யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் வைத்து கஞ்சா போதைப்பொருடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கும் அண்மையில் வல்வெட்டித்துறையில் வைத்து கேரள கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கும் தொடர்புண்டு என்று நீதிமன்றில் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அரசியல் கட்சி ஒன்றின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும் வர்த்தருமான நபர் ஒருவரே யாழ்ப்பாணக் குடாநாட்டில் கேரள கஞ்சா விற்பனை வலையமைப்பின் முக்கியஸ்தருமாவார். அவருடன் கைது செய்யப்பட்டவர் வர்த்தக நிலையத்தில் பணிபுரிகின்ற அவரது உதவியாளராவார் என காவலதுறையினர் மன்றுரைத்தனர்.
யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் உள்ள வணக்க ஸ்தலத்திற்கு முன்பாக வைத்து 41 கிலோ 580 கிராம் எடையுள்ள கேரள கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். வாகனம் ஒன்றில் கஞ்சா போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த போது, கொழும்பிலிருந்து வந்த போதைப்பொருள் தடுப்புக் காவல்துறைப்பிரிவினரே கைது செய்தனர்.
சந்தேகநபர்கள் இருவரையும் கொழும்பு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கஞ்சா போதைப்பொருளும் ஒப்படைக்கப்பட்டன. விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்களுக்கும் அண்மையில் வல்வெட்டித்துறையில் வைத்து 110 கிலோ கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கும் தொடர்புண்டு. யாழ்ப்பாணக் குடாநாட்டில் கஞ்சா போதைப்பொருளை விற்பனை செய்யும் வலையமைப்பின் முக்கிய நபர் தொடர்பில் தகவல் அறிந்தே கொழும்பு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் யாழ்ப்பாணத்துக்கு சென்று முதலாவது சந்தேகநபரைக் கைது செய்தனர்.
அவருடன் கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றுகின்றார். அவர் முதலாவது சந்தேநபருக்கு உதவியாளராவார். சந்தேகநபர்கள் மானிப்பாய் வீதியில் உள்ள வணக்க ஸ்தலத்தில் தங்கியிருப்பதாக தகவல் வழங்கியுள்ளனர்’ என்று காவல்துறையினர் சமர்ப்பணம் செய்தனர்.
சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பம் செய்தார். வழக்கை விசாரித்த மேலதி நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேகநபர்கள் இருவரையும் வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்