Home இலங்கை இரணைமடுவின் வெள்ள அரசியல் – ந.கார்த்திகேசு

இரணைமடுவின் வெள்ள அரசியல் – ந.கார்த்திகேசு

by admin

வெள்ளமும் குளங்களும் வன்னியில் உள்ள மக்களுக்கோ அல்லது அவர்களுக்குச் சேவை வழங்கும் துறைகளுக்கோ புதியனவல்ல. மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இவ்வாறு ஏற்படும் வருணபகவானின் திருவிளையாடல்களும் அதனை எதிர்கொண்டு நிமிரும் சனங்களும் வன்னிக்கு வழக்கமான ஒன்று.

காலம் காலமாக இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வரும் கிளிநொச்சி மண்ணில் இவ்வருடம் ஏற்பட்ட வெள்ளமும் அதனைத் தொடர்ந்து நடந்துவரும் சம்பவங்களும் வன்னியில் வசிக்கும் அல்லது வன்னியைத் தெரிந்த அனைவருக்கும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளன.

மீள்குடியேற்றங்களின் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் எங்கும் எதிலும் கலந்த அரசியல் வன்னியின் வெள்ளத்தையும் இரணைமடுவையும் விட்டு வைக்கவில்லை. காலம் காலமாக நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் செய்து வந்த வேலைகளை கமக்காரர் அமைப்புகளிலிருந்து கட்சிக்காரர்கள் வரை செய்யத் தலைப்பட்டு விட்டனர்.

இரண்டு வருடத்திற்கு மேலான கடும் வரட்சி இவ்வருடம் கடும் மழை ஒன்றை கட்டியம் கூறியபடி இருந்தது. அதற்கேற்றாற்போல வான் பிளந்து கொட்டிய மழையால் கிளிநொச்சியில் 09 பிரதான குளங்களும் 350 ற்கு மேற்பட்ட சிறு குளங்களும் கார்த்திகை மாதத்திலேயே நிரம்பித் தளம்பத் தொடங்கிவிட்டன. மார்கழி முதல் வாரத்தில் அனைத்து ஊடகங்களும் ‘கிளிநொச்சிக் குளங்கள் வான் பாயத் தாயாராக உள்ளதாகவும் இரணைமடுவின் வான் கதவுகள் எவ்வேளையும் திறக்கப்படலாம்’ எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் சொன்னதாக அறைகூவி மக்களை ‘அவதானம்’ என்றன.

இதனையடுத்து யார் திறப்பது என்ற போட்டியின் இறுதியில் இரணைமடுவின் வான் கதவைத் திறக்க அரசுத் தலைவர் வந்தமை, பழைய ‘தொன்மையான’ நடுகல் பிடுங்கிச் சிதைக்கப்பட்டதாக எழுந்த வதந்திகள் என பரபரப்பிற்குக் குறைவில்லாமல் கிளிநொச்சியில் நாட்கள் கடந்து போயின.

திடீரென 22.12.2018 காலை ‘வன்னியில் வரலாறு காணாத பெருவெள்ளம்’, ‘கிளிநொச்சி வெள்ளத்தில் மிதக்கிறது’, ‘மீட்புப் பணியில் முப்படையினர்’ என்ற திகில் செய்திகளுடன் விடிந்தது.

இவ்வாறு திகிலுடன் தொடங்கிய கிளிநொச்சி வெள்ளம் திடீர் திருப்பத்துடன் இரணைமடு எந்திரிகளுக்கெதிரான விசாரணைக் குழுவில் வந்து முற்றுப் பெற்றிருக்கிறது. இரணைமடுக்குளம் தனது வரலாற்றில் முதற்தடவையாக ஒரு விசாரணைக்குழுவுக்கு முகம் கொடுக்கிறது.

இது தொடர்பில் முக்கிய சம்பவங்கள் நடந்த நாட்களையும் சம்பவங்களையும் ஒரே பார்வையில் பார்க்கும் போது எங்கோ எதுவோ பிசகியது தெளிவாகத் தென்பட்டது.

காரண காரியத்தை அறியப்புறப்பட்டபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி கரகமானவை. அனைத்தையும் விலாவாரியாகக் குறிப்பிடமுடியாதெனினும் முக்கியமானவற்றை நோக்க வேண்டியிருக்கிறது. கார்த்திகை மாத இறுதியில் கிளிநொச்சியின் அனைத்துக் குளங்களும் நிரம்பின.

