Home இலங்கை முள்ளிவாய்க்காலில் தாய் கொல்லப்பட்டதை அறியாமல் பால் குடித்த ராகினி, இன்று சாதனை சிறுமி! தீபச்செல்வன்

முள்ளிவாய்க்காலில் தாய் கொல்லப்பட்டதை அறியாமல் பால் குடித்த ராகினி, இன்று சாதனை சிறுமி! தீபச்செல்வன்

by admin

இலங்கைத் தீவில் சிறந்த கல்வி அறிவு கொண்டவர்களாக வரலாற்றில் ஈழத் தமிழர்களே இருந்துள்ளனர். பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தில், அன்றைய சிலோன் மக்கள் சார்பில் ஒரு பிரதிநிதியாக சிறந்த கல்வியறிவு கொண்ட சேர் பொன் இராமநாதனே இருந்துள்ளார். சேர் பொன் இராமநாதன் சென்னை பிரசின்டசி கல்லூரியில் கற்றிருக்கிறார். சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் ஈழத் தமிழ் மக்களின் கல்வியை அழிக்க சிங்கள அரசுகள் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தன.

தனிச்சிங்கள சட்டம், கல்வித் தரப்படுத்தல் சட்டங்களுடன் போர்க் காலத்தில் பள்ளிகள்மீது குண்டுகளை வீசி அப்பாவி மாணவர்களை தொகை தொகையாக கொன்றழித்தன. பள்ளிச் சீருடைகள் குருதியால் சிவப்பாகிவிட, சிதைக்கப்ட்ட குழந்தைகளையும் சிதைக்கப்ட்ட பள்ளிகளையும் ஈழமண் ஒருபோதும் மறவாது.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு யுத்தத்தில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று பாராமல், போர் தவிர்ப்பு வலயங்களில் பதுங்கியிருந்த மக்கள்மீது தாக்குதல் நடத்தியமைக்கு சாட்சியாக இருக்கிறாள் முல்லைத்தீவை சேர்ந்த ராகினி. இலங்கையில் அண்மைய நாட்களில் ராகினி கவனத்தை ஈர்க்கும் சாதனை சிறுமியாக வலம் வருகிறாள். இலங்கையில் ஐந்தாம் வகுப்பில் வறிய மாணவர்களின் நிதி ஊக்குவிப்புத் தொகைக்காக புலமைப் பரிசில் பரீட்சை நடப்பதுண்டு. அதன் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இதில் தமிழ் மாணவர்கள் இருவர் இருநூறு புள்ளிகளுக்கு 198 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த திகழ்ஒளிபவன் மற்றும் நதி. சிங்கள மாணவர்கள் 199 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். எல்லாப் பரீட்சைகளிலும் ஒரு புள்ளியால் சிங்கள மாணவர்கள் உயரும் கல்வி ரகசியம்தான் இன்னமும் புரியாதுள்ளது. இதைப்போல கிளிநொச்சியை சேர்ந்த தேனுசன் 196 புள்ளிகளையும் கதிர்நிலவனும் தர்மிகனும் 195 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

இவர்களின் மத்தியில் 169 புள்ளிகளைப் பெற்றிருக்கிறாள் முல்லைத்தீவு முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவி ராகினி. ஆனால் எல்லோரையும் பின்தள்ளி தன்னை பேசுபொருள் ஆக்கியுள்ளாள் ராகினி. ஏனெனில் ராகினி முள்ளிவாய்க்காலின் சாட்சி. முள்ளிவாய்க்காலின் நம்பிக்கை. முள்ளிவாய்க்கால் யுத்தம் நடந்தபோது இலங்கை அரச படைகள் நடத்திய கோரத் தாக்குதலில் தன்னை கை ஒன்றை இழந்தாள் ராகினி.

அது மாத்திரமல்ல, அவளின் தாயரும் அந்த தாக்குதலில் கொல்லப்பட்ட தந்தையும் படுகாயமுற்றார். தமிழினம் மாத்திரமல்ல, மனசாட்சி உள்ள எவராலும் மறக்க முடியாத முள்ளிவாய்க்கால் காட்சிகளில் ஒன்று இறந்த தாய்மார்களில் குழந்தைகள் பால் குடித்துக் கொண்டிருந்தது. ஆம், தனது தாயார் கொல்லப்பட்டு இறந்துபோனதை அறயிாத ராகினி தனது தாயில் பால் குடித்துக் கொண்டிருந்தாள். அப்போது அவள் பிறந்து எட்டுமாதங்கள்தான்.

ராகினியை அவரது அப்பம்மாதான் தற்போது பாதுகாவலாக வளர்த்து வருகிறார். பிரத்தியேக வகுப்புக்கள் எதற்கும் செல்லாமல், பாடசாலைக் கல்வியுடன் தான் இந்தப் பெறுபேற்றை பெற்றிருக்கிறாள் ராகினி. பிரத்தியேக வகுப்புக்களும் இன்ன பிற வசதிகளும் கிடைந்திருந்தால் 200க்கு 200 புள்ளிகளை இவள் பெற்றிருப்பாள். தனக்கு கற்பித்த ஆசிரியர்களைப்போலவே தானும் ஒரு ஆசிரியராக உருவாகி எதிர்காலச் சந்ததிக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறாள் ராகினி. முள்ளிவாய்க்காலில் மீண்டெழுந்த இந்த நட்சத்திரம் இவள். போர் தின்ற பல ஆயிரம் ஈழக் குழந்தைகளின் சார்பிலான நம்பிக்கை விதை இவள்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More