184
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு ஒரு வித நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு, நானாட்டான் பிரதேசங்களில் அதிகளவான கால் நடைப்பண்ணைகள் உள்ளன. இரண்டு பிரதேசங்களிலும் உள்ள கால்நடைகளில் கால் வாய் நோய்கள் இனங்காணப்பட்டுள்ளன.
அதனால் இறைச்சிக்காக கால்நடைகள் அறுக்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளதுடன் பிரதேச சபைகள், காவல் நிலையங்களுக்கும் இது தொடர்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கு ஏற்படும் கால் வாய் நோயானது ஒரு வகை தொற்று நோய். கால்நடைகள் நடமாடுவதனூடாக இவை கடத்தப்படும் . ஆகவே கிருமித் தொற்று ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆடு, மாடுகள் உள்வரத்தும் வெளிப்போக்குவரத்தும் செய்வதை நிறுத்த வேண்டும். பராமரிப்பாளர்களும் கிருமித் தொற்றுள்ள பண்ணையில் இருந்து இன்னுமொரு பண்ணைக்கு செல்வதைத் தடுக்க வேண்டும்.
இதற்கான அறிகுறி, கால்நடைகளுக்கு காய்ச்சல் உண்டாகும். அத்துடன் வாய் மற்றும் கால் பகுதியில் ஆரம்பத்தில் சிறிய கொப்பளங்களாக வந்து பின் அந்தக் கொப்பளங்கள் உடைந்து பின் காயங்களாக மாறும் அடிக்கடி வாயில் இருந்து நீர் வடிந்து கொண்டே இருக்கும்.
காலில் ஏற்பட்ட புண்களால் நடக்க முடியாமலும், வாய்ப்புண் மூலம் சாப்பிட இயலாமலும் இருப்பதுடன், இறுதியில் முற்றாக செயலிழந்து போகும் என்றும் கால்நடை வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
Spread the love