மார்கழி 5ம் திகதி நீர்ப்பாசனத் திணைக்களம் அரச அதிபருக்கு ‘வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக அனைத்துக் குளங்களும் வான்பாயும் நிலைக்கு வந்து விட்டன. இரணைமடு வான் கதவுகள் எந்நேரமும் திறக்கப்படலாம். எனவே தாழ்நிலப் பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தவும்’ எனக் கோரி முன்னாயத்த எச்சரிக்கையினை விடுத்தது.

மார்கழி 6ம் திகதி மாலையில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் திணைக்கள உயரதிகாரிகள் தலைமையில் அவசர அனர்த்த முகாமைத்துவக் கூட்டம் இடம்பெற்றது.

மார்கழி 20 மற்றும் 21ம் திகதி அதிகாலை வானிலை எதிர்வுகூறல்கள் வடமாகாணத்தில் 75மிமி கன மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக தெரிவித்தன. அப்போது குளத்தின் நீர்மட்டம் 35 அடி 5 அங்குலமாக இருந்தது (புனரமைக்கப்பட்ட இரணைமடுக் குளத்தின் சாதாரண கொள்ளளவு 36 அடி).

மார்கழி 21ம் திகதி காலையிலிருந்து கிளிநொச்சி உள்ளிட்ட வன்னிப் பகுதிகளில் மழை பொழிய ஆரம்பித்தது.

மார்கழி 21ம் திகதி பிற்பகல் 1 மணிவரையில் 40 மிமி மழை பதிவாகியிருந்தது. எஞ்சிய 35 மிமி மழை பெய்தாலும் இரணைமடுவின் நீர்மட்டம் 36 அடி இரண்டு அங்குலம் வரையே செல்லும். மேலதிக இரண்டு அங்குல நீரும் சாதாரணமாகவே கலிங்கு வழியாக வழிந்தோடிவிடும் என்ற அனுமானத்தில் வான்கதவுகளைத் திறக்கத் தேவையில்லை என்ற முடிவிற்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வந்தது. மாலை 4 மணிக்கு வந்த காலநிலை அவதான எதிர்வுகூறல்கள்கூட முன்னைய எதிர்வு கூறல்களையே வழிமொழிந்தன.

மார்கழி 22ம் திகதி அதிகாலை 1 மணியளவில் கனமழை காரணமாக இரணை மடுக்குளத்தின் நீர்வரத்து திடீரென அதிகரிக்கத்தொடங்கியது. இது தொடர்பாக குளத்தின் 24 மணிநேர தொழில்நுட்பச் சுற்றுக் கண்காணிப்புப் பிரிவினரால் குளத்தின் வான் பகுதி அலுவலகத்தில் இருந்த எந்திரிகளுக்கு அறிவிக்கப்பட்டதும் எந்திரிகள் குளத்திற்கு விரைந்தனர்;.

மார்கழி 22ம் திகதி அதிகாலை 3 மணியளவில் இரணைமடுக்குளத்தின் நீர்மட்டமானது அதன் சாதாரண கொள்ளவைக் கடந்து 37 அடியாக உயர்ந்து உச்சக் கொள்ளவான 41 அடியை மீறும் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. ஒரு மணிக்கும் மூன்று மணிக்கும் இடைப்பட்ட இரண்டு மணிநேரத்தில் மட்டும் 190மிமி மழைவீழ்ச்சி குளத்தின் நீரேந்து பகுதிகளில் பதிவாகியிருந்து. குளத்தின் மேலதிக நீர் ஒரு அடி உயரத்தில் கலிங்கு வழியாக வெளியே இரைச்சலுடன் பாய்ந்து கொண்டிருந்தது.

