179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வீட்டு வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு வசிக்கும் சிறுமி உள்பட சகோதரிகள் மூவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார்.
அத்துடன், இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவரான இளைஞனின் தாயார் தானும் தாக்குதலுக்குள்ளாகியதாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பில் பிறிதொரு வழக்கைத் தாக்கல் செய்யவுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.
உரும்பிராய் தெற்கு யோகபுரத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றது.
சம்பவத்தில் ரெம்சிகா (வயது -23), ரம்யா (வயது-18) மற்றும் யெனுஷா (வயது-16) ஆகிய மூன்று பேருமே தாக்குதலுக்குள்ளாகினர்.
முன்பள்ளியின் மதிலை உடைத்துக் கொண்டு வீட்டின் வளவுக்குள் அத்துமீறிய பெண் ஒருவரும் அவரது மகனும் அங்கு வசிக்கும் இளம் பெண்கள் மூவரைக் கடுமையாகத் தாக்கினர்.தாக்குதலுக்குள்ளானவர்களில் ஒருவர் மயக்கமடைந்து சுயநினைவற்ற நிலைக்குச் சென்றார். தாக்குதலுக்குள்ளானவர்களை அயலவர்கள் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து அம்புலன்ஸ் வண்டி ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் தாக்குதல் நடத்திய இளைஞன் நேற்றிரவு கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரது தாயார் தன்னை யாரோ தாக்கிவிட்டார்கள் எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்றுவருகிறார்.
இளைஞன் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டார்.
“சந்தேகநபர் பெண் பிள்ளைகள் வசிக்கும் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த சிறுமி உள்பட சகோதரிகள் மூவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். அவரது தாயாரும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். கற்கள், பொல்லு மற்றும் தலைக்கவசம் ஆகியவற்றால் பெண் பிள்ளைகளை இவர்கள் இருவரும் தாக்கியுள்ளனர்.
கிராமத்திலுள்ள முன்பள்ளி ஒன்றின் காணி விடயம் தொடர்பிலேயே வீடு புகுந்து அங்கு வசிக்கும் சகோதரிகளை சந்தேகநபரும் தாயாரும் தாக்கியுள்ளனர். சந்தேகநபரின் தாயார் தன்னை யாரோ தாக்கினார்கள் என்று தெரிவித்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீதான தாக்குதல் தொடர்பில் பிறிதொரு வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்படும்” என்று காவல்துறையினர் மன்றுரைத்தனர்.
வழக்கை விசாரித்த நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், சந்தேகநபரை வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
உரும்பிராய் தெற்கு யோகபுரம் பகுதியில் முன்பள்ளி ஒன்றின் பாவனையிலிருந்த அரச காணியை குடும்பம் ஒன்றுக்கு வீட்டுத் திட்டம் வழங்குவதற்காக கோப்பாய் பிரதேச செயலரால் சில ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது. அந்தக் காணியில் தற்போது வீட்டுத் திட்டத்தில் வீடு அமைக்கப்படுகிறது.
தமது பாவனையிலிருந்த காணியை பிரதேச செயலர் தன்னிச்சையான முடிவுடன் அந்தக் குடும்பத்துக்கு வழங்கிவிட்டார் என முன்பள்ளியுடன் தொடர்புடையவர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வந்தனர். அத்துடன் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் கடந்த மாதம் நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் அந்தக் காணியில் வீடு அமைத்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 இளம் பெண்கள் மீதே நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Spread the love