தகவல் அறியும் உரிமைசட்டத்தை ஊடகவியலாளர்கள் பயன்படுத்தி அறிக்கையிடுவது தொடர்பில் யாழ்.ஊடக அமையம் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பு (ஐஎம்எஸ்) இணைந்து நடத்திய பயிற்சி பட்டறையின் புலமைப்பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 05ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
மாலை 4மணிக்கு யாழ்.நகரின் யூஎஸ் விடுதியில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.வடமாகாண பிரதம செயலாளர் இ.பத்திநாதர், ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் யாழ்.மாவட்ட செயலாளர் ந.வேதநாயகன்,யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பு(ஐஎம்எஸ்) பிரதிநிதிகள் ,தகவல் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
வடக்கின் ஜந்து மாவட்டங்களையும் சேர்ந்த முன்னணி ஊடகவியலாளர்கள் பங்கெடுத்திருந்த பயிற்சி கருத்தரங்கின் தொடர்ச்சியாக சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அறிக்கையிடப்பட்ட நூற்றுக்கணக்கான செய்திக்கதைகளில் தெரிவான மூன்று கதைகள் புலமைப்பரிசில்களிற்கு தெரிவாகியுள்ளது.
அந்த கதைகளை அறிக்கையிட்ட ஊடகவியலாளர்கள் இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள தொடர் புலமைப்பரிசில் மாநாட்டில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பத்தினை தட்டிக்கொள்ளவுள்ளனர்.