ஊர் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கையில் எந்திரிகள் தமது வாழ்வில் கடினமான தருணம் ஒன்றைக் கடந்து கொண்டிருந்தனர். ஒருபுறம் அணுகுண்டுக்குச் சமமான நீர் நிரம்பிய குளம். மறுபுறம் எதுவும் அறியாது ஆழ்ந்த உறக்கத்தில் உள்ள பொதுமக்கள். உரிய நேரத்தில் வான்கதவுகளைத் திறக்கத் தவறினால் நாட்டில் நடந்த பாரிய இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றாக இரணைமடுக்குளம் உடைந்து கிளிநொச்சி என்ற நகரத்தைத் துடைத்துப் போட்டதாக வரலாறு எழுதிக்கொள்ளும் அபாயம். மறுபுறம் மக்களை எச்சரிக்காது நள்ளிரவில் வான்கதவுகளைத் திறந்தால்; உறக்கத்தில் உள்ளவர்கள் வந்து மேவும் வெள்ளத்திற்குப் பலியாகக்கூடிய ஆபத்து.

எனவே உடனடியாக அரச அதிபர், உதவி அரச அதிபர்கள், கமக்கார அமைப்புகள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் என சாத்தியமான அனைவருக்கும் அதிகாலை 4 மணிக்கு இரணைமடு வான்கதவுகள் திறக்கப்பட உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்திலிருந்து தகவல்கள் பறந்தன.

மார்கழி 22ம் திகதி அதிகாலை 4 மணிக்கு இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுப் படிப்படியாக காலை அனைத்து (12) வான்கதவுகளும் திறக்கப்;பட்டன.

இதனிடையே அதிகாலையில் அடித்துப் போட்ட கடும் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு அனைத்துக் குளங்களையும் நிரப்பி வான்பாய வி;ட்டன. கனகாம்பிகைக் குளம் 2 அடி உயரத்தில் வான்பாய்ந்து கிளிநொச்சி நகரத்திற்குள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்களைச் சூழத் தொடங்கியது.

ஆம். கிளிநொச்சி நகரத்தின் வெள்ளத்திற்குக் காரணம் இரணைமடு அல்ல.

கனகாம்பிகைக் குளத்தின் நீர்வழிந்தோடும் பாதையில் அமைந்துள்ள ஆனந்தபுரம்,கனகாம்பிகைகுளம், இரத்தினபுரம் முதலான ஊர்கள் நீரில் மூழ்கத் தொடங்கின. தயாராக இருந்த இளைஞர்கள மற்றும் படையினர் மக்களை மீட்டெடுக்க நீரில் பாய்ந்தனர். பாதுகாப்பாக மக்கள் மீட்கப்படும் காட்சிகளை ஊடகர்கள் நேரலையாகவும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் முழு உலகத்திற்கும் காட்டிக்கொண்டிருந்தனர்.

மார்கழி 22ம் திகதி காலை 11.30. திடீரெனப் படையினருக்குத் தம்மை மீட்குமாறு அவசர தகவல் கண்டாவளை பிரதேச செயலகத்திருந்து கிடைத்தது. நீருக்குள் மூழ்கியபடி இருந்த கண்டாவளைப் பிரதேச செயலகத்திலிருந்து உதவி அரச அதிபர் மற்றும் ஊழியர்கள் நெஞ்சளவு வந்திருந்த தண்ணீருக்கு மத்தியில் பாதுகாப்பாக மீட்கப்படுவதை ஊடகங்கள் செய்தியாக்கிக் கொண்டிருந்தன. ‘அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் கலந்துரையாடிக் கொண்டிருக்கையில் திடீரென வெள்ளம் வந்து விட்டதாக’ அலுவலகத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் திரண்டு நின்ற மக்களுக்குக் கூறிக்கொண்டிருந்தனர். இரணைமடுக்குள வான் கதவுகள் திறக்கப்பட்டு நான்கு ஐந்து மணித்தியாலங்களில் கண்டாவளைக்கு வந்து சேரும் நீரினால் கண்டாவளை பிரதேச செயலகம் மூழ்குவது வழக்கமானது என்பதால்; ‘மக்களை மீட்க வேண்டியவர்களே’ மீட்கப்படுவதையும் அவர்கள் வந்து சொன்ன ‘கதைகளையும்’ சனங்கள் ‘வியப்புடன்’ கேட்டுக்கொண்டிருந்தனர்.

ஊடகங்களுக்கு கிளிநொச்சி அரச அதிபர் ‘வருட இறுதி ஆகையால் தற்போது நிதி போதுமானதாக கைவசம் இல்லை எனினும் இடம் பெயரும் மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்’ எனப் பேட்டியளித்தார். இது அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகளில் பரிச்சயமானவர்களது புருவங்களை உயரச் செய்தது. ஏறத்தாள மூன்று வாரங்களுக்கு முன்னரே எச்சரிக்கப்பட்ட ஒரு அனர்த்தத்திற்கான தயார் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என அவர்கள் தமக்குள் ஊகித்துக் கொண்டனர். எவ்வித உயிர்பலிகளும் இன்றி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு நகர்ந்து கொண்டனர்.

மார்கழி 22ம் திகதி இரவு 7மணி. உள்ளுர் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் அரச அதிபர் பணிமனையில் அனர்த்த முகாமைத்துவக் குழு கூடியது. அதன்போது ஊடகங்களில் வெளியான 45 நிமிடக் கலந்துரையாடல் ஒளிப்பதிவின் பிரகாரம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினரது கைவசம் ஒரு பாய் கூட இருக்கவில்லை என்பது துலாம்பரமானது.

மார்கழி 23ம் திகதி அனேகமான நலன்புரி நிலையங்களில் மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளுக்காகக் காத்திருப்பதான தகவல் சமூக ஊடகங்களில் பரவியது. காலையிலிருந்து யாழ்ப்பாணத்திலிருந்து சமைத்த உணவுகளுடன் மக்களும் மருந்துகளுடன் மருத்துவர்களும் கிளிநொச்சிக்குப் படையெடுக்கத் தொடங்கினர். எவர் எங்கு போகிறார் ? எங்கு போக வேண்டும் ? என்ன கொடுக்கிறார்? என்பதை ஒருங்கிணைக்க வேண்டியவர்கள் அசைவற்றுக் கிடந்தனர்.

வான்கதவுகளும் திறக்கப்பட்ட தகவல் நன்கு தெரிந்திருந்தும் கண்டாவளைப் பிரதேச செயலகத்தில் அரச அதிபர் உட்பட அனைத்து அதிகாரிகளும் எவ்வித முன்னெச்சரிக்கை உணர்வும் இல்லாது இருந்தமை மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் களஞ்சியசாலையில் ஒரு துரும்பு கூட இல்லாதிருந்தமை, முதல் இரண்டு தினங்களில் உதவிகளை ஒருங்கிணைக்கும் கட்டமைப்பு எதுவும் உரியவகையில் செயற்படாமை ஆகியன மாவட்டத்தின் வெள்ள முன்னாயத்த நிலை எவ்வாறு இருந்தது என்பதற்கான நல்ல உதாரணங்கள்.

இந்த நிலையில் ஏற்பட்ட அழுத்தங்களையும் எழக்கூடிய கண்டனங்களையும் திசை திருப்பும் நோக்குடன் கிளிநொச்சி வெள்ளத்திற்கு இரணைமடுவே காரணம் எனக் கூறித் தப்பும் முயற்சியில் பொறுப்புவாய்ந்த எவராவது ஈடுபடுகிறார்களா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இயல்பாகவே ஏற்பட்டுள்ளது.

இவற்றின் மத்தியில் குளத்து வான்கதவுகளைத் திறப்பதில் உள்ளுரில் பலமான அரசியலாளர்களுக்கு மத்தியிலான பனிப்போரானது இறுதியில் அரசுத் தலைவர் வந்து திறந்து வைக்கும் அளவிற்கு அரசியலானதும், இந்த அரசியல் சுழலில் அரச அதிகாரிகளான எந்திரிகள் பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாகி, மாட்டிற்கு விழுந்த பக்கத்தில் குறி சுடுவது போல ‘இன்னார் இன்னாருடைய ஆள்’ எனக் ‘அரசியல் குறி’ அவர்கள் மீது சுடப்படுவதும் நடந்தேறியதாம்.

இறுதியில் கிளிநொச்சியின் வெள்ள அழிவுகளுக்கு இரணைமடுவே காரணம் பலர் கூறத் தொடங்கிவிட்டார்கள். மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 22 ஆயிரம் சுமார் ஐயாயிரம் வரையாக பேர்களே இரணைமடுவின் வெள்ளத்தினால் பாதிப்பட்டுள்ளனர். எனவே கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது பல மட்டங்களில் ஏற்பட்ட தவறுகளுக்கு ஒரு தரப்பு இலக்கு வைக்கப்படுவது தெளிவாகிறது.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More