Home இலங்கைவனவளத்திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தால் வடக்குக்கே அதிக பாதிப்பு

வனவளத்திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தால் வடக்குக்கே அதிக பாதிப்பு

by admin

 

வடக்கு மாகாணத்துக்கு அதிகளவான நிதி பல்வேறு வகையிலும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் வடக்கு மாகாண   ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் இணைத் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

வனவளத்திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் பாதிப்பு இருந்தாலும் வடக்கு மாகாணத்தில் அதிகூடிய பாதிப்பு இருக்கின்றது. மக்களின் மீள்குடியமர்வு, விவசாயம், அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு இடையூறாக இந்த இரு திணைக்களங்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன

வடக்கு மாகாணம் கால்நடை உற்பத்தித் துறையில் மிகச் சிறந்த நிலையில் உள்ளபோதும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் இல்லாமல் இருப்பது பெரும் பின்னடைவு. சட்டவிரோதமான மணல் அகழ்வு,  மிகப்பெரிய பிரச்சினையாகவுள்ளது

வடக்கு மாகாணத்தில் ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்படவேண்டும் , ஆளணிகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும். இது தொடர்பில் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும் என ஆளுநர் தெரிவித்தார்

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அமைச்சர் இ.சந்திரசேகரன்,

மாகாணசபைக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துத் திணைக்களங்களும் ஒருங்கிணைந்து இதைச் செலவு செய்யவேண்டும்.

மேலும் வெளிநாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் அதிகளவில் வருகைதரும் நிலையில் அவர்களுக்கு ஒத்துழைப்புக்களை அதிகாரிகள் வழங்கவேண்டும் என்றார்.

இதேவேளை  வடக்கு மாகாண பிரதம செயலாளர்,  மாகாணத்துக்கான நிதி மூலங்கள் அதற்கான அனுமதிக்கான நடைமுறைகள் தொடர்பில் விரிவாகக் கூறியதுடன் இந்த ஆண்டு மாகாணசபைக்கு 7,328 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், தமது அமைச்சு மற்றும் திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பாகவும் முன்னெடுக்கப்படவுள்ள வேலைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.

இதன் பின்னர் கல்வித்துறையிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்களில் அநேகர் மேன்முறையீடு செய்துள்ளதாக ஆளுநர் மற்றும் அமைச்சரின் கவனத்துக்குகொண்டு வந்தார்.

இதன்போது ஆளுநரும், அமைச்சரும் இரு விடயங்களைச் சுட்டிக்காட்டினர். ஒருபோதும் வெளிமாவட்டங்களில் பணியாற்றாதவர்கள் வெளிமாவட்டங்களுக்குச் செல்லத்தான் வேண்டும் எனவும், அத்துடன் மேன்முறையீடுகளை ஒவ்வொன்றாக ஆழமாக ஆராயுமாறும் குறிப்பிட்டனர்.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலர் அதன் பின்னர் தமது அமைச்சு, திணைக்களங்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

மருத்துவமனைகளில் நிலவும் வெற்றிடங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

விவசாய அமைச்சின் செயலாளர் மற்றும் விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோர் நிதி ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெரியப்படுத்தினர். வடக்கு மாகாணத்துக்குரிய சில சிறுபயிர்களுக்கு இலவச காப்புறுதி இன்னமும் இல்லை என்றும் அதைப் பெற்றுக்கொடுத்தால் விவசாயிகள் அதிகளவில் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவர் எனவும் குறிப்பிட்டனர்.

அதேபோன்று உரமானியம் சிறுதானியப் பயிர்ச்செய்கைக்கும் வழங்கினால் விவசாயிகள் ஆர்வத்துடன் அதை முன்னெடுக்க உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி அமைச்சின் செயலர், தமது அமைச்சால் இம்முறை முன்னெடுக்கபடவுள்ள டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்தார். அத்துடன் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின்ப பணிப்பாளர், அரசாங்கம் ஒதுக்கியுள்ள விசேட நிதியில் முன்னெடுக்கப்படவுள்ள வீதிகளின் முன்னுரிமைப்பட்டியலை சமர்ப்பித்தார்.

இறுதியாக மகளிர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் வேலைத் திட்டங்கள் தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன் ஆகியோரும், பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம், நிதி, திட்டமிடல், பொறியியல் ஆகியோரும், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More