தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்ற இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்ற நிலையில் முதலாவது போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. குசால் பெரேரா 153 ஓட்டங்கள் எடுத்து முக்கிய பங்கு வகித்திருந்தார்.
இந்நிலையில் இரு அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று ஆரம்பமாகின்றது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை 1-1 என சமநிலையில் நிறைவு செய்ய முடியும்.
முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சு வியூகங்களுக்கு பலன் கிடைக்காமல் போனமையினால் பந்து வீச்சு வியூகங்களை தென் ஆப்பிரிக்க அணி மாற்றுவது குறித்து பரிசீலிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பிலாண்டர் உபாதை காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளதால் அறிமுக வீரரும் ஆல்ரவுண்டருமான வியான் முல்டருக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என கருதப்படுகிறது.