சிரியாவில் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த ஷமீமா பேகத்தின் பிரித்தானிய குடியுரிமை ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு ஷமீமா பேகம், கதிஜா சுல்தானா, அமைரா அபாஸ் ஆகிய மூன்று மாணவிகள் பிரித்தானியாவிலிருந்து வெளியேறி சிரியா சென்று ஐஎஸ் இயக்கத்தில் இணைந்தனர்.
ஷமீமா, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நெதர்லாந்து நபரை மணந்த நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்து, ஊட்டச்சத்து பற்றாக்குறையால் உயிரிழந்து விட்டன. அதன்பின்னர் சிரியாவில் அமெரிக்க கூட்டுப் படையினர் நடத்திய வான் தாக்குதலில் ஐஎஸ் அமைப்பினைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில் சிலர் சரண் அடைந்துள்ள நிலையில் ஐஎஸ் அமைப்பினரிடம் இருந்து மீட்கப்பட்ட ஷமீமா பேகம் உட்பட்டோர் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கர்ப்பிணியாக இருந்த ஷமீமா பேகம், தன் வயிற்றில் இருக்கும் குழந்தையின் எதிர்காலத்திற்காக பரித்தானியா திரும்ப விரும்புவதாக தெரிவித்திருந்த நிலையில் நேற்றையதினம் அகதிகள் முகாமில் அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஷமீமா பேகத்தின் பிரித்தானிய குடியுரிமையை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக உள்துறை அதிகாரிகளிடம் இருந்து நேற்றையதினம் ஷமீமாவின் தாயாருக்கு கடிதம் வந்ததாகவும், அதில் ஷமீமா மேல்முறையீடு செய்யலாம் என கூறப்பட்டிருந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இந்த முடிவினை எதிர்த்து சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், அவரது குடும்ப சட்டத்தரணி தெரிவித்துள்ளார்