குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளை தேசிய மயப்படுத்தல் தொடர்பில் பலதரப்பட்ட கருத்துக்கள் வெளிவந்துள்ளன. இது என்னுடைய விருப்பமல்ல என்று ஆளுநர் செயலகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் மேலும் ஆளுநர் கருத்து தெரிவிக்கையில் ,
இது தொடர்பில் நான் 13ஆம் சீர்த்திருத்தத்தில் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். அதிகார பரவலில் என்னென்ன அதிகாரங்கள் இருக்கின்றதோ அவற்றில் ஒரு துளியை கூட நாம் திரும்பக்கொடுக்கக்கூடாது.
கல்வி என்பது உயர்கல்வி அல்ல இரண்டாம் தர கல்வியும் கீழ்மட்ட கல்வியும் மாகாண பார்வையில் உள்ளது. இவ்வாறிருக்கும் போது எமது பாடசாலைகளில் சில பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்கலாம் என்று மத்திய அரசின் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பெற்றோர் , பாடசாலைகளின் பிரதான ஆசிரியர்கள் முன்வைத்த கருத்துக்களே ஆகும். இது என்னுடைய விருப்பம் அல்ல என்று ஆளுநர் குறிப்பிட்டார்.
மத்திய அரசாங்கம் பாடசாலை அபிவிருத்திக்காக ஒரு தொகை நிதியை தேசிய பாடசாலைகளுக்கு தான் கொடுக்கின்றது. தேசிய பாடசாலைகள் அல்லாதவைகளுக்கு எவ்வாறு வழங்கமுடியும். எனவே அந்த நிதியை பெற்றால் தான் சில வளங்களை உருவாக்கமுடியும். கல்வி எமது கலாச்சாரத்தின் அடையாளமாக இருந்தது ஆனால் இன்று நாம் கல்வித்துறையில் வீழ்ந்துள்ளோம் . எனவே விண்ணப்பங்கள் அடிப்படையிலும் தேசிய பாடசாலைகளுக்கான நிதி மத்திய அரசிடம் உள்ளதென்பதன் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இதுவாகும்.
ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் 3.5 சதவீதம் தேசியபாடசாலைகள் ஆகும். வடமாகாணத்தை பொறுத்தவரையில் இது 2 சதவீதமாக காணப்படுகின்றது. எனவே ஏனைய மாகாணங்களுடன் ஓப்பீட்டளவில் நோக்கும் போது 3.5 சதவீமாக மாற்ற வடமாகாணத்தில் 14 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மாற்றப்படவேண்டும்.
எனவே வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளில் எவற்றை தேசிய பாடசாலைகள் ஆக்குவது என்ற தெரிவினை வடமாகாணத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களிடமே விட்டுள்ளேன். அவர்களுடைய மாவட்டத்திலுள்ள எந்த பாடசாலை தேசிய பாடசாலையாக்கப்பட வேண்டும் என்பதை அவர்களே தெரிவுசெய்ய வேண்டும் என்று கேட்டுள்ளேன் இது என்னுடைய விருப்பமல்ல என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
மேலும் , நான் ஆளுநராக இருக்கும் காலத்தில் முக்கியமான விடயமாக வடக்கிற்கு குடிநீரை கொண்டுவருவேன் . இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களில் ஆறும் நதியும் ஓடாத ஒரே ஒரு மாவட்டம் யாழ் மாவட்டம் ஆகும். யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் வாழ்வின் அடிப்படைதேவையான குடிநீர் பிரச்சனை காரணமாக சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன் பெண்களின் கருத்தடைக்கு காரணமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே வடமாகாணத்திற்கான குடிநீர் திட்டத்திற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இதற்கான அனுமதிகள் பெறப்பட்டுள்ளன. நிதி ஓதுக்கீடும் பெறப்பட்டுள்ளது. வடமாராட்சி களப்பு நீரை யாழ்ப்பாணத்திற்குள் கொண்டுவந்து சேமித்து அதை நாம் குடிநீராக பாவிப்பதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்போது இது தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவருடன் இத்திட்டத்தினால் சூழலுக்கு ஏதேனும் பாதிப்பு அமையுமோ என்ற கடைசிக்கட்ட பேச்சுவார்தை நடைபெறுகின்றது.
அத்துடன் அட்வான்ஸ் ஆறுமுகத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். இத்திட்டம் கருத்தளவில் முடிவுபெற்றுவிட்டது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கான 65 சதவீதமான நிதி ஓதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளது. ஆறுமுகத்திட்டம் 1956ஆம் ஆண்டில் வரையப்பட்டது. இதனுள் தவறவிடப்பட்ட சில நுட்பமானவிடயங்கள் சேர்க்கப்பட்டு தற்போது அட்வான்ஸ் ஆறுமுகத்திட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.