Home இலங்கை இலங்கையின் 73 ஆவது வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்தார் மங்கள…

இலங்கையின் 73 ஆவது வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்தார் மங்கள…

by admin

மக்களை வலுவூட்டி வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களை வலுப்படுத்துவதற்காக அனைவரினதும் தேவைகளை நிறைவேற்றும் நோக்கிலான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சமர்பிக்கப்பட்டது.

சுதந்திர இலங்கையின் 73 ஆவது வரவு செலவுத் – திட்டத்தை, நாட்டின் 24 ஆவது நிதியமைச்சர் என்ற ரீதியில் மங்கள சமரவீர சமர்ப்பிக்கின்றார். நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பிக்கும் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா என்ற வேலைத்திட்டத்தின் கீழ் வர்த்தக மற்றும் ஆளணி வளங்களை வலுப்படுத்தும் நோக்கில் இது சமர்ப்பிக்கப்படுகின்றது. வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களை மேலும் வலுவூட்டுவது இதன் நோக்கமாகும்.

இதன்போது வரவு செலவத்தித்திட்டத்திற்கான தொடக்க உரையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கௌரவ சபாநாயகர் அவர்களே, எனது இரண்டாவது வரவு செலவுத்திட்டத்தினை இச் சபைக்கு சமர்ப்பிப்பதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

2018 இன் இறுதியில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலைமை முடிவுறுத்தப்பட்டதன் பின்னர் நாட்டின் பொருளாதாரமானது உறுதிப்படுத்தப்பட்டு வளர்ச்சியை நோக்கி நகர்வதினை நாம் காணலாம் என்பதனை இச்சபைக்குத் தெரிவித்துக் கொள்வதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கையின் சுதந்திரத்திரத்திற்குப் பின்னரான வரலாற்றில் மிகவும் இருண்ட 52 நாட்களின் பின்னர் ஸ்திரநிலைமையினை மீண்டும் அடைந்து கொள்வதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டியேற்பட்டது.

தொடர்ச்சியான பல வருடங்களாக ஏற்பட்ட பல வரட்சியினால் கிராமிய வருமானம் வீழ்ச்சியடைந்து முழுப் பொருளாதாரமும் பாதிப்படைந்த நிலையில் 2018 ஒக்டோபர் 26 ஆந் திகதி இடம் பெற்ற நிகழ்வு பொருளாதாரத்தினை மேலும் மோசமாகப் பாதித்தது. உலக எண்ணெய் விலை இரட்டிப்பாகியதுடன் ஐக்கிய அமெரிக்க பெடரல் ரிசேவ் ஆனது வட்டி வீதங்களை மிக விரைவில் அதிகரித்தது. இவ்வாறான உள்நாட்டு வெளிநாட்டு சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்த அதே வேளை எமது அரசாங்கம் பொருளாதார ஸ்திரத்தன்மையினையும் ஏற்படுத்தியுள்ளது.

2018 ஒக்டோபர் இறுதியிலிருந்து உலக எண்ணெய் விலையானது பாரியளவு வீழ்ச்சியடைந்திருந்ததுடன் ஐக்கிய அமெரிக்க பெடரல் ரிசேவ் ஆனது குறைந்த வட்டி வீதங்களுக்கான சமிக்ஞையினைக் காட்டியதுடன் நுகர்வானது பழைய நிலைமைக்குத் திரும்பியது. இந்நிலைமையினால் இலங்கை பெற்றுக் கொள்ளமுடியுமாகவிருந்த பொருளாதார வளர்ச்சியினை 2019 வரையில் அனுபவிக்க முடியாது போனது. துரதிஷ்டவசமாக, நாம் அரசியல் சதியொன்றிற்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டதால் மேற்குறித்த நன்மைகளின் விளைவுகளை அனுபவிப்பதற்கான வாய்ப்பினை இழந்தோம்.

