அமெரிக்க வரலாற்றில் மிகவும் நீண்டநாள் நடந்த அரசு முடக்கத்தை தற்காலிகமாக நிறுத்த அரசியல் அழுத்தங்களின் காரணமாக ஜனாதிபதி டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்
35 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு பிறகு, பெடரல் பணியாளர்களுக்கு மூன்று வார பொருளாதார தேவையை நிறைவேற்ற ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை டிரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால், அவர் கோரி வந்த அமெரிக்கா- மெக்சிகோ இடையிலான சுவர் எழுப்புவதற்கான எந்த நிதியும் இந்த ஒப்பந்தத்தில் வழங்கப்படவில்லை.
தனது தேர்தல் பிரசாரத்தின் முக்கிய விடயமாக சுட்டிக்காட்டிய இந்த சுவர் கட்டுவதற்கான நிதியை ($5.7பில்லியன்) அளிக்காத அனைத்து வரவுசெலவுத் திட்டத்தையும் டிரம்ப் நிராகரித்து வந்தார். ஆனால், அவரது எண்ணத்திற்கு ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அதை தொடர்ந்து நேற்று (25.01.19) அமெரிக்காவின் செனட் மற்றும் பிரதிநிகள் சபை இரண்டும் தற்காலிகமாக இந்த அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.
“பெப்ரவரி 15ம் தேதி வரை, அரசிற்கு நிதியளிக்கவுள்ள இந்த ஒப்பந்தத்தை அறிவிப்பதில், `மிகவும் பெருமையாகவுள்ளது`.
அரசியல் குழப்ப நிலையின்போது, தொடர்ந்து `மிகச் சிறந்த தேசபற்றுமிக்கவர்களாக` பணியாற்றிவரும் அதிகாரிகளுக்கு சம்பளம் அளிக்கப்படும்” என டிரம்ப் தெரிவித்தார்.
அரசின் ` மிகவும் சக்திவாய்ந்த மாற்று`- அதாவது தேசத்தில் அவசர நிலையை அறிவிக்கும் அளவிற்கான முடிவை தான் இன்னும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இதன் மூலம், இராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் நிதி, தெற்கில் சுவர் எழுப்ப பயன்படலாம் என்றாலும், அவ்வாறான நகர்வு, சட்டரீதியான சவாலாக அமையும்.
அமெரிக்காவுக்குமிக உறுதியான சுவர் அல்லது, உலோகத்தாலான தடுப்பு அமைப்பதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், காங்கிரஸிலிருந்து நியாயமான ஒப்பந்தம் கிடைக்கவில்லை என்றால், மீண்டும் பெப்ரவரி 15ஆம் திகதி அரசுப்பணிகள் முடங்கும் அல்லது நாட்டின் நீதி மற்றும் அரசியலமைப்பின் கீழ் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, இது குறித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் அமெரிக்க அரசு முடங்கியதால், அமெரிக்காவின் சட்ட அமலாக்க முகமையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை கேட்டறிந்த பின்னர், டிரம்ப் இந்த ஒப்பந்ததை ஏற்றுக்கொண்டார் எனவும், சுவர் எழுப்புவதற்காக தான் கோரும் $5.7 பில்லியனுக்காக தொடர்ந்து போராட அவர் தயாராக உள்ளார் என்றும் ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.