பாகிஸ்தான் அணித்தலைவர் சர்பிராஸ் அகமதுவின் இனவெறி பேச்சு குறித்து சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை விசாரணை நடத்தி வரும் நிலையில் அவருக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
டர்பனில் நடைபெற்ற பாகிஸ்தான்- தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையலான 2வது ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. தென்னாபிரிக்க அணி வீரர்களான பெலக்வாயோ- வான்டெர் துஸ்சென் ஜோடி சிறப்பாக விளையாடி வெற்றி பெற வைத்த நிலையில் இந்த போட்டியின் போது பெலக் வாயோவை சர்பிராஸ் அகமது இன வெறியுடன் பேசியமை ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் சர்பிராஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது பேச்சு மூலம் யாராவது மனம் புண்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் எனவும் தான் யாரையும் குறிப்பிட்டு நேரடியாக கூறவில்லை எனத் தெரிவித்தும் மன்னிப்பு கேட்டு உள்ளார்.
இந்த நிலையில் சர்பிராஸ் அகமதுவின் இனவெறிப் பேச்சு குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை விசாரணை நடத்தி வரும் நிலையில் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 4 முதல் 8 வரை புள்ளிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவருக்கு தடை விதிக்கும் நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது