குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த குடும்பப்பெண் ஒருவர் தனக்கும்,தனது பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு கோரி மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று புதன் கிழமை(13) முறைப்பாடு செய்துள்ளார்.
பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த ஆனந்த ராஜா எட்னா டயஸ் என்பவரே தனக்கும் தன்னுடைய மூன்று பிள்ளைகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் தமது பாதுகாப்பை உறுதி படுத்தக் கோரியும் மன்னார் மனித உரிமைகள் ஆணைகுழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு பேசாலை பாடசாலைக்கு அருகில் இலங்கை கடற்படையினரால் குறித்த பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார். குறித்த காணாமல் ஆக்கப்பட்ட விடயம் தொடர்பான வழங்கானது மன்னார் மேல் நீதிமன்றத்திலும் தற்போது மன்னார் நீதவான் நீதிமன்றத்திலும் விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் குறித்த பெண்ணின் வீட்டுக்குள் தங்களை புலனாய்வாளர்கள் என அடையாளப் படுத்திக்கொண்டு சந்தேகத்திற்கு இடமான சிலர் வீட்டுக்குள் நுழைய முற்பட்டதாகவும் தாம் கதவை திறக்க மறுத்ததாகவும் பின்னர் குறித்த நபர்கள் கதவை உடைக்க முற்பட்ட போது தாம் பயத்தில் கதவை திறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் 9 பேர்கள் தங்கள் வீடு முழுவதும் சூழ்ந்து கொண்டு வீட்டுக்குள் ஆயுதம் புதைக்கப்பட்டுள்ளது, எனவே பரிசோதனை செய்ய வேண்டும் என கூறியதாகவும் உடனே தான் அச்சத்தில் சத்தம் இட்டு கத்தியதால் அக்கம் பக்கதினர் மற்றும் அருட்தந்தை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் குறித்த சந்தேக நபர்கள் தாங்கள் குறித்த வீட்டில் போதை பொருட்கள் உள்ளனவா என சோதனை செய்வதற்காக வந்ததாக பொது மக்களிடம் தெரிவித்துள்ளனர். எனினும் சந்தேகம் அடைந்த மக்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த பெண்ணின் கணவன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணைகள் 15 திகதி மன்னார் மேல் நீதி மன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் இவ்வாறன உயிர்அச்சுறுத்தல் தனக்கும் தனது பிள்ளைகளுக்கு காணப்படுவதாகவும் எனவே தங்களுக்குரிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தறுமாறு மனித உரிமை ஆணைகுழுவின் மன்னார் மாவட்ட உப காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை வாய்மொழிமூலம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவ் வாய்மொழி முறைப்பாட்டை எழுத்து மூலுமாக தெரிவிக்குமாறு அறிவூறுத்தப்பட்டுள்ளது.
கடந்த பல வருடங்களாக குறித்த பெண்ணின் வீட்டின் மீது இனம் தெரியாத நபர்களால் இரவு நேரங்களி கல் வீசப்படுவது கண்ணாடிகள் உடைக்கப்படுவது கதவை தட்டுவது போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்துள்ளதாகவும் குறித்த பெண் தெரிவித்தார்.