முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் இன்றையதினம் மனித சங்கிலிப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
பேரறிவாளவன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தமிழக ஆளுனரிடம் மனு கொடுத்த போதும் இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இந்தநிலையில் அற்புதம்மாள் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று 7 பேரின் விடுதலை குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருவதுடன் சென்னை உள்பட 7 நகரங்களில் மனித சங்கிலிப் போராட்டத்துக்கு அழைப்பும்விடுத்திருந்தார்.
இந்நிலையில், பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தி சென்னையில் மனித சங்கிலிப் போராட்டம் இன்று நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆரம்பித்த மனித சங்கிலிப் போராட்டத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் , திராவிடர் கழகம், திருமாவளவன், இடதுசாரிகள், திராவிடர் விடுதலைக்கழகம், இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்டவை இதில் பங்கேற்றன.
பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க.வின் வெற்றிவேல், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதேபோல், புதுச்சேரி, சேலம், மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது