இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள் பொஸிற்றிவ் பொன்னம்பலம்

அவை வலு பிளானான ஆக்கள் – திட்டம் போட்டுக் களவெடுக்கக் கூடியவை -பொஸிற்றிவ் பொன்னம்பலம்

உலக உறவுகளுக்கெல்லாம்  பொன்னம்பலத்தின்ரை இனிய 2019  புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.இதுவரைக்கும் பல சண்டை சச்சரவுகள் வந்திருக்கும். பல குழப்படியள் நடந்திருக்கும். பல திருகுதாளங்களைச் செய்திருப்பம். இனிமேல் எல்லாத்தையும் கைவிட்டிட்டு நல்ல மனுசராய்ச் சீவிப்பம் எண்ட ஒரு முடிவோடை புத்தாண்டை வரவேற்பம். என்ன? சரியோ!

இந்த முறை புத்தாண்டு அவ்வளவா வாய்க்கேல்லை. ஏனெண்டால் வன்னிப்பக்கம் பெய்த மழையாலை வெள்ளப் பெருக்கு வந்து சனத்துக்கு அழிவுகளைத் தந்தபடியாலை அதுகளுக்கு என்ன செய்யலாம்? ஏது செய்யலாம் எண்டு அந்தரிச்சுத் திரிஞ்சபடியாலை கொண்டாட்டங்களிலை மனம் ஏவேல்லை. ஏதோ நான்  ஒருதன் ஓடுப்பட்டுத் திரிஞ்சு ஒண்டும் நடக்கப்போறதில்லை எண்டது எனக்கு வடிவாத் தெரியும். ஆனால் நாங்கள் வன்னிக்கு இடம்பெயர்ந்து இருந்த காலத்திலை எங்களுக்குத் தனிப்பட்ட முறையிலை உதவி ஒத்தாசை செய்த சனத்துக்கு ஒண்டெண்டால் அவையளைக் கைவிடேலுமோ? நாங்கள் அந்தரிச்சுக் கொண்டு போயேக்கை எங்கடை ஊர், பேர் என்னெண்டு தெரியாமை, கிடந்ததைச் சமைச்சுத் தந்து, தங்கடை இருப்பிடத்தையும், படுக்கையையும் எங்ளோடை பகிந்தவையளை மறக்கேலுமோ? அவைதான் எங்கடை உறவு எண்டு ஏற்றுக் கொண்டு இப்ப பதினைஞ்சு, இருபது வருசமாச்சு.“தானாடாவிட்டாலும் தசை ஆடும் எண்டு சொல்லுவினம்” அப்பிடிப்பட்ட  உறவாப் போச்சு எங்கடை வன்னி உறவு. சண்டை நேரம் எண்டாலும் சண்டை நடந்து துயரப்பட்டதை மறைச்சதெல்லாம் அவையின்ரை பண்பான கதையும், பேச்சுந்தான்.

வெள்ளம் வந்ததெண்டு கேள்விப்பட்ட உடனை வானைப் பிடிச்சுக்கொண்டு ஓடிப்போனம்.அங்கை  போக விடாமல்  மழை பெஞ்சபடி. என்னோடை வந்தவங்கள் சொன்னாங்கள் “கொஞ்சம் பாத்துப் போவம் பொன்னம்பல அண்ணை,” எண்டு. உடனை எனக்குக் கோபம் வந்திட்டுது. “கொஞ்சம் பாத்துப் போக நான் வரேல்லை. நீங்கள் வேணுமெண்டால் வானைக் கொண்டு போங்கோ. நான் நடந்து போவன்” எண்டு வந்தவையிட்டைச் சொல்லிப்போட்டு அவையளை நிமிந்து பாக்காமல் நடக்கத் துவங்கினன். என்னோடை வந்தவை விறைச்சுப் போச்சினம். “அண்ணை நாங்களும் வாறம்,” எண்டபடி என்ரை கையைப் பிடிச்சு இழுக்கத் துவங்கிவிட்டினம். ஒரு மாதிரிஎங்கடையாக்கள்  நிண்ட இடத்துக்குக் கிட்டப் போவிட்டம். அங்கை அவை நிண்ட நிலையைக் கண் கொண்டு பாக்கேலாமல் போச்சுது. என்னையறியாமல் அழுதுவிட்டன் எண்டால் பாருங்கோவன். அப்பதான் நான் யோசிச்சன். வெள்ளம் வந்து வடிஞ்சு போனாப்பிறகு போய் லட்சம் குடுக்கிறதைவிட அவை துயரத்திலை இருக்கேக்கை போய்ப் பாத்து அவையளை ஒருக்காக் கட்டிப் பிடிச்சு அழுது அவையின்ரை துயரத்தைக் கேட்டு வாறதிலைதான் பெறுமதி இருக்கெண்டு. என்னோடை வந்தவையும் அதைத்தான் சொல்லுச்சினம்.

போன உடனை என்னத்தைப் பேசிறது? என்னத்தைக் கேக்கிறது? எண்டு ஒரு சங்கடமான நிலைமை. கொஞ்ச நேரம் மௌனமாயிருந்திட்டுக் கதைக்கத் துவங்கினால் மழையிலை துவங்கி குளக்கட்டு உடைச்சு வெள்ளம் வந்தவரை கதைச்சம். கொண்டு போன காசையும் அவையின்ரை கையிலை குடுத்து உடனை தேவையானதைச் செய்யச் சொன்னம். சமையல்  சாமான் பிறம்பாவும், சீனி, அங்கர் மா, விசுக்கோத்துப் பைக்கற் எண்டு பலதையும் பிறம்பாவும் கட்டி வைச்சிருந்ததை எடுத்துக் குடுத்தம் . நாங்களும் அவையளிலை ஒராக்களா திண்டு, குடிச்சு அண்டிரவு அங்கையே தங்கி மற்ற நாள்தான் திரும்பி யாழ்ப்பாணத்துக்கு வந்தனாங்கள். வரேக்கை மனசுக்குச் சங்கடமாத்தானிருந்திது. பிறகு மழை விட்டிட்டுது எண்டு கேள்விப்பட்ட உடனை கொஞ்சம் மனசுக்கு ஆறுதலாயிருந்திது. இன்னும் அவைக்குச் செய்ய வேண்டியது கனக்கக் கிடக்கு.

இப்ப அடுத்த கிழமையளவிலைதிரும்பவும் ஒருக்காப்போக இருக்கிறம். போய்த்தான் பாக்க வேணும் அவையின்ரை இட்டிடஞ்சல் என்னவெண்டு. இனித்தான் அவைக்கு உண்மையா ஒரு சப்போட் தேவைப்படும். அப்ப தான் அவையின்ரை தேவை என்னெண்டு அவைக்குத் தெரியும். அதை என்னெண்டு பாத்தால்தான் நிலமையைத் திருப்பவும் வழமைக்குக் கொண்டு வரலாம்.சிலருக்கு வீடு இருக்கும். அவையின்ரை தோட்டம் துரவு எல்லாம் அழிஞ்சு போயிருக்கும். சிலரிட்டை வாகனம் இருக்கும். அதுக்கை தண்ணி உள்ளிட்டு அது ஓடுற கொண்டிசன் இல்லாமல் இருக்கும் . அதை ஓடப் பண்ணிக் குடுத்தால் அவை பிழைப்பினம். அப்பிடித் தேவையானதைச் செய்ய வேணும். அதைவிட்டிட்டுத் தேவை இல்லாத அலுவல் பாக்கக்குடாது.

இதுக்கை ஒரு சங்கதியையும் இடையிலை சொல்ல வேணும். வெள்ளம் எண்ட உடனை எல்லாரும் அங்கர் மாவும், விசுக்கோத்தும், சீனி தேயிலையும், தண்ணிப் போத்திலுந்தான் கனக்கச் சேத்துக் கொண்டு போனவை. சிலபேர் சனத்திட்டை நேரை குடுத்தவை. சிலபேர் தங்களுக்குத் தெரிஞ்ச அதிகாரியளிட்டைக் குடுத்திட்டு வந்திட்டினம். நேரை குடுத்தவைக்குத் திருப்தி. தாங்கள் நேரை சனத்திட்டைக் குடுத்திட்டம் எண்டு. அதிகாரியளிட்டைக் குடுததின்ரை இடம்வலம் ஒருதருக்குந் தெரியாது. அவை ஆரிட்டை வேண்டினவை? ஆருக்குக் குடுத்தவை எண்டு? பிறகு தான்  கேள்விப்பட்டம் “சகோதரங்கள்” போய் கன சமான்களைக் கண்ட விலைக்குக் காசு குடுத்து வாங்கினவை எண்டு. ஒரு பக்கம் சனம் வெள்ளத்துக்கை அந்தரப்பட மற்றப் பக்கம் வியாபாரமும் நடந்திருக்கு . அவை ஐஞ்சு அரிக்கன் லாம்புகளை ஆயிரத்துக்கும் வேண்டிக்கொண்டு வந்து இரண்டு மூண்டு மடங்கு வைச்சு யாழ்ப்பாணத்திலை வித்தும் இருக்கினம்.

இதிலை ஒரு செய்தியை நாங்கள் புலம் பெயர்ந்திருக்கிற உறவுகளுக்குச் சொல்லவேணும். சண்டை முடிஞ்ச கையோடை உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டு நீங்கள்  இருக்கேக்கை,  வன்னிக்கு அதைச் செய்யிறம், யாழ்ப்பாணத்துக்கு இதைச் செய்யிறம், மட்டக்களப்பிலை விழுந்ததை நிமித்திறம் எண்டு உங்களிட்டை வந்து காசு, களஞ்சியா வாங்கினவை எல்லாம் இப்ப எங்கை? அவையிட்டை நீங்கள் குடுத்ததெல்லாம் உண்மையாப் பாதிக்கப்பட்ட ஆக்களுக்குப் போய்ச் சேந்ததோ? அதை அவையிட்டைக் கேட்டனியளோ? அப்பிடிக் கேட்டுப் பாருங்கோ என்ன சொல்லினமெண்டு பாப்பம். அந்தக் கூட்டமெல்லாம் வலு பிளானான கூட்டம். வடிவாத் திட்டம் போட்டுச் சொல்லுவினம். அதைக் கேக்கச் சரியாத்தான் இருக்கும்.

  • பொஸிற்றிவ் பொன்னம்பலம்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.