கிளிநொச்சிக்கு இன்று (27) நண்பகல் சென்ற ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இரணைமடுக்குள விவசாய சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
கடந்த வாரம் கலந்துரையாடிய விடயங்களின் முன்னேற்றம் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன் வடக்கு மாகாணங்களின் ஐந்து மாவட்டங்களினதும் விவசாயிகள் பொறியியலாளர்கள் அரச அதிகாரிகள் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தி அமையப்போகும் குழு தொடர்பிலும் விவசாயிகளுடன் இதன்போது ஆராயப்பட்டது.
கிளிநொச்சி, இரணைமடு மற்றும் இரணைமடு குளத்திற்கு நீர் வரும் பகுதிகள் போன்றவற்றில் கடந்த ஐம்பது வருடங்களில் இடம்பெற்ற மழைவீழ்ச்சி மற்றும் குளத்தின் நீர் சேமிப்பு தொடர்பான முழுமையான அறிக்கையினை பெற்று விரிவாக ஆராய்ந்து அதனடிப்படையிலேயே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தினையும் ஆளுநர் இதன்போது வலியுறுத்தினார்.
கடந்த பருவத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி கிடைத்திருப்பதன் காரணமாக குளத்தின் நீர் கொள்ளளவு அதிகமாக காணப்படுவதால் அதனை சரியான ரீதியில் முகாமைத்துவம் செய்வது தொடர்பில் தமக்கு பயிற்சிகள் வேண்டுமென்ற விவசாயிகளின் கோரிக்கையை பாராட்டிய ஆளுநர் , விவசாயிகளுக்கும் இதனுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பயிற்சிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
இரணைமடு குளத்தில் முதல் ஐந்து வருடங்கள் நீர் நிரம்புவதுடன் அடுத்த இரு வருடங்கள் நீர் குறைவதோடு அதற்கு அடுத்த வருடத்திலிருந்து ஐந்து வருடங்களுக்கு மீண்டும் நிரம்பி வரும் சுழற்சி நடைமுறையே ஆரம்பம் தொட்டு காணப்படுவதாக விவசாயிகள் ஆளுநருக்கு தெரிவித்ததோடு குளத்தில் நீர் வற்றிப்போகும் காலத்தில் தாம் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.
விவசாயிகளின் இந்தக் கருத்துக்களை செவிமடுத்த ஆளுநர் இரணைமடுக் குளத்தில் நீர் வற்றிப்போகும் காலப்பகுதியில் விவசாயம் மேற்கொள்ள முடியாமற்போகும் மக்களின் பொருளாதரா நிலைமையினை தொடர்ந்தும் பேண்தகு நிலையிலேயே வைத்துக் கொள்ள சாத்தியமான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதோடு இது தொடர்பில் காப்புறுதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதனூடாக புதிய விவசாயக் காப்புறுதியொன்றை உருவாக்குவது தொடர்பில் ஆராய்வதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் அவர்களும் விவசாயிகளுடனான இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.