புதிய அரசமைப்பினூடாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும். தனி நாடு என்று காலத்துக்குக் காலம் கதைகள் வரும். ஒருமித்த நாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வு வேண்டுமென்று தான் நாம் கேட்கிறோம். அதை விட்டு, தமிழீழக் கனவோடு இருக்கக் கூடாது. இப்படி நான் சொல்வதனால், வெளியே போகும் போது, கல்லெறி விழுந்தாலும் விழும். ஆனால், நான் உண்மையான நிலைப்பாட்டைச் சொல்லியாக வேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு, ஜனநாயக வழிமுறைகள் ஊடாக தீர்வும் தமிழ்த் தலைமையின் வகிபாகமும்” எனும் கருப்பொருளிலான அரசியல் கருத்தரங்கு நிகழ்வொன்று,யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், நேற்று முன்தினம் (12.01.19) மாலை நடைபெற்றது.இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெற்றிகொள்ளும் புதிய அரசமைப்பு நிறைவேறலாம். அதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றனவெனவும் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஜனநாயகம் ஊடாக எமது மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெறமுடியாது என்று, சிலர் கூறியிருந்தார்கள். ஜனநாயகம் இல்லாமல் வேறு எந்த வழியில் தீர்வைப் பெறமுடியுமென அவர்கள் நினைக்கின்றார்கள் தெரியவில்லை என்று கூறியதோடு, நாம் எல்லோரும், ஒரு தேசத்தில் இருக்கின்றோம். ஆனால், தேசம் என்ற சொல்லுக்கு, எந்த வரவிலக்கணமும் இல்லை. ஆகவே, இங்கு மக்கள் தான் முதன்மைப்படுத்தப்படுகிறார்கள். ஆகவே, மக்களுக்கு எந்த வகையில் தீர்வைப் பெற்றுகொடுக்க வேண்டுமென்று ஆராய்ந்தால், அது ஜனநாயகத்தின் ஊடாக முடியுமென்றும் கூறினார்.
ஒவ்வொரு காலத்துக்கும், ஒவ்வொரு தேவை இருந்தது. ஆயுதப் போராட்டம், அஹிம்சைப் போராட்டம் என்று பல வழிகள் ஊடாகத் தீர்வைப் பெறுவதற்கு, அந்தந்த காலங்களில் சந்தர்ப்பங்கள் தோன்றினவெனச் சுட்டிக்காட்டிய அவர், அதைத் தான் இப்போதும் பயன்படுத்துவோம் என்றால், அது முடியாத காரியமெனச் சுட்டிக்காட்டியதோடு, நாம் கடந்து வந்த காலங்களில் பெற்ற அனுபவங்களை வைத்துக்கொண்டு, பன்னாட்டின் ஊடாக எமது தீர்வுகளை, பதில்களைப் பெற்றுகொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றும் அதனை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டுமென்றும் கூறினார்.
பன்னாடுகள் எமக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. அதனை நாம் இறுகப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஜனநாயகம் ஊடாகத் தீர்வைப் பெறவேண்டுமெனக் கூறிய சுமந்திரன், ஊடகங்கள் இன்று மிக மோசமான அரசியலைச் செய்துகொண்டு இருப்பதாகவும் அவை, உணர்ச்சிகளை எழுப்பிவிட்டுச் செல்வதாகக் குற்றஞ்சாட்டியதோடு, புதிய அரசமைப்பில் என்ன விடயம் உள்ளதென்று தெரிந்துகொண்டு, அதை ஊடகங்களில் பிரசுரிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.
புதிய அரசமைப்பில், மாகாணங்களை இணைக்கும் பொறிமுறை உண்டெனச் சொல்லப்பட்டது. அதனை ஒரு பத்திரிகை தவிர, வேறு எவரும் பிரசுரிக்கவில்லை. இந்த “ஏக்கிய இராச்சிய” என்ற பதம், “ஒருமித்த நாடு” என்று தான் பொருள்படுமெனக் கூறிக் கூறியே தான் சலித்துவிட்டதாகத் தெரிவித்த சுமந்திரன், ஆனால் அந்தப் பதம், “ஒற்றை ஆட்சி”யைத் தான் குறிக்கிறதென்று, ஒரு பரவல் கருத்து உள்ளதாகவும் புதிய அரசமைப்பில், “ஏக்கிய ராச்சிய” (ஒருமித்த நாடு) என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.
“நாம் உண்மையைப் பேச வேண்டும். சிங்கள மக்களது மனங்களை வெல்ல வேண்டும். எங்களுக்கு உரியதைத் தான் நாம் கேட்க்கிறோம். நாடு பிரியமாட்டாது. மீண்டும் ஒரு வன்முறை ஏற்படாதென்று அவர்கள் தெரிந்துகொள்ளும் அளவுக்கு, நாம் நடந்துகொள்ள வேண்டும். நாடு பிளவுபடுவதை அவர்கள் விரும்பவில்லை.
“அரசியலில் எதுவும் நடக்கலாம். இது தான் நடக்கும் என்று சாத்திரம் சொல்வதைப் போன்று சொல்ல முடியாது. புதிய அரசமைப்பு வராதென்றுச் சொன்னார்கள். ஆனால், அதன் ஆரம்பம் நடந்துவிட்டது. புதிய அரசமைப்பு வந்தால், தமிழ் மக்களுக்கும் தீர்வு கிடைக்கும். அரசமைப்பு வரலாம், அதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன.
“நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் பலம் எம்மிடம் உள்ளது. அதனை நாம் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளக் கூடாது. நாட்டில் இன்னமும் முழுமையாக ஆட்சி அமைக்கப்படைவில்லை. நேற்று முன்தினம் கூட பிரதியமைச்சர்கள் சிலர் பதிவிப் பிரமாணம் செய்துகொண்டனர். தேசிய அரசாங்கமாக மாறும் நிலைப்பாடு அங்கு உள்ளது. புதிய அரசமைப்பு நிறைவேற, நாம் முயற்சிக்க முடியும். படிப்படியாகத் தான் முன்னேற முடியும். ஆனால் யாழ்ப்பாணத்தில், வைத்தால் குடுமி; எடுத்தால் மொட்டை என்ற நிலையுள்ளது. பன்னாடுகள் அனைத்தும் ஆதரவு தந்துள்ள நிலையில், எமது சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, நல்ல தீர்வைப் பெற்றுகொள்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
“இது விடயத்தில், மென் வலு கடைபிடிக்கப்பட வேண்டும். ஆயுதம் ஏந்தும் சூழல் வேண்டாம். எங்களை நாம் பலப்படுத்த வேண்டும். இங்கிருந்து எல்லோரும் புலம்பெயர்ந்தால், இங்கு வெறுமை தான் உண்டாகும்” என, சுமந்திரன் எம்.பி மேலும் கூறினார்.