ராஜராஜ சோழனுக்கு மணி மண்டபம் மற்றும் சிலை அமைப்பது தொடர்பில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கொன்றில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனைக் கௌரவிக்கும் முகமாக அவருக்குக் கடலில் சிலை அமைக்க வேண்டும் எனவும் ராஜராஜ சோழன் நினைவிடமானது கும்பகோணத்தை அடுத்த உடையாளூர் கிராமத்தில் பராமரிப்பின்றி இருப்பதாகவும் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
பிற மாநிலங்களில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் சத்ரபதி சிவாஜி, சர்தார் வல்லபபாய் படேல் போன்ற தலைவர்களுக்குச் சிலைகள் அமைக்கப்படுவது போன்று , ராஜராஜ சோழன் சிலையை இந்தியப் பெருங்கடல் அல்லது வங்காள விரிகுடா பகுதியில் நிறுவ உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்திருந்தார்.
அத்துடன் உடையாளூரில் பராமரிப்பின்றி உள்ள ராஜராஜ சோழன் சமாதியில் மணி மண்டபம் கட்ட வேண்டும் எனவும் அதைச் சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவினை நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.