இலங்கையின் மீதான நம்பிக்கை இழந்ததன் விளைவாக, அந்த 52 நாட்களுக்குள் எமது கடன் மற்றும் பங்குச் சந்தையிலிருந்து மூலதன வெளியேற்றம் பாரியளவு இடம்பெற்றதுடன் மிகவும் கடினமான உழைப்பின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட எமது வெளிநாட்டு ஒதுக்குகளிலிருந்து பல பில்லியன் டொலர்களை இழக்க வேண்டியேற்பட்டது. இக்காலப்பகுதியல், ஏனைய வளர்ந்துவரும் சந்தைகளின் நாணயங்கள் மதிப்பேற்றமடைந்த அதேவேளை, எமது நாணயத ;தின் பெறுமதியானது வரலாற்றில் மிகக் குறைந்த மட்டத்திலான வீழ்ச்சியினை பதிவுசெய்தது.

இலங்கையின் கடன் தரப்படுத்தலானது கீழ் மட்டத்திற்குத் தள்ளப்பட்டதன் விளைவாக எமது வெளிநாட்டுக் கடன் பெறுகைச் செலவினம் இரட்டை இலக்க மட்டத்திற்கு அதிகரித்துள்ளது. 2019 இல் வெளிநாட்டுப் படுகடன் மீள் கொடுப்பனவாக 5.9 பில்லியன் ஐ.அ. டொலரினை மீள் நிதியளிக்க வேண்டியிருப்பதனால் மிகவும் சாதகமற்ற தன்மை உருவாகியுள்ளது. இலங்கை சிறந்த பிரயாணம் செய்யக்கூடிய இடமாக ´லோன்லி பிலனற்´ சஞ்சிகையினால் தரப்படுத்தப்பட்டதன் பின்னரும் கூட, அப்போது காணப்பட்ட அரசியல் நிலமையின் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகையானது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையின் நிவர்த்தி செய்யும் பொருட்டு புதிய பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நிலைமை இவ்வாறிருக்க, 2018 டிசெம்பர் 17 ஆம் திகதி நாம் மீண்டும் அதிகாரத்திற்கு வந்தோம். எமது வெளிநாட்டுத்துறைக் காரணிகளுக்கு ஏற்பட்ட சேதத்தினை நாம் தற்பொழுது சீர்படுத்தியுள்ளதுடன் சந்தைகள் கடந்த இரண்டு மாதங்களில் நம்பிக்கை தரக்கூடிய வகையில் மீள் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இன்று எமது வெளிநாட்டுக் கடன் பெறுகை செலவினமானது 200 அடிப்படை புள்ளிகளுக்கு மேலாக வீழ்ச்சியடைந்துள்ளது.

எமது பொருளாதாரத்தினை நோக்கி வெளிநாட்டு மூலதனமானது நகர்ந்துள்ள அதேவேளை சனவரியிலிருந்து அரசாங்க பிணையங்கள் மீது ரூபா 3,400 மில்லியன் வெளிநாட்டு நிதியானது உட்பாய்ச்சப்பட்டுள்ளதுடன் இன்றுவரை ரூபாவானது 1.5 சதவீதத்தினால் மதிப்பேற்றம் அடைந்துள்ளது.

எனவே, அரசியல் சதியினால் ஏற்பட்ட பல்வேறுபட்ட பாதிப்புக்களை நிவர்த்திசெய்ய வேண்டியுள்ளதுடன், பொருளாதாரம் மீண்டும் ஸ்திரப்படுத்தப்பட வேண்டியுள்ளது. வரவு செலவுத்திட்ட உரை 2019 ´என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா – மக்களை வலுவூட்டலும் வறியோரைப் பராமரித்தலும்´ பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு நாம் மேற்கொண்ட பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான வாய்ப்பினை தற்பொழுது நாம் பெற்றுள்ளோம்.

அரசிறை முகாமைத்துவம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றது. ஐந்து தசாப்தங்களில் முதல் முறையாக 2017 இல் ஆரம்ப மிகையினை நாம் அடைந்துள்ளதுடன், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவீத வளர்ச்சியாகும். 2015 இல் காணப்பட்ட -2.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2018 இல் இது பாரியதொரு முன்னேற்றமாகும். பிரதான உலக நுகர்வுப் பொருட்களின் விலைகள் அதிகரித்த போதிலும் பணவீக்கமானது கட்டுப்பாட்டுக்குள் முகாமை செய்யப்பட்டுள்ளது. 2017 இல் என்றுமில்லாத சிறந்த ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டினை நாம் அடைந்துள்ளதுடன் 2018 இல் அதற்கான உத்வேகம் அதிகரித்துள்ளது. இந்நிலைமை பொருளாதாரத்தினை பாரிய வெளிநாட்டு உட்பாய்ச்சலினை நோக்கி மீள் ஒருமுகப்படுத்துகின்ற எமது அரசாங்கத்தின் நோக்கத்துடன் இணைந்ததாகக் காணப்படுகின்றது.

கௌரவ சபாநாயகர் அவர்களே, 2015 ஆம் ஆண்டில் நாம் எச்சந்தர்ப்பத்திலும் வெடித்துச் சிதரக்கூடிய குண்டைப்போன்ற பொருளாதாரமொன்றினையே அனந்தரமாகப் பெற்றோம். எவ்வாறாயினும் நாம் வெற்றிகரமாக ஸ்திரத் தன்மையினையும் மீள் சமநிலையினையும் அடைந்துள்ளோம். முன்னைய அரசாங்கமானது படுகடனை மீளச்செலுத்துவதற்கான எவ்வித நியாயமான திட்டமும் இல்லாது செலவு மிக்க வெளிநாட்டுப் கடன்கள் மூலம் வீண்விரையம் மிக்க செலவினங்களை செய்துகொண்டிருந்தது. 2014 இல் வரி வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருந்ததுடன் ஏற்றுமதியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14 சதவீதமாக சரிவடைந்து காணப்பட்டது. இது இரண்டு தசாப்த காலத்தில் ஏற்பட்ட பின்னடைவாகும். விசேடமாக 2000 ஆம் ஆண்டில் வரி வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாகக் காணப்பட்டதுடன் ஏற்றுமதிகள் 30 சதவீதமாக இருந்தது. இது பொருளாதாரமானது ஸ்திரமற்ற நிலையை அடைந்து சிதைவடைந்ததென்பதை காண்பிக்கின்றது.

இந்த அரசாங்கம் பொருளாதார வளர்ச்சியானது தனியார் தொழில் முயற்சிகளினால் வழிப்படுத்தப்படுகின்றது என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. இதுவே, முன்னைய நீல மற்றும் பசுமை வரவு செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ´என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா´ எண்ணக்கருவாகும். எவ்வாறாயினும், நியாயமான சந்தையே இலங்கையின் வர்த்தக மற்றும் வாணிபத்தின் உயிரோட்டமாகும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபார தொழில் முயற்சிகள் மற்றும் சா்வதேச மட்டத்தில் போட்டியிடக் கூடிய இலங்கை கம்பனிகளின் வளர்ச்சிக்காக தனது புத்திக் கூர்மையினை பயன்படுத்தும் உண்மையான தொழில் முயற்சியாளரையே தனியார் தொழில் முயற்சி என நான் நம்புகின்றேன்.

இதற்கு மாற்றமாக தனியார் துறையில் இன்னுமொரு வகுதியினர் காணப்படுகின்றனர். அவர்கள் போட்டித்தன்மை மற்றும் நியாயமான சந்தைகளுக்கு உடன்பாடற்ற ஊழல்களை ஊக்குவிக்கின்ற முன்னைய அரசாங்கத்துடன் தொடர்புவைத்து தம்மை வளர்த்துக் கொண்டவர்களாவர். இவர்கள் 20 மில்லியன் மக்களின் மீது செலவினத்தின் சுமையினை ஏற்படுத்தி மக்களின் வரித் தீர்வைகளின் மூலம் தம்மை வளர்த்துக் கொண்டவர்களாவர். மேலும் இன்றுவரை நாம் செலுத்திவருகின்ற அதிகரித்த செலவினங்களை ஏற்படுத்திய பெருமளவு அரசாங்க ஒப்பந்தங்களின் மூலம் நன்மை அடைந்தவர்களாவர். இவர்களில் சில சுயநலவாதிகள் தமது கம்பனிகள் மற்றும் தனிப்பட்ட கணக்குகளுக்கு அதிகளவான செல்வத்தினை இறைக்கின்ற சர்வாதிகாரத்தினை நோக்கிச் செல்வதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இக்குழுவினர் தனியார் துறையில் சிறியதொரு வகுதியாயினும் அதிகாரமும் செல்வாக்கும் மிக்கவர்களாவர். பொருளாதார வளர்ச்சியின் இயந்திரமாக நாம் காண வேண்டிய தனியார் துறை இதுவல்ல. ஆனால், இவை கடந்த கால ஆட்சியாளர்கள் விட்டுச்சென்ற எச்சங்களாகும்.

நாம் தனியார் தொழில் முயற்சிகளின் அடிப்படை விதிகளை பின்பற்றுகின்ற சிறந்த சந்தை தொழிற்படுத்தலில் வெற்றியடையக்கூடிய புதிய நிறுவனங்களை உருவாக்குகின்றோம். எமது நாட்டின் அபிவிருத்தி மற்றும் நவீன மயப்படுத்தலினை தொடர்ந்து பின்னடையச் செய்கின்ற பாதுகாப்புச் சிந்தனைகளிலிருந்து விடுபட்ட தனியார் துறையொன்று இலங்கைக்குத் தேவை. பொருளாதார தாராளமயமாக்கல், பாதுகாப்பு வலையமைப்புக்கான ஆதரவளிப்பு மற்றும் சந்தை நெருக்கடிகளை நீக்குவதற்கான அரச தலையீடு மற்றும் சமூக நீதியினை உறுதிப்படுத்தல் என்பவற்றினை கடந்த வருட வரவு செலவுத்திட்டத்தில் நான் சமர்ப்பித்தேன். இந்த வேலைச்சட்டகத்தினை நாம் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக அதன் பிரதான காரணிகளை வலுப்படுத்துவோம்.

தாராளப் பொருளாதாரத்தினை நோக்கிய எமது தீர்மானங்கள் என்றுமில்லாதவாறு விரைவானதாகும். இதன் முடிவாக துணைத் தீர்வைகளை ஒழிப்பதுடன் வர்த்தக தடைகளை நீக்குவதற்கான ஏற்பாடுகளை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம் அதேவேளை, போட்டித்தன்மை சவால்களை எதிர்கொள்வதில் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு மிகைப்பொருள் திணிப்பெதிர்ப்பு சட்டவாக்கத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் வர்த்தக மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தினை உருவாக்கலுடன் பாதுகாப்பான ஏற்பாடுகளை நாம் முன்னெடுப்போம்.

சமூக உட்கட்டமைப்பு மற்றும் சமூக பாதுகாப்பு வலையமைப்பில் நாம் மேலும் முதலீடு செய்யவுள்ளோம். கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிக நிதி வழங்கும் அதேவேளை அவற்றின் தரம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். உபாய ரீதியாகவும் வினைத்திறனிலும் வீழ்ச்சிப் போக்கினைக் கொண்டுள்ள எமது சமூகப் பாதுகாப்பு வலையமைப்பினை மீளெழுச்சி பெறச் செய்வதற்கான நேரம் இதுவாகும். எமது கவனமானது, பயனாளிகளை படிப்படியாக தன்னிறைவு பெற்ற வலுவூட்டப்பட்ட பிரசைகளாக மாற்றுவதனை நோக்கிச் செலுத்தப்பட வேண்டியுள்ளது. எமது பிரஜைகளை வலுவூட்டுவது எமது அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும். இது அரசியல், சமூக பொருளாதார வலுவூட்டல் என்பவற்றின் ஊடாக இடம்பெறும். ´என்டர்பிறைஸ் ஸ்ரீ லங்கா – மக்களை வலுவூட்டல்´ என்ற இவ்வருட வரவு செலவுத்திட்டத் தொனிப்பொருளானது, எமது மக்கள் தாமாகவே முன்னேற்றப் பாதையில் சென்று நாட்டினை வளமடையச் செய்யும் வகையில் அவர்களுக்கான உதவியை வழங்குகின்ற அதேவேளை, சமூகத்தில் காணப்படும் வறிய மற்றும் பலவீனமான மக்களை நிலைபேறான மற்றும் இலக்கிடப்பட்ட சமூகப் பாதுகாப்பு வலையமைப்பினூடாக பாதுகாப்பதுமாகும் என நிதி அமைச்சர் தனது வரவு செலவு திட்டத்திற்கு முன்னராக தொடக்க உரையில் தெரிவித்திருந்தார். பின்னர் வரவு செலவு திட்டம் தொடர்பான தீர்மானங்களை அவர் பாராளுமன்றத்தில் சமர்பித்தார்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More