இலங்கை பிரதான செய்திகள்

தமிழ் மக்களும் இலங்கையின் சுதந்திர தினமும்….

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…

இன்று இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாயாக அனுஷ்டிக்க வேண்டும் என்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரியிருக்கிறது. தமது பூர்வீக நிலத்திற்காக 705 நாட்களை கடந்து, இராணுவ முகாமின் முன்னால் போராடும் கேப்பாபுலவு மக்களும் இன்றைய நாள் தமது துக்க தினம் என்றும் கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பை வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர். இலங்கையின் சுதந்திர தினத்தை வடக்கு கிழக்கு – தமிழ் மக்கள் ஏன் புறக்கணிக்கின்றனர்? இலங்கையின் யதார்த்தத்தையும், பிரச்சினையின் உண்மையான காரணங்களுக்கும் இந்தக் கேள்வியே பதில் அளிக்கிறது.

இன்று இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச செயலகங்களில் மாத்திரம் அநாதரவாக சிங்கக் கொடிகள் பறப்பதை காண முடிகின்றது. அத்தோடு இராணுவமுகாங்களிலும் சிங்கக் கொடிகள் பறக்கின்றன. ஒரு தமிழ் குடியானவரின் வீட்டிலும் இந்தக் கொடியைக் காணமுடியவில்லை. வவுனியாவை தாண்டி சென்றால் மதவாச்சியிலிருந்து சிங்கக் கொடிகள் பறப்பதைக் காணலாம். ஏன் தமிழ் நிலத்தில் தமிழ் குடியானவரால் ஒரு இலங்கைக் கொடியும் ஏற்றப்படவில்லை?

தமிழில் இலங்கை தேசிய கீதத்தை பாடலாம் என்று இலங்கை அரசு சொல்கிறது. தமிழில் தேசிய கீதத்தை பாடுவதால் நாடு இரண்டுபடும் என்கிறார் மகிந்த ராஜபக்ச. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சொல்கிறார் உதயகம்பன்பில. வடகிழக்கு மக்களின் சுதந்திரத்தை மறுத்துக்கொண்டு அவர்களின் உரிமைகளை பேரினவாதத்திற்குள் குவித்துக் கொண்டு, கடந்த காலத்தில் நடந்த அநீதிகளுக்கு நீதியை வழங்காமல் மேற்கொண்ட குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறாமல் இலங்கை தேசிய கீதத்தை சிங்களத்தில் படித்தால் என்ன? தமிழில் படித்தால் என்ன? இப்படித்தான் எங்களை அவர்கள் தமக்கேற்ப கையாளுகிறார்கள்.

இலங்கை தேசிய கீதத்தில் என்ன சொல்லப்படுகிறது என்பதை அறியாதபோதும் அது எப்படிப்பட்ட செயல்களின்போது இசைப்படுகிறது என்பதால் அதை வெறுத்தோம். எதுவுமே சமத்துவமற்ற நாட்டில் சமத்துவம் விளங்குவதைப்போல் ஒரு தேசிய கீதத்தை படிப்பதே ஒடுக்குமுறையை மறைக்கும் உத்தி. அதனால் தனித் தேசத்திற்காக போராடிய தமிழ் மக்கள் சிங்கள தேசிய ஒற்றை ஆட்சியின் தேசிய கீதத்தை பாட மறுத்தனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் பிறந்து வளர்ந்த வேளையில் வருடா வருடம் தரப்ப்படும் சிறிலங்கா அரச பாடப்புத்தகங்களில் உள்ள தேசியகீதத்தை ஒருபோதும் நான் படித்ததில்லை. யாரும் அது குறித்து எதுவும் கூறவில்லை.

நாங்கள் அந்தப் பாடலை பாட மறுத்தோம். ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை யுத்தத்தின் பின்னர் அழிக்கப்பட்ட எங்கள் இனத்தின்மீது வெற்றிப்பாடலாக ஒலித்ததும் இந்த தேசிய கீதமே. இன்றைக்கு முள்ளிவாய்க்காலின் பின்னர் சில அரச நிகழ்வுகளில் இலங்கை தேசிய கீதம் இசைப்படுகிறது. ஒரு நாட்டின் தேசிய கீதம் என்பது அரச நிகழ்வுகளில் மாத்திரம் இசைக்கப்படுவதல்ல. அது மக்களின் நெஞ்சில் இசைக்கப்படுவது. தமிழ் மக்களின் நெஞ்சில் அந்நியமான பாடலை தமிழில் இசைத்தால் என்ன? சிங்களத்தில் இசைத்தால் என்ன?

ஈழத் தமிழ் மக்கள் கொத்துக்ககொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டபோது அவர்களின் பிணங்களின்மீது வெற்றிக் கொடிகளாக பறந்த சிங்ககக் கொடிகள் எமது தேசியகொடியாக எப்படி இருக்கும்? இந்தக் கொடியுடன்தான் எம்மீது படையெடுத்து வந்தனர். இந்தக் கொடியுடன்தான் எங்கள்மீது குண்டுகளை வீசினர். எங்களை தனது பிரஜைகளாக எங்களுக்கு சமத்துவத்தை வழங்காத கொடி எங்களை அழித்து அதன்மீது ஏற்றப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்றநாளில் ஈழத் தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாத ஆதிக்கரிடம் வீழ்ந்தனர். ஒன்றுபட்ட இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடிய ஈழத் தமிழ் தலைவர்கள் நாட்டை பிரித்தெடுக்காமல் முன்னேறும் வாய்ப்பை வழங்கியபோது சிங்களப் பேரினவாதிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ஈழத் தமிழர்களின் உரிமைகளையும் தமது ஆதிக்கத்தில் வைத்தனர்.

அப்படிப்பார்த்தால் இன்றைய நாள் ஈழத் தமிழர்கள் உரிமையை இழந்த நாள். ஈழத் தமிழர்கள் அடிமைப்படுத்தப்பட்ட நாள். இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டதுடன் இலங்கைப் பிரஜைகள் என்பதற்கான அடையாளங்களும் மறுக்கப்பட்ட நாள். இதனால் இன்று நேற்றல்ல வரலாறு முழுவதும் இலங்கையின் சுதந்திர தினத்தை ஈழத் தமிழர்கள் ஒரு கறுப்பு நாளாகவே நினைவுகூர்ந்து வந்துள்ளனர்.

யுத்தத்தின்போது பிள்ளைகளை இழந்தவர்களுக்கும் தமது உறவுகள் காணாமல் போகச் செய்யப்பட்ட அனுபவத்தை சுமந்தவர்களுக்கும் இது சுதந்திரதினமா? இலங்கை அரச இலட்சினையை நம்பி சரணடைந்தார்கள், பலர் தமது பிள்ளைகளை கையில் பிடித்துக் கொடுத்தார்கள். அவர்களையும் காணவில்லை என்று இலங்கையின் அரசு கை விரித்தது. அன்றைக்கு கையில் கொடுத்த பிள்ளைகளை தனது பிரஜைகளாக இலங்கை அரசு கருதியிருந்தால் அவர்கள் காணாமல் போயிருப்பார்களா? கையில் கொடுத்த பிள்ளைகளை ஒரு அரசு தனது பிரஜைகளை காணாமல் போய்விட்டனர் என்று கை விரிக்குமா?

இலங்கை அரசாங்க கட்டமைப்பு ஈழத் தமிழ்மக்கள்மீது மிகவும் ஆழமான அந்நியத்தையும் அழிப்புணர்ச்சியையும் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுபோன்ற பல சம்பவங்கள் அதன் வெளிப்பாடுகளாக வரலாற்றில் நிகழ்ந்துள்ளன. இலங்கை அரசியல் கட்டமைப்பின் அடிப்படை என்பது தமிழர்களை எப்படியும் நடத்தும் அடிமையையே கொண்டிருக்கிறது. மகிந்த ராஜபக்ச தன் ஆட்சிக்காலத்தில் சுதந்திரத்தின தினத்தை கொண்டாடும்படியும் அடிமைப்படுத்தினார். மக்களை வற்புறுத்தினார். இராணுவத்தினர் எங்கள் வீடுகளிலும் கடைகளிலும் இலங்கைக் கொடியை பறக்கவிட்டனர். இராணுவத்தை வைத்து சுதந்திரதினம் கொண்டாட வற்புறுத்தி அதையும் ஒரு இராணுவ நடவடிக்கையாக செய்தவர் மகிந்த ராஜபக்ச. இங்கு சுதந்திரதினம் என்பது அடிமை தினமே.

அரச அலுவலகங்களில் மாத்திரம் கொண்டாடப்படுவது சுதந்திரதினம் அல்ல. அரச உயர் பதவிகளில் வகிப்போர் தமது இருப்பை தக்க வைக்க சிங்கக் கொடியை ஏற்றுகின்றனர். தமிழ் மக்கள் என்ற வகையில் மிகவும் ஆமான வெறுப்போடு அக் கொடியை ஏற்றும் பலரை பார்த்திருக்கிறேன். ஏற்ற மறுக்கும் அரச அதிகாரிகள் பலரும் உண்டு. அரச அலுவலகங்களி்ல் கொடி ஏற்றுவதனால் சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது என்பது மிகவும் அபத்தமானது.

சுதந்திரம் என்பது என்ன? அது உணரப்படுவது. உள்ளத்தால் கொண்டாடப்படுவது. இலங்கை சுதந்திரனத்தை கறுப்பு நாளாக கொண்டாடும் ஈழத் தமிழர்கள் தம்மை அடையாளம் செய்யாத சிங்கக் கொடியை எதிர்த்து நந்திக்கொடியையும் புலிக்கொடியையும் தங்கள் தேசிய கொடியாக ஏற்றியிருக்கின்றனர். தமிழ் தலைவர்கள் தமக்கான தேசிய கீதத்தை உருவாக்கிப் பாடியிருக்கின்றனர். மிகவும் ஆழமான இனச்சிக்கல் கொண்ட நாட்டில் ஆட்சி மாற்றத்தினால் சுதந்திரம் கிடைத்துவிடாது என்பதற்கு இம்முறை சுதந்திரதினம் நல்ல எடுத்துக்காட்டு. அதனை மக்கள் உணரவில்லை என்பதும் இது எத்தகைய ஆழமான பிரச்சினை என்பதும் ஆட்சி மாற்றத்தினால் பின்னரான இந்த சுதந்திரதினத்தில் வெளிப்படுகிறது.

கடந்த காலத்தில் சுதந்திரதினத்தில் எதிர்ப்புணர்வைக் கட்டுப்படுத்தி இருந்தவர்கள் இம்முறை அதனை வெளிப்படுத்துகின்றனர். இந்த கூட்டுணர்வை இலங்கையின் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்வார்களா? உலகம் புரிந்துகொள்ளுமா? இதனைப் புரிந்துகொண்ட அவர்கள் இந்தக் கூட்டுணர்வை ஏற்றுக்கொள்வார்களா? ஈழத்தில் எப்போது சுதந்திரதினம்?

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap