176
2ஆம் இணைப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர் இராணுவ முகாமுக்குள் சென்றதை நேரில் கண்டதாக சாட்சி ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று சாட்சியமளித்தார். அரியாலை பகுதியில் கடந்த 1996ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சி. சதிஸ்தரன் முன்னிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்காக எடுத்துகொள்ளப்பட்டது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தமது மகன் இராணுவ முகாமுக்குள் சென்றதாகவும் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டதாகவும் நேரில் கண்ட பெண் ஒருவர் பலாலி இராணுவ முகாமுக்கு வந்து வாக்குமூலம் வழங்கினார் என்றும் அந்தப் பெண் தற்போது இறந்துவிட்டார் என்றும் இளைஞன் தாயார் நீதிமன்றில் சாட்சியமளித்தார்.அதேவேளை வழக்கு இன்று விளக்கத்துக்கு வந்த போது, 5ஆவது பிரதிவாதியான சட்டமா அதிபர் சார்பில் மூத்த அரச சட்டவாதி நீதிமன்றில் முன்னிலையானார்.
அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, இந்த வழக்கில் மனுதாரரால் முற்படுத்தப்பட்ட கண்கண்ட சாட்சியிடம் அரச சட்டவாதி குறுக்குவிசாரணையை முன்னெடுத்தார்.யாழ்ப்பாணம் அரியாலை துண்டி இராணுவ முகாமுக்குள் இளைஞர் சென்றதை அவதானித்தேன். அவரை மறுநாள் காலை காணவில்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர்” என்று குறுக்குவிசாரணையின் போது கண்கண்ட சாட்சி சாட்சியமளித்ததார்.
இதுதொடர்பில் எங்கேயாவது சத்தியக்கூற்று வழங்கியுள்ளீர்களா? என்று சாட்சியிடம் அரச சட்டவாதி கேள்வி எழுப்பினார். சாட்சி இல்லை என்று பதிலளித்தார். தொடர்ந்து இளைஞனின் தாயாரிடமும் தந்தையாரிடமும் சாட்சியம் பெறப்பட்டது.
“எனது மகன் துண்டி இராணுவ முகாமுக்குள் செல்வதை பெண் ஒருவர் கண்டார். அவர் அது தொடர்பில் எங்களுடன் பலாலி இராணுவத் தலைமையகத்துக்கு வந்து வாக்குமூலம் வழங்கினார். எனினும் அவர் தற்போது இறந்துவிட்டார்” என்று இளைஞனின் தாயார் சாட்சியமளித்தார்.இந்த நிலையில் வழக்கு தொடர் விளக்கத்துக்காக எதிர்வரும் டிசெம்பர் 11ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னணி.
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கடந்த 1996ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டார். அவரை இராணுவத்தினர் கடத்திச் சென்று தடுப்பு முகாமில் தடுத்துவைத்துள்ளனர் என்று இளைஞனின் பேர்த்தியரான குணவதி நடேசர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு எழுத்தாணை மனுவைத் தாக்கல் செய்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாத முற்பகுதியில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் அரியாலை துண்டி இராணுவ முகாமில் 1996ஆம் ஆண்டு பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய ஜெயவர்த்தன முதலாவது பிரதிவாதியாகவும் பூசா தடுப்பு நிலைய பொறுப்பதிகாரி இரண்டாவது பிரதிவாதியாகவும் இராணுவத் தளபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் முறையே 3, 4 மற்றும் 5ஆவது பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டனர்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆரம்ப விசாரணைகள் சுமார் 30 மாதங்களாக இடம்பெற்றன. நிறைவில் மனு தாரரின் கோரிக்கைக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவானுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28ஆம் திகதி மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளை வழங்கினார்.
Spread the love