வட மாகாணத்தில் சுகாதாரப் பணியாளர்கள் வெற்றிடங்களுக்கு, ஆள்சேர்ப்பு செய்யப்படும் நேர்முகத் தேர்வில், சுகாதாரத் தொண்டர்களாகப் பணி புரிந்தவர்களில் தகுதியானவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களாகப் பலர் பணியாற்றியுள்ளனர். இவர்கள் டெங்குக் கள தரிசிப்பு, சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, மருத்துவமனை போன்றவற்றில் ஒப்பந்த அடிப்படையில் தொண்டர்களாகப் பணியாற்றியவர்கள்.
அவர்களின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததும் அவர்கள் அந்த வேலையை நிரந்தரமாக மேற்கொள்ள முடியாது. அவர்கள் பணி புரியும் இடத்தில் உள்ள உயர் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க அதிக காலம் வேலை செய்தவர்கள் உள்ளனர்.
இவர்கள் ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னர் வேலையற்று இருக்கின்றனர். அது தொடர்பில் அரசியல் பிரமுகர்கள் பலரும் அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்றனர். அதனடிப்படையில் அரச தலைவர் செயலகம் சுகாதாரத் தொண்டர்களாகப் பணியாற்றியவர்களின் விவரங்களைத் வழங்மாறு மாகாண அமைச்சுக்குப் பணித்தது. சுமார் 800 பேரின் விவரங்கள் அனுப்பப்பட்டன.
அதேவேளை, தாமும் கடமையாற்றியதாகவும், ஆனால் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெயர்ப் பட்டியலில் பெயர் விவரங்கள் இல்லை என்று நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆளுநரின் பொதுமக்கள் சந்திப்பில் பலர் சுட்டிக் காட்டியுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களுக்கு சுமார் 400 வரையில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அந்த வெற்றிடங்களுக்கு ஆள் சேர்ப்பு செய்யப்படும் போது சுகாதாரத் தொண்டர்களாகக் கடமையாற்றிய, அதற்கான சரியான ஆவணங்களைச் சமர்ப்பிப்பவர்கள் நேர்முகத் தேர்வின் மூலமாகத் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. இது தொடர்பில் மாகாண ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.