192
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக முழுமையான முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவை சிகிச்சை (Total Knee replacement surgery) இன்றைய தினம் (28) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனியான எலும்பு முறிவு சிகிசை நிலையம் இன்றிய நிலையிலும், மன்னார் வைத்தியசாலையில் பெறப்பட்ட மருத்துவ உபகரணங்களை கொண்டு இச் சாதனை அறுவை சிகிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சினால் அண்மையில் கிளிநொச்சிக்கு நியமிக்கப்பட்ட முடநீங்க சத்திரசிகிச்சையியல் நிபுணர் (ConsultantOrthopedic Surgeon) மருத்துவர் எஸ். சசிகரன் தலைமையிலான சத்திரசிகிச்சைக் குழுவினர் மூத்த மயக்கமருந்தியல் மருத்துவர் பா.நாகேஸ்வரன் உட்பட மருத்துவர்கள், தாதியர்கள், தொழிநுட்ப உதவியாளர்கள் உள்ளிட்ட பத்து பேர் கொண்ட அணியினர் இணைந்து இந்தச் சாதனைச் சரித்திரத்தினைப் புரிந்துள்ளனர்.
மூட்டுவாதம் காரணமாக நடக்க முடியாது சிரமப்பட்டு வந்த மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த 63 வயதான ஒருவருக்கே இச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
கிளிநொச்சி வைத்தியசாலையின் சேவைகளை விரிவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுவரும் பணிப்பாளர் காண்டீபன் மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுகள், பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் ஆகியோரது ஒத்துழைப்பினைப் பெற்று இச்சாதனைக்கு உறுதுணையாக இருந்துள்ளார். அத்தோடு இவர்கள் அனைவருக்கும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை சார்பாக தனது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார் வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.காண்டீபன்
கிளிநொச்சியில் இலவசமாக மேற்கொள்ளப்பட்ட இந்தச் சத்திரசிகிச்சையானது தனியார் வைத்தியசாலைகளில் 5 லட்சம் ரூபா வரை செலுத்தி மேற்கொள்ளப்படவேண்டிய ஒரு பாரிய சத்திரசிகிச்சையாகும். எனவே பல வளப் பற்றாக்குறைகளுடன் தனியான எலும்பு முறிவு சிகிசைக்கான தனியான சத்திர சிகிசை கூடம் இல்லாது பொதுவான சத்திரசிகிசை கூடத்தில் வைத்தே இச் சத்திர சிகிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சத்திர சிகிசைக்கான வைத்தியஉபகரணங்கள் கூட மன்னார் மாவட்ட வைத்தியசாலையிலிருந்து பெறப்பட்டுள்ளது. எனவே பல வளப் பற்றாக்குறைகளுடனும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையினால் முதற் தடவையாக வரலாற்றுச் சாதனையாக சத்திர சிகிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை காலமும் முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவை சிகிச்சைக்காக யாழப்பாணம் போதான வைத்தியசாலைக்கே செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love