சீனாவிலுள்ள தடுப்பு முகாம்களை மூடுமாறு துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள தடுப்பு முகாம்களில் மில்லியனுக்கும் மேற்பட்ட உய்கர் இன மக்கள், தடுத்துவைத்து சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த தடுப்பு முகாம்களை மூடுமாறு சீன அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக துருக்கிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மில்லியன் கணக்கான உய்கர் இன மக்களை சிறைக்கைதிகளாக தடுத்துவைத்து சித்திரவதைக்குள்ளாக்கி அவர்களுக்கு அரசியல் ரீதியில் மூளைச் சலவை செய்யும் சீனாவின் செயற்பாடு, அழுத்தம் மிகுந்தது என துருக்கிய வெளிவிவகார அமைச்சசின் பேச்சாளர் ஹமி அக்சோய் தெரிவித்துள்ளார்.
21ஆம் நூற்றாண்டில் இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறுகின்றமை, மனிதாபிமானத்திற்கு எதிரானது எனத் தெரிவித்துள்ள அவர் சீனாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ரனியோ குட்டேரஸிடம் தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
எனினும் இக் குற்றச்சாட்டை மறுத்துள்ள சீனா பயங்கரவாதத்தை ஒடுக்கும் சிறப்பு தொழிற்பயிற்சிப் பாடசாலைகளுக்கு மக்கள் தாமாகவே விரும்பி செல்வதாகவும் அவை வசதிகளுடன் கூடிய புனர்வாழ்வளிப்பு நிலையங்கள் எனவும் தெரிவித்துள்ளது.
சீனாவின் 45 வீதமானோர் உய்கர் இன மக்கள் என்பதுடன், இனவழிப்பு முயற்சியில் அந்நாட்டு அரசாங்கம் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.