இன்று வெள்ளிக்கிழமை தமிழ் ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்திருக்கும் ‘காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆளுநரை சந்திக்க முயற்சித்த போதும் அவரை சந்திக்க முடியவில்லை’ என்ற செய்தி தொடர்பான விளக்கம்
வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று முன்தினம் ஆளுநரை சந்திப்பதற்கு நேரத்தினை ஒதுக்கித் தருமாறு யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் ஊடாகவும் ஊடகவியலாளர் ஒருவர் ஊடாகவும் கோரிக்கையினை விடுத்திருந்தனர். ஆனாலும் நேற்று முன்தினம் ஆளுநர் கொழும்பில் இருந்தமை காரணமாக அன்றைய தினத்தில் நேரத்தை ஒதுக்க முடியவில்லை. இதன் காரணமாக நேற்று காலை 9:45மணிக்கு அவர்களை சந்திப்பதற்கான நேரத்தினை ஆளுநர் ஒதுக்கியிருந்ததுடன் அதற்காக யாழ்ப்பாணத்திற்கு ஆளுநர் வருகை தந்திருந்தார்.
முதலில் அவர்கள் ஆளுநரை சந்திப்பதற்கு வருவதாக உறுதிப்படுத்திய போதிலும் இறுதி நேரத்திலேயே வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தாம் ஆளுநரை சந்திக்க வரவில்லையென அறிவித்திருந்தனர். இதன் காரணமாக ஆளுநரால் அவர்களை சந்திக்க முடியவில்லை என்பதோடு அவர்களின் கோரிக்கைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொள்ள முடியவில்லை.
இதேவேளை யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பிரதிநிதிகளை ஏற்கனவே மூன்று முறை சந்தித்துள்ள ஆளுநர் அவர்கள், அவர்களுடைய கோரிக்கைகள் வேண்டுகோள்கள் தொடர்பில் கவனம் செலுத்தியிருக்கின்றார் என்பதுடன் வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களையும் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற நிலைப்பாட்டிலே இருக்கின்றார்.
வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு