பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானில் தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநரான டான் கோட்ஸ் உளவுத்துறைக்கான செனட் தேர்வுக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய அளவில் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் உரையாற்றிய அவர் ஆப்கானிஸ்தானில் எதிர்வரும் யூலை மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளதாலும், தலிபான்களின் பெரும் தாக்குதல் காரணமாகவும் 2019 ஆம் ஆண்டு தெற்கு ஆசியா பெரும் சவால்களை எதிர்நோக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அரசு தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் குறுகிய எண்ணத்துடன் செயல்படுவதாலும், தீவிரவாத அமைப்புகளை தன்னுடைய கொள்கை முடிவுகளின் ஆயுதங்களாக பயன்படுத்துவதாலும் தீவிரவாத அமைப்புகளின் எச்சரிக்கை நேரடியாகவே உள்ளது எனத் தெரிவித்த அவர் பாகிஸ்தானின் இதுபோன்ற செயல்பாடு தீவிரவாதத்துக்கெதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் பாதிப்பை உண்டாக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.