தமிழ் தேசிய கூட்டமைப்பு சமஷ்டி என்று கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐ.தே.கவின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெளிவாக கூறிவிட்டனர் ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்று.
ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்றால் அதை மஹிந்த ராஜபக்ச காலத்திலேயே பெற்றிருக்கலாம் என வடக்கு மாகாணத்தின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “சமஷ்டி அடிப்படையிலான தீர்வு சமஷ்டி குணாம்சங்களுடனான தீர்வு என்று கூட்டமைப்பு சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் காலிமுகத்திடலில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என கூறியுள்ளார்.
பின்னர் பேசிய சம்பிக்க ரணவக்க தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணக்கம் காணப்பட்டபடி ஒற்றையாட்சிக்குள் தீர்வு காணப்படும் என்றார். லக்ஷ்மன் கிரியெல்லவும் ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்கிறார்.
ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்றால் யாரும் இந்த ஆட்சியை கொண்டு வந்திருக்க வேண்டிய தேவையில்லை. யாரும் தமது ஆதரவை இந்த ஆட்சிக்கு வழங்க தேவையுமிருக்காது. காரணம் ஒற்றையாட்சிக்குள் தீர்வைக்காண இதற்கு முன்னரும் பலர் தயாராக இருந்தனர். ஏன் மஹிந்த ராஜபக்சகூட ஒற்றையாட்சிக்குள் தீர்வைக்காண தயாராக இருந்தார். திஸ்ஸ விதாரண ஆணைக்குழுவில் தான் கூட அதை நிராகரித்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐ.தே.க.விற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கிய பின்னர் கூட நீதியமைச்சர் கூறுகிறார்- அரசியல் கைதிகள் என யாருமில்லையென. அப்போதும் கூட்டமைப்பினர் வாய்மூடி இருக்கிறார்கள்.
1948 ஆம் ஆண்டிற்கு பின்னர் கிடைத்த பேரம்பேசும் சக்தியை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரியாக பயன்படுத்தவில்லை. தமக்கிருந்த பேரம்பேசும் சக்தியை பாவித்து, தமிழ்மக்களின் அன்றாட பிரச்சினைகளை கூட தீர்க்கவில்லை. அரசியல்தீர்வை பெற்றுக்கொள்ள முடியவில்லையென்றால் அரசுக்கு வழங்கப்படும் ஆதரவை கூட்டமைப்பு மீளப்பெற வேண்டும் என்றார்.