதம் வந்த காய் திரும்பிப் பாராமல் எடுத்தானாம்  ஓட்டம்.

இந்தக் கதை கடகடவெண்டு பரவ வெளிநாட்டிலை இருக்கிற அந்த வீட்டுக்காரற்றை கடைசிப்பெடி   ஆரையோ பிடிச்சு  ரெலிபோனிலை சின்னராசுவோடை கதைச்சு  தான் வரும்வரைக்கும் ஆர் வந்தாலும் காணியை விட்டிட வேண்டாம் எண்டு  சொல்லிப்போட்டாராம். பிறகுதான் தெரிஞ்சிது காணியை விடச் சொல்லி வந்தது டுப்ளிக்கெற் எண்டு. உப்பிடித்தான் எத்தினை பேற்றை காணியை அபகரிச்சு வைச்சிருக்கிறாங்கள் தெரியுமே?

சிலபேர் விலாசம் இல்லாமல் போனபடியாலை காணியளைச் சொத்துகளைப் பிடிச்சவனுகளுக்கு வாச்சுப் போச்சுது. சண்டை முடிஞ்ச கையோடை கிடைச்சது மிச்சம் எண்டு  பலர் வந்து கண்டதுகளுக்குக் காணியளை வித்துப்போட்டுப் போட்டினம். இப்ப அதிலை அவங்கள் வந்து இருந்து கொண்டு நடுச் சாமத்திலை எழும்பி அக்கம் பக்கத்திலை கிடக்கிற தடி தண்டுகளை அள்ளுறதும், எல்லைக் கதியாலைத் தள்ளிப் போடுறதுமா பெரிய அதிகுதியாக் கிடக்கு.

கொஞ்ச நஞ்சமெண்டால் பறவாயில்லை. அரைப் பரப்பு, ஒரு பரப்பெண்டு பெருவாரி நிலத்தையெல்லே பிடிச்சு வைச்சிருக்கிறாங்கள். சண்டைக்குப் பிறகு உப்பிடி இப்பிடி எல்லாம் பணக்காரரானவையள் கனபேர். கடைசி சண்டை நடந்துகொண்டு இருக்கேக்கை உயிரைக் காவாந்து பண்ணினால்போதும் எண்டு சனம் ஓடேக்கை செத்த பிணத்திலை இருந்து நகை நட்டுகளையும் கழட்டக் கன பேர் மினைக் கெட்டவையாம். இடம் பெயந்து வன்னிக்குப் போகேக்கை வெறும் சொப்பிங் பாக்கோடை போனவை வரேக்கை நூறு நூற்றைம்பது பவுணோடை வந்த கதை தெரியுமோ? என்ன எண்ணைக் கிணறிருக்கிற சவுதியிலையே இருந்து வந்தவை? வந்த உடனை  தூந்து போய்க் கிடந்த கிணத்தைத் திருத்திக்  கட்டிச்சினம். வரம்பு வாய்க்காலைக் கட்டிச்சினம். கண்ட கண்ட காணியளையெல்லாம் காசைக் குடுத்து வேண்டிச்சினம். வீட்டிலை உள்ள ஒவ்வொருத்தருக்கும் ஆளுக்கொரு  மோட்டார் சைக்கிள், சைக்கிள் எண்டு அவைபட்ட பாடு. நல்ல காலம் அவை வீட்டு நாய்க்கு சைக்கிள் ஓடத் தெரிஞ்சிருந் தால் அதுக்கும் சைக்கிளை வேண்டிக் குடுத்திருப்பினம். பலர் ஹயஸ் வேண்டி றைவரை வைச்சு கூலிக்கும் விட்டவை. அப்பிடி வந்த பலர் இண்டைக்கு வெள்ளை வேட்டியும் கட்டிக் கொண்டு நியாயம் கதைச்சு, சண்டித்தனமும் விடுகினமெண்டால் பாருங்கோவன்.

பலர் காணியளைப் பிடிச்ச மாதிரி, பொதுச் சொத்துகளையும் அதுதான் கோயில் காணியளைப் பிடிச்சு ஆட்சிப்படுத்தியும் வைச்சிருக்கினம். அப்பிடிக் கோயில் சொத்தை அபகரிச்சு வைச்சிருக்கிறதுக்கு சில கோயில் காரரும் உடைந்தையாம். அவை மெல்லக் கண்ணைக் காட்டிப்போட்டுப் பேசாமல் இருக்கினமாம். கோயில் சொத்தைக் களவெடுத்துத் திண்டால்  குலநாசம் எண்ணுறவையெல்லே? அப்ப உப்பிடிக் கோயில் சொத்தைக் கள்ளமா  எடுத்து அனுபவிக்கிறவைக்கு என்ன நடக்கும் எண்டு நினைக்கிறியள்? தெய்வம் நிண்டு கொல்லும் எண்டது அப்ப. ஆனால் இப்ப பாக்கிறன் அடி அப்பப்ப விழுகிது.

நீங்கள் கேக்கலாம். மக்கள் சேவைதானே மகேசன் சேவை. கோயில் சொத்துத்தானே சனம் அனுபவிக்கட்டே எண்டு. ஓம் அனுபவியுங்கோ. பறவாயில்லை. ஆனால் அதுக்கு ஒரு முறை இருக்கெல்லே? அந்த முறைப்படி எழுத்திலை அவையிட்டைத் துண்டை வேண்டி அதுக்குரிய ஒரு தொகையைக் கோயிலுக்குக் கட்டி செவ்வையா பத்திரங்களை எழுதி வேண்டி அனுபவியுங்கோவன். இது அதைவிட்டிட்டு அடாத்துப் பண்ணிக் கொண்டிருந்தால்..! ஆரோ ஒருத்தன் அந்தச் சொத்தைக் கோயிலுக்கு எழுதேக்கை என்ன நோக்கத்திலை எழுதினானோ, அது நடக்க வேணும். மூண்டு நேரமும் அந்தக் கோயிலை விளக்கு எரிய வேணும் எண்டும், முக்காலமும் பூசை புணருத்தாரணம் ஒழுங்கா நடக்க வேணும் எண்ட கரிசகனையிலை எல்லே அந்தச் சொத்தை அவை கோயிலுக்கு எழுதி வைச்சிட்டுச் செத்திருப்பினம். அப்ப அவையின்ரை அந்த விருப்பத்துக்கு மாறா ஒண்டும் நடக்கப்பிடாது. என்ன?

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More