எங்கள் தேசத்தை திரும்பவும் குணமாக்கும் பாரிய பொறுப்பு உங்களிடம் உண்டு என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தின் கிளிநொச்சி வளாகத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள யாழ் மருத்துவக்கண்காட்சியினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (02) கலந்துகொண்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் 40 ஆவது வருட நிறைவினை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஆளுநர் இந்த கண்காட்சியை திறந்துவைப்பதில் நான் பெருமைப்படுகின்றேன் என்று தெரிவித்தார்.
இங்கு ஆளுநர் அவர்கள் மேலும் உரையாற்றுகையில் ,
படித்த வசதியுள்ள மக்கள் இந்த நாட்டை விட்டு சென்றுவிட்டனர். ஒருசிலர் மட்டுமே நம் தேசத்திற்கு சேவை செய்வதற்காக இங்கு வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். நான் வரும்போது மண்ணின் மைந்தன் இல்லை என்று உங்களில் படித்தவர்கள் சிலர் குறிப்பிட்டுவிட்டனர். நான் மண்ணின் மைந்தனாக இருக்கவில்லை என்றாலும் பறவாயில்லை மக்களின் மனதில் இருக்கும் ஒரு மைந்தனாகவே இருக்க விரும்புகின்றேன். ஆகையினாலே உடைந்து போயுள்ள எங்கள் தேசத்தை, உடைக்க வைத்த எங்கள் தேசத்தை திரும்பவும் குணமாக்கும் பாரிய பொறுப்பு உங்களிடம் உண்டு. அந்த பொறுப்பின் பயணத்தில் எத்தனையோ சவால்கள் உண்டு என்று தெரிவித்தார்.
வட மாகாணத்தை பொறுத்தவரையில் 900 வைத்தியர்கள் ,1000 தாதியர்கள் தேவைப்படுகின்றனர். இவை எங்களுக்கு சவாலாக அமைந்துள்ளது என்றும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.