வவுனியா பேருந்து நிலையத்திற்கு முன்பாக குடிமனைகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை அகற்றக்கோரி, புதிய ஜனநாயக இளைஞர் முன்னணியினால் வவுனியா நகர்ப்பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அரசாங்க பாடசாலை பிரதி அதிபரொருவர் கிழித்தெறிந்த சம்பவம் ஒன்று, நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக அண்மையில் அரச அதிகாரிகளின் சிபாரிசுடன் மதுபானசாலையொன்று திறக்கப்பட்டிருந்தது. குறித்த மதுபானசாலை மக்கள் குடிமனைக்கு மத்தியிலும் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி உணவகத்திற்கும் முன்பாகவும் திறக்கப்பட்டிருந்ததை கண்டித்து வவுனியா பொது அமைப்புக்கள் அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
வவுனியா அரசாங்க அதிபர் இந்த மதுபானசாலையை அவ்விடத்தில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார். எனினும் மதுபானசாலை அகற்றப்படாமையால் புதிய ஜனநாயக இளைஞர் முன்னணியினர் ஜனநாயக வழியில் சுவரொட்டி போராட்டமென்றை நேற்று இரவு முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது வவுனியாவில் பல இடங்களிலும் சுவரொட்டிகளை இரவிரவாக இளைஞர்கள் ஒட்டிய நிலையில் முச்சக்கரவண்டியொன்றில் சென்ற வவுனியா,மன்னார் வீதியில் நகருக்கு அண்மையில் இயங்கும் விசேட கல்வித்திட்டத்தினை உள்ளடக்கிய அரச பாடசாலையின் பிரதி அதிபர் மற்றுமொருவருடன் இணைந்து குறித்த சுவரொட்டிகளை கிழித்து எறிந்து உள்ளார்.
இந்நிலையில் சுவரொட்டிகள் கிழிக்கப்படுவதாக இளைஞர் முன்னணியினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து முச்சக்கர வண்டியை வழிமறித்து ஏன் சுவரொட்டிகளை அகற்றுகின்றீர்கள் என கேட்டிருந்ததுடன் ஊடகவியலாளர்களுக்கும் தகவலை வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் சுவரொட்டிகளை கிழித்த நபர் பிரதி அதிபரொருவராகவும், மொழிபெயர்பாளராகவும் கடமையாற்றும் ஒருவர் என அடையாளம் கண்டுள்ளனர். இதனையடுத்து குறித்த பிரதி அதிபர் அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்