ரபேல் போர் விமானம் வாங்கிய விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான மிக முக்கியமான ஆதாரம் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரபேல் விமானம் வாங்குவது தொடர்பாக இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சின் அதிகாரபூர்வக் குழு பிரான்ஸ் அரசுடன் பேசிவந்தபோதே, பிரதமர் அலுவலகம் தனியாக ஒரு பேச்சுவார்த்தை நடத்தியமை தற்போது தெரியவந்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரேஸ்ட பத்திரிகையாளரும், தி இந்து ஆங்கில நாளேட்டின் முன்னாள் ஆசிரியருமான என்.ராம் இதற்கான ஆவணங்களையும் வெளியிட்டு இதை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ரபேல் விவகாரம் தொடர்பான வழக்கில் தாக்கல் செய்த பதில் மனுவில் இந்த விவகாரத்தில எந்த விதத்திலும் பிரதமர் அலுவலகத்தின் தலையீடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் பாதுகாப்புத் துறை அமைச்சரே தயவு செய்து கவனியுங்கள். பிரதமர் அலுவலகத்தால் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் தவிர்க்கப்படவேண்டும் என்பதே எனது விருப்பம். நமது அதிகாரபூர்வமான பேச்சுவார்த்தையை தாழ்த்தும் வகையில் அது அமைந்துவிடும் என 2015 நவம்பர் 24 ஆம் திகதி அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு பாதுகாப்புத் துறைச் செயலாளர் ஜி.மோகன் குமார் தன் கைப்பட எழுதிய அலுவலகக் குறிப்பினை, தி ஹிந்து இன்று வெளியிட்டுள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் அலுவலகக் குறிப்பின்படி ரபேல் விவகாரத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் குழு நடத்தும் பேச்சுவார்த்தைக்கு இணையாக இன்னொரு பேச்சுவார்த்தை பிரதமர் அலுவலகம் மூலமாக நடத்தப்படுகிறது என்ற தகவலே பிரான்ஸ் குழுவிடம் இருந்துதான் கிடைத்திருக்கிறது.
பிரான்ஸ் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் ஸ்டீபன் ரெப் எழுதிய இந்தக் கடிதம் பற்றி பிரதமர் அலுவலகத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரியப்படுத்தியிருக்கிறது. பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் சார்பிலான ரஃபேல் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் ஏர் மார்ஷல் சின்ஹாவும் இதுகுறித்து பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் அஷ்ரபுக்கு எழுதியிருக்கிறார்.
இதற்கு பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் ஜாவேத் அஷ்ரப் 2015 நவம்பர் 11 ஆம் திகதி அளித்த பதிலில், ‘எங்களுக்கு இடையே பேச்சு நடந்தது உண்மைதான். பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலக ஆலோசனையின்படியே அவர் என்னுடன் பேசினார்’ என குறிப்பிட்டிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ரபேல் விமான இறக்குமதியில் எந்தத் தலையீடும் இல்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், பாதுகாப்புத் துறைக்குள் நிகழ்ந்துள்ள கடிதப் பரிமாற்றங்களே இதில் பிரதமர் அலுவலகத் தலையீடு இருப்பதை உறுதிப்படுத்துகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது