இலங்கையில் உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பு உருவாக்கமானது, கிணற்றில் போடப்பட்ட கல்லுப்போல அசையாது உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இன்று வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 3 வருடங்களாக தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதாகக் கூறி புதிய அரசியலமைப்புக்கு கட்சிகளினால் வழங்கப்பட்ட ஆலோசனைகள் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் அது வெறுமனவே கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கப்போகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய அரசியலமைப்பானது பாராளுமன்றத்திலே முன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளப்போவதுமில்லை. அதற்குப் பிற்பாடு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்போவதுமில்லை. அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்போவதுமில்லை. எனவே இது எந்வொரு பிரயோசனமும் இல்லாமலே இருக்கப்போவதாகவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கக் கூடியவர்கள் தமிழ் மக்களுக்கு போரினால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாகவோ, அபிவிருத்தி தொடர்பாகவோ எந்தவொரு நிபந்தனைகளும் விதிக்காமல் அரசாங்கத்துக்கு பாதுகாப